அத்தியாயம் - 10

அகூதாவின் சபதம்

அறை மூலைக்கு மஞ்சளழகியை அழைத்துச்சென்று மர்மமாக அவளிடம் இளையபல்லவன் ஏதோ சில வார்த்தைகள் சொன்னதும், அந்தச் சில வார்த்தைகளைக் கேட்டவுடன், “வேண்டாம், வேண்டாம் அது மட்டும் வேண்டாம்” என அவள் கதறியதன்றி, தன் சம்பந்த மில்லாமலே இளையபல்லவனை அன்றைய இரவு நிகழ்ச்சிக்கு அழைத்துவிட்டதும் பெரும் விந்தையாக மட்டுமல்ல, கோபத்தையும் அச்சத்தையும் ஒருங்கே விளைவிப்பதாகவுமிருந்தது அக்ஷ்யமுனைக் கோட்டைத் தலைவனுக்கு. ஏதோ பெரும் விபரீத வார்த்தைகளைச் சொல்லி எதற்கும் அஞ்சாத தன் மகளுக்கே சோழர் படைத் தலைவன்’ பெரும் அச்சத்தை விளைவித்து விட்டா னென்பதை மட்டும் உணர்ந்துகொண்ட கோட்டைக் காவலன், அவன் என்ன சொல்லியிருப்பான் என்பதை நினைத்துக் குழம்பி, மலைத்து, தகைத்து, அந்த அறையின் மூலையையே நோக்கிக் கொண்டிருந்தான்.

அறையின் மூலையிலிருந்த நிலை அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனின் துணிவுக்கோ, மஞ்சளழகியின் இடசித்தத்துக்கோ அத்தாட்சியாக அமையாமல் இளைய பல்லவனின் இறுமாப்புக்கே சாட்சி காட்டும் முறையில் அமைந்து கடந்தது. நன்றாக நிமிர்ந்து, மஞ்சளழகியின் இலையும் திகிலால் விளைந்த உடலின் நடுக்கத்தையும் தயை தாட்சண்யமில்லாமல் பார்த்துக்கொண்டும், ட ஹெ இதயத்தில் என்றுமில்லாத குரூரத்தை முகத்தில் காட்டி னாலும் அதில் ஓரளவு நிதானத்தையும் கலந்து கொண்டும் நின்றிருந்தான் இளையபல்லவன். அவனெதிரே அத்தனை திகிலுடன் நின்ற நிலையிலும் அழகு முன்னைவிட அதிகமாகப் பரிமளிக்க ஓய்யாரமாகவேயிருந்த மஞ்சளழகி யின் தலை மட்டும் ஒருபுறம் லேசாக சாய்ந்து கடந்தது. அந்த அறை மூலைக்கு வந்ததும் இளையபல்லவன் பார்த்த பார்வை அவள் கண்கள் முன்பாக அப்பொழுதும் எழுந்து நின்றது. அவன் சொன்ன சொற்கள் மெளனம் நிலவிய அந்த விநாடியிலும் அவள் காதுகளிலே ஒலித்து உணர்ச்சி களில் புகுந்து சித்தத்தில் சம்மட்டிகளைக் கொண்டு அடித்துக் கொண்டேயிருந்தன. சில விநாடிகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சிதான் அதுவென்றாலும், திரும்பத் திரும்ப அது நடப்பது போன்ற பிரமையே ஏற்பட்டது அந்த அழகுச் சிலைக்கு.

அறை மூலைக்கு அழைத்து வந்ததும் இளைய பல்லவன் பார்த்த நிதானமும், ஆழமும் பரிதாபமும் கலந்த பார்வையை அவன் தன்மீது ஒருமுறைக்கு இருமுறையாக வீசிய காட்சியும் அவள் கண்முன் மீண்டும் எழுந்தன. அடுத்தபடி ஏற்பட்ட அவன் உதடுகளின் அசைவையும், அவள் தனது மனக்கண்முன் மீண்டும் கண்டாள். இளைய பல்லவனின் உதடுகள் லேசாகத்தான் அசைந்தன. குரலும் மெதுவாகத்தானிருந்தது. ஆனால் மிகுந்த உறுதியுடன் வெளிவந்தன அவன் சொற்கள். “இந்த அறை மூலைக்கு உங்களை அழைத்து வந்ததற்குக் காரணமிருக்கிறது தேவி!” என்று சாதாரணமாகத்தான் ஆரம்பித்தான் இளைய பல்லவன்,

ஆனால் அந்தக் குரலில் இருந்த ஒரு விபரீதத் தொனி அடுத்து வரும் சம்பாஷணை அத்தனை ரசமாயிருக்காது என்பதை நிரூபிக்கவே, மஞ்சளழகி சற்று சிந்தனையுட னேயே கேட்டாள், “என்ன காரணம் வீரரே?” என்று.

வார்த்தையை அளந்து பேசுவது போல் பேசினான் இளையபல்லவன். “நீங்கள் தந்தையை விடப் புத்திசாலி என்பதுதான் காரணம்.” என்றான் அவன்.

அவன் தன்னைப் பாராட்டுகிறானா அல்லது தன்னைப் பார்த்து நகைக்கிறானா என்பதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதற்கும் கேட்டு வைத்தாள் அவள், “பாராட்டவா என்னை இங்கு அழைத்து வந்தீர்கள்” என்று.

“இல்லை. பாராட்ட அல்ல. உண்மையைச் சொல்ல. உங்கள் தந்தையின் நிதானம் தைரியம் எல்லாம் மேலுக்குத் தான். உண்மையான தைரியமும், நிதானமும், உள்ள ஆபத்தைப் புரிந்துகொள்ளும் சக்தியும் உங்களுக்குத்தான் இருக்கிறது. ஆகவே, உங்களிடம் விஷயத்தைச் சொல்லவே இங்கு அழைத்து வந்தேன்.” என்றான் இளைய பல்லவன்.

“என்ன! எங்களுக்கு ஆபத்தா! வியப்புடன் கேட்டாள் மஞ்சளழகி.

“ஆம்...

“யாரிடமிருந்து ஆபத்து?”

“என்னிடமிருந்து.

“உங்களை என் தந்த சிறை செய்துவிட்டால்? ஏன் கொன்றே விட்டால்?”

“சிறை செய்தாலே ஆபத்து, கொன்றுவிட்டால் ஆபத்து பன்மடங்கு அதிகம். இருப்பதைவிட இறந்தபின் நான் அபாய மனிதன்.

“இறந்தபின் நீங்கள் என்ன செய்ய முடியும்?”

இளையபல்லவன் விழிகள் அவளை நோக்கி நகைத்தன. “இந்த அக்ஷ்யமுனைக் கோட்டையை அழித்து விட முடியும். இங்குள்ள அனைவரையும் கொன்றுவிட முடியும். புல் பூண்டு கூட இல்லாமல் இந்த இடத்தைப் பொசுக்கிவிட முடியும்” என்ற இளையபல்லவனின் குரலில் திடீரென மீண்டும் விபரீதத் தொனி தெரிந்தது.

“பிசாசாக வந்து இத்தனையையும் செய்வீர்களா?” என்று நகைக்க முற்பட்ட மஞ்சளழக, இளைய பல்லவனின் கண்களில் திடீரென்று பளிச்சிட்ட ஒரு பார்வையைக் கண்டு தன்னைச் சட்டென்று அடக்கிக் கொண்டாள். நகைப்பு உதடுகளில் உறைந்தது. முகத்தில் கிலி படர்ந்தது. அந்தக் கிலியை இளையபல்லவனின் அடுத்த சொற்கள் உச்சஸ்தாயிக்குக் கொண்டு போயின.

எங்கிருந்தோ, வெளி உலகத்தில் இருந்து பேசுவது போல் ரகசியமும் ஆழமும் பயங்கரமும் தொனித்த குரலில் பேசினான் இளையபல்லவன், “ஆம். மஞ்சளழகி.” என்று அவன் ஆரம்பித்ததும், ஏதோ சொல்ல முற்பட்ட அந்தப் பெண்ணை, “தடுக்காதீர்கள். உங்கள் தங்கநிற எழில் என்னை பிரமிக்க வைத்திருக்கிறது. உங்களை இனி நான் மஞ்சளழகி என்றுதான் அழைப்பேன். ஆனால் இத்தனை பிரமிக்கத்தக்க அழகு என் அழிவினால் சீரழிந்துவிடுமே என்ற ஏக்கமே என்னை அஆட்கொண்டிருக்கிறது. தற்சமயம்,” என்ற இளையபல்லவன் மேலும் அதே விபராீதத் தொனியில் பேசினான் “ஆம், மஞ்சளழக, உங்கள் அழகு குலைந்துவிடும். அது மட்டுமல்ல, உங்களைப்போல் இந்தக் கோட்டையிலுள்ள பல பெண்கள் சீரழிக்கப்படுவார்கள். இங்குள்ள கொள்ளைக்காரர்களும், அதோ இன்று நவரத்தினங்கள் இழைத்த ஆசனத்தில் உட்கார்ந்திருக்கும் உங்கள் தந்தையும் கொசுக்களைப்போல் நசுக்கப்படு வார்கள். இந்தக் கோட்டையும் கொத்தளங்களும் கொளுத்தப்படும். இத்தனையும் என் ஒருவன் மரணத்தால் ஏற்படும். என் மரணம் இந்த நகரத்தையே மாய்த்துவிடும். சந்தேகம் வேண்டாம். பிசாசாக வந்து இத்தனையும் சாதிப்பேனா என்றல்லவா கேட்டீர்கள்? ஆம், பிசாசாக வருவேன். நாசம் செய்ய அல்ல. நாசத்தை வேடிக்கை பார்க்க. ஆனால் இதை நாசம் செய்ய வருவது என்னை விடப் பெரும் பிசாசு. உயிருள்ள ஒரு பிசாசு வரும் இங்கே. அது வருவதற்கு ஏற்பாடு செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். என் முன்னேற்பாட்டைப் பற்றி என்ன நினைக் கறீர்கள்?” என்று பேசிக்கொண்டு போன இளைய பல்லவன் சிறிது பேச்சை நிறுத்தி, மஞ்சளழகியைக் கூர்ந்து நோக்கினான்.

அவள் பிரமை பிடித்து ஏதும் புரியாமல் குழம்பி நின்றிருந்தாள். இவன் வீண் பெருமையடித்துக்கொள்ளும் கையாலாகாதவனா? செய்கையால் முடியாததைச் சொற்களைக் கொண்டு சரிக்கட்டி நம்மை அச்சுறுத்தப் பார்க்கிறானா என்ற சந்தேகம் அவள் சித்தத்தில் ஒரு விநாடிதான் எழுந்தது. அடுத்த விநாடி அந்தச் சந்தேகம் மறைந்தது. மறையவைத்தது இளையபல்லவனின் குரூரப் பார்வையொன்று. அவன் இதழ்களில் அந்தத் தருணத்தில் தவழ்ந்த இளநகையிலும், உதடுகள் உதிர்த்த சொற்களிலும் அந்தக் குரூரம் இருந்தது. இளநகையைத் தொடர்ந்து அவன் உதடுகளைத் திறந்து சொன்னான், “மஞ்சளழகி! நான் சொனவை வீண் வார்த்தைகளல்ல. நான் செய்துள்ள முன்னேற்பாடும் பொய்யல்ல. இத்தனை நேரம் நான் குறிப்பிட்ட நாசம் நடந்தே தீரும். ஏன் தெரியுமா?” என்று.

“ஏன்?” தனமாக எழுந்தது மஞ்சளழகியின் கேள்வி.

“வரப்போவது யார் தெரியுமா?”

“தெரியும்.

பிசாசு.

“பிசாசல்ல.

“ஹும்!”

“பிசாசை விடக் கொடியது!”

“பிசாசை விடக் கொடியதா ?”

“ஆம். அகூதா!”

எத்தனை பெரிய வெடியை அவன் எடுத்து வீசியிருந் தாலும், அதே விநாடியில் அந்த அறையில் ஆயிரம் பிசாசுகள் தாண்டவமாடியிருந்தாலும் அளிக்க முடியாத அதிர்ச்சியை இளையபல்லவன் பதில் அளித்தது அவளுக்கு. அவள் ஏதோ பேச வாய் திறந்தாள். வாயைத் துறந்தாளே தவிர சொற்கள் வெளிவரவில்லை. வாய் அடைத்து நின்று விட்டது.

அவள் உணர்ச்சி வெள்ளத்தையும் உள்ளத்தே துளிர்த்து களைத்துவிட்ட கிலியையும் இன்னும் அதிகமாக வளர்த்தன இளையபல்லவனின் அடுத்த சொற்கள். “மஞ்சளழகி! இந்தக் கோட்டைக்கு வருவதை அகூதாவே தடுத்தார். நான்தான் கேட்கவில்லை. கலிங்கத்திலிருந்து கடாரம் செல்லும் மரக்கலங்கள் இடையே புகுந்து தடுக்க இதைவிட நல்ல இடமில்லையென்ற காரணத்தால் நான் இந்த இடத்துக்கு வருவதாகத் திட்டமிட்டேன். பிடி வாதமும் பிடித்தேன். அதற்குமேல் அகூதா ஏதும் பேசவில்லை. ‘என்ன உதவி உங்களுக்குத் தேவை?” என்று மட்டும் கேட்டார். எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், இக்கோட்டையின் மீது பழி வாங்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டேன். அகூதாவின் கண்களில் புதிய ஒளி ஒன்று பிறந்தது. அப்பொழுது நாங்கள் இருவரும் நடுக் கடலில் அவருடைய மரக்கலத்தின் தளத்தில் நின்று கொண்டிருந்ததோம். வானமும் மேக மூட்டத்தால் கறுத்துக் கிடந்தது. ஒரு கையை முஷ்டியாகப் பிடித்து உயரத் தூக்கி வானத்தை நோக்கிச் சபதம் செய்தார் அகூதா, “இன்னும் மூன்று வார காலத்தில் நான் அக்ஷ்யமுனை வருகிறேன் உங்களைச் சந்திக்க. நீங்கள் அங்கு இருந்தால் அக்ஷயமுனை பிழைக்கும். இல்லையேல் அக்ஷ்யமுனை இல்லை. தரையோடு தரையாக்கி விடுகிறேன் அந்தக் கோட்டையை. ஆடவர், பெண்டிர் அனைவரையும் என் வீரர்களிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்று கூறிப் பேய்ச் சிரிப்பு சிரித்தார் அவர். எதற்கும் அஞ்சாத எனக்கே அந்தச் சிரிப்பு அச்சம் தந்தது. இன்று நினைத்தாலும் என் உள்ளம் நடுங்குகிறது. ஆகவே தேவி! திட்டமாய்த் தெரிந்து கொள்ளுங்கள். என் உடலில் ஊசி முனையளவு தொடப் பட்டாலும் இன்னும் இரண்டே வாரங்களில் அக்ஷய மூனை அழிந்துவிடும். நான் அகூதாவை விட்டுக் கிளம்பி ஒரு வாரம் ஆகறது” என்றான் இளையபல்லவன்.

“ஆம். ஆம்” என்றாள் மஞ்சளழக நடுக்கத்துடன்.

“அகூதாவின் கடற்படை இன்னும் பதினைந்தே நாள்களில் இந்தத் துறைமுகத்தில் பிரவேசிக்கும் “. என்று மற்றுமொருமுறை வலியுறுத்திச் சொன்னான் இளைய பல்லவன்.

“ஆம். ஆம்.

“அகூதாவின் வீரர்கள் இறங்குவார்கள். தடுக்க நானில்லாவிட்டால் அடுத்து நடப்பதை...உங்கள் கயை...தங்கத்தைப் பழிக்கும் இந்த அழகுத் தேகத்தின் நிலையை...நான் சொல்ல வேண்டுமா ?...

“இந்தச் சமயத்தில்தான், “வேண்டாம், வேண்டாம்,” என்று கதறினாள் மஞ்சளழகி. இதை அடுத்துத்தான் இளையபல்லவனை அன்றைய இரவு நிகழ்ச்சிக்கு வரவும் வேண்டினாள்.

இந்தச் சம்பாஷணையும் இளையபல்லவன் முகமும் இரும்பத் திரும்பச் சித்தத்தில் வலம் வந்ததால் பிரமை பிடித்து நின்றாள் மஞ்சளழகி. அவள் எத்தனை நேரம் நின்றிருந்தாளோ அவளுக்கே தெரியாது. இளைய பல்லவன் மெள்ளத் தன் கையைப் பிடித்த பின்புதான் அவளுக்குச் சுரணை வந்தது. “பயப்பட வேண்டாம். நான்தானிருக்கிறேனே!” என்று அவள் செவிகளில் கூறியது செவி மூலம் உள்ளத்துக்கும் அமுதம் வார்ப்பதாகத் தோன்றியது அவளுக்கு.

அதனால் மீண்டும் உணர்ச்சிகள் மெல்ல மெல்ல அவள் வசப்படலாயின. கடைசியாகச் சொன்ன வார்த்தை களை அவன் அன்பொமுகச் சொன்னான். உண்மையில் இனிமை தரும் இதயத்தைப் பெற்றிருந்த இளையபல்லவன் அவசியமானால் அதே இதயத்தை இரும்பாகவும் ஆக்கிக் கொள்ள வல்லவன் என்பதை உணர்ந்து கொண்டாளாகை யால் அவன் இழுத்த இழுப்புக்கு இசையலானாள். அவளை மெல்லக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு மீண்டும் கோட்டைத் தலைவனிருந்த இடத்துக்குச் சென்ற இளையபல்லவன், அவளை அவள் ஆசனத்திலமர்த்தி விட்டுத் தானும் எதிரே உட்கார்ந்தான்.

கோட்டைத் தலைவனின் உணர்ச்சிகள் விவரணத் துக்கு உட்பட்டதாயில்லை. ஏதேதோ எண்ணங்கள் அவன் சிந்தனையில் எழுந்து உலாவிக் கொண்டிருந்தன. அந்தக் குழப்பத்தின் விளைவாக, அன்னியனொருவன் தன் மகளைக் கையைப் பிடித்து இழுத்து வந்ததையும் அவன் கவனிக்காமல், இளையபல்லவன் எதிரேயிருந்த ஆசனத் தில் அமர்ந்ததும், “இவளிடம் என்ன சொன்னீர்கள்?” என்று குழப்பத்துடனேயே கேட்டான்.

“என் முன்னேற்பாட்டைச் சொன்னேன்.” என்றான் இளையபல்லவன்.

“அதைக் கேட்டு ஏன் கதறினாள்?”

“முன்னேற்பாட்டின் விளைவை எண்ணி.

“என்ன விளைவு?”

“மகளையே கேளுங்கள்.

“கோட்டைத்தலைவன் மகளை நோக்கித் தன் கண் களைத் திருப்பினான். அவள் கண்கள் அவன் கண்களைத் தைரியமாகச் சந்தித்தன. ஆனால் அந்தத் தைரியம் அவள் வார்த்தைகளில் தொனிக்கவில்லை. அச்சமும் தைரியமும் மாறி மாறி ஒலித்த சொற்களில் நிறுத்தி நிறுத்தி, அவள் இளையபல்லவன் சொன்னதை விவரித்தாள். அந்த விவரணத்தைக் கேட்டதும், இடிந்து பல விநாடிகள் ஆசனத்தில் சாய்ந்துவிட்டான் கோட்டைத் தலைவன். அகூதா கொள்ளைக்காரனாயிருந்தாலும் சொன்ன சொல்லை நிறைவேற்றத் தவறாதவன் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. இளையபல்லவன் மீது கையை வைத்தால் அகூதா வாங்கக்கூடிய, பழியின் பயங்கரத்தை யும் அவன் உணர்ந்திருந்தான். அத்தகைய பயங்கரத்தைப் பின்னணிப் பாதுகாப்பாகக் கொண்டு, தன் கோட்டைக் குள் நுழைந்து, தன் அந்தரங்க அறையில் தன்னையே மிரட்டும் இளையபல்லவனின் துணிவை எண்ணி ஒரு கணம் வியந்தான். மறுகணம் பயந்தான். அவன் பயத்துக்குக் காரணமும் இருந்தது. தன் கதி இருதலைக் கொள்ளி என்பதை அறிந்து தவித்தான். அந்தத் தவிப்பை வெளிக்காட்டிய கண்களை மகள்மீது. திருப்பிய கோட்டைத் தலைவன், “மகளே! இன்று நாம் நல்ல முகத்தில் விழிக்கவில்லை” என்றான்.

“ஏன்?” என்று அவள் கேட்டாள்.

“இவரை நாம் தொடவும் முடியாது. முன்னேற்பாடு அத்தனை கடுமையானது” என்று இளையபல்லவனைச் சுட்டிக் காட்டினான்.

மஞ்சளழகி பதில் சொல்லவில்லை. ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் ஆட்டினாள்.

“இவரை எப்படியும் நாம் காக்க வேண்டும்” என்றான் கோட்டைத் தலைவன்.

“ஆம், ஆம்.” பயத்துடன் பதில் சொன்னாள் மஞ்சளழகி.

“இரவு நிகழ்ச்சிக்கும் இவரை அழைத்துவிட்டாய்...

“ஆம்.

“இதை அடுத்து, கோட்டைத் தலைவன் கேட்டான், “இரவு நிகழ்ச்சிக்கு அந்த நால்வரும் வருவார்களே, புரியவில்லையா உனக்கு?” என்று.

மஞ்சளழக புரிந்துகொண்டாள். அச்சம் துளிர்த்த கண்களைத் தந்தை மீது நாட்டினாள். “ஆம், புரிகிறது தந்தையே! அந்த நால்வரும் வரத்தான் வருவார்கள். இவரை அழைத்தாலும் ஆபத்து, அழைக்காவிட்டாலும் ஆபத்து. ஐயோ, இதென்ன சங்கடம்” என்று குரல் தழுதழுக்கக் கூறினாள் அவள். அத்துடன் தனது இரு கரங்களையும் குவித்து இளையபல்லவனை வணங்கு, “வேண்டாம், இரவு நிகழ்ச்சிக்கு மட்டும் நீங்கள் வர வேண்டாம்.” என்று மன்றாடினாள்.

இம்முறை குழம்பியவன் இளையபல்லவன். “யார் அந்த நால்வர்? அவர்கள் வந்தாலென்ன?” என்று குழம்பினான். அதை மெள்ள விவரிக்கத் தொடங்கினாள் மஞ்சளழகி.