ஆத்தியாயம் – 14
புது நகரம்
மாலை வேளையில் மஞ்சள் வெய்யிலில் கடற்கரை மணற்பகுதியில் கண்ணுக்கெதிரே விரிந்த அந்த அற்புதக் காட்சி இளையபல்லவன் கண்களை மட்டுமின்றி மனத்தை யும் பறித்து மயக்கி அவனுக்குப் பிரமை பிடிக்கும்படி செய்துவிட்டதால், நீண்ட நேரம் மரக்கலத்தின் தளத்தின் மேலேயே நின்றுகொண்டிருந்தான். உச்சிவேளை தாண்டி இரண்டு நாழிகைகளுக்குப் பிறகே தான் உறங்கச் சென்றதை நினைத்துப் பார்த்த சோழர் படைத் தலை வனுக்கு, தான் உறங்கி எழுந்த சொற்ப காலத்திற்குள் அத்தனை பெரிய அற்புதம் கடற்கரையில் எப்படி விளைய முடியும் என்பது மட்டும் விளங்கவில்லையாதலால் அவன் கண்களிலும் முகத்திலும் விவரிக்க இயலாத வியப்பே மிதமிஞ்சி நின்றது. உச்சிவேளை அகன்ற இரண்டு நாழிகைகளுக்கும் கதிரவன் மலைவாயில் விழ முற்பட்டு மஞ்சள் வெய்யில் எங்கும் வீசத் துவங்குவதற்கும் இடையே இருந்தது ஒரு ஜாமம் சொச்சமே என்பதைக் கணக்குப் போட்ட இளையபல்லவன், கடற்கரையில் நிகழ்ந்தது உண்மையில் இந்திர ஜாலம்தான் என்ற முடிவுக்கு வந்தான். தூரத்தே அக்ஷ்யமூனையின் பெரும் கோட்டை மட்டும் அவன் கண்களுக்குப் புலனாகாதிருந்தால் தான் இருப்பது அக்ஷயமுனையல்ல என்ற முடிவுக்கே அவன் வந்திருப்பான்.
அப்படிப் பிரமிக்கத்தக்கவண்ணம், பார்த்தா லொழிய நம்பமுடியாத, அற்புத நகரமொன்று கடற்கரை மணலில் எழுந்திருந்தது. கடற்கரை மணலில் கோட்டைச் சுவரை அடுத்திருந்த குடிசைகளை அடியோடு மறைத்துப் பெரும் மண்டபமொன்றும் மற்றும் பல தூண்களும் ஆங்காங்கு எழுந்து நின்று பழையகால யவன நகரங்களின் பிரவேச ஸ்தூபிகளைப் போல் காட்சியளித்தன. நேராகக் கடலை நோக்கி அமையாமல் மேற்கு நோக்க பகிட் பாரிஸான் மலைத் தொடரைப் பார்த்தவண்ணம் அமைந்திருந்த பெரு மண்டபத்தின் தூண்கள் ஆகாயத்தை அளாவி நின்றன. கீழேயும் பலகைகளால் தைக்கப்பட்ட மேடை இருந்தது. ஆனால் மேலே எந்த மறைவும் இல்லை. ஆகாயமே கூரையாக அமைந்திருந்த அந்தப் பெரும் மண்டபம் மஞ்சள் வெய்யிலில் ஜாஜ்வல்யமாகக் காட்சியளித்தது. அதன் வலுவான தூண்களில் விதவிதமான வண்ணச் சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்தன. மண்டபத்தின் பக்கப் பகுதிகள் இரண்டை மட்டும் பலவித ஓவியங்களை உடைய திரைச்சீலைகள் மறைத்திருந்தன. அந்தப் பெரும் திரைச் சலைகள் கடற்காற்றில் படபடத்து எழுந்து எழுந்து தாழ்ந்து இளையபல்லவனை, ‘வா! வா!’ என்று அழைத்தன.
அந்த மண்டபத்திற்குப் பத்தடி தூரம் தள்ளித் தள்ளி நானாவிதமான ஸ்தம்பங்கள் ஆங்காங்கு எழுந்துகொண் டிருந்தன. மயன் சிருஷ்டித்தது போல் இடீரென ஒரு நகரமே அந்தக் கடற்கரையில் உதயமாகி விட்டதையும் ஸ்தம்பங் களின் வேலை அதி துரிதமாக நடப்பதையும் பார்த்த இளையபல்லவன் அக்ஷ்யமுனைக் கோட்டைத் தொழி லாளிகளின் சுறுசுறுப்பை எண்ணிப் பெரிதும் வியந்தான். தச்சர்களும், கொல்லர்களும் செய்துகொண்டிருந்த வேலையால் எழுந்த உளி, ரம்பம், வாள் இவற்றின் சத்தம் எங்கும் பரவி காதைப் பிளந்து கொண்டிருந்தது. ௨ளருக் குள்ளிருந்து கோட்டை வாயில் வழியாக வண்டிகளில் இழுக்கப்பட்டு வந்துகொண்டிருந்த பெரும் மரத் தூண்கள் கடற்கரையில் உருட்டப்பட்டதன் விளைவாக ஒன்றுடன் ஒன்று மோதிய சத்தம் வேறு, தச்சர் கொல்லர் ஆயுத சத்தங்களுட்ன் கலந்துகொண்டது.
விழாவுக்கு அத்தகைய நகரத்தையும், மண்டபத்தை யும் நிறுவத் தனித் தனித் தூண்களையும், பலகைகளையும் அக்ஷயமுனையின் அதிகாரிகள் நிரந்தரமாகச் செய்து வைத்திருக்கிறார்களென்பதை அங்கு நடந்த வேலையி லிருந்தும் வண்டிகளில் வந்திறங்கிய மரத்தண்டுகளி லிருந்தும் இளையபல்லவன் புரிந்துகொண்டாலும், திறமையான தொழிலாளிகள் இல்லாவிட்டால் அந்தத் தயாரிப்புப் பகுதிகளை ஒன்று சேர்த்துப் பிணைப்பது அத்தனை துரிதத்தில் முடியாது என்பதையும் தீர்மா னித்துக் கொண்டான். அந்த நிர்மாண வேலை அத்தனை துரிதமாகவும், திறமையாகவும் நடந்ததில் அவனுக்கு ஒரு திருப்தியும் இருந்தது. இத்தகைய பணியாட்களைக் கொண்டு தனது மரக்கலத்தைப் பழுதுபார்ப்பதும், அபிவிருத்தி செய்வதும் மிகவும் சுலபம் என்ற நினைப்பால் அவன் மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தது. தச்சர்கள் கடற்கரையில் அடிக்கும் ஒவ்வோர் அணியின் சத்தமும் அந்த ஆணி தனது மரக்கலத்திலேயே பாய்ந்து அதை உறுதிப்படுத்துவது போன்ற பிரமையை ஏற்படுத்தவே இளையபல்லவன், எதிர் நோக்கியிருந்த ஆபத்தைக்கூட மறந்து, தான் அக்ஷ்யமுனை வந்தது சரியான காரியம் என்று தனக்குள் சொல்லிக்கொண்டு குதூகலமும் அடைந்தான்.
இப்படிப் பலவிதமாக எண்ணமிட்டுக் கொண்டும் எதிரே எழுந்த புது நகரத்தைப் பார்த்து வியப்பெய்தியும் தளத்தில் நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்த இளைய பல்லவன் ஒரு நாழிகை கழித்துத் தனது அறைக்குச் சென்றான்.
சென்றவன் பஞ்சணையில் சாய்ந்தபடியே அன்றைய இரவு நடன நிகழ்ச்சியைப் பற்றியும், அங்கு ஏற்படக்கூடிய அபத்துகளைப் பற்றியும் எண்ணத் துவங்கினான். பலவர்மனும், மஞ்சளழகயும் குறிப்பிட்ட அந்த நால்வர்” வந்தால் அவர்களைச் சமாளிக்கும் வழியைப் பற்றியும் யோசித்தான். கடைசியாக என்ன செய்ய வேண்டுமென்பதைப்பற்றி ஒரு முடிவுக்கும் வந்த சோழர் படைத்தலைவன் அதற்குமேல் கவலை ஏதுமின்றிக் கரைக்குப் போவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கலானான்.
இரவு மெள்ள மெள்ள அந்தக் கடற்கரையில் தலை நீட்டிக் கொண்டிருந்தது. கதிரவனின் சாரதியான அருணன் தன் செங்கிரணங்களை இழுத்துக்கொண்டு விட்டானா என்று முழுமதியும் வானத்தில் எட்டிப் பார்க்கத் துவங்கினான்! அந்த இன்பக் காட்சியைக் கண்ட இளையபல்லவன், “ஆகா, எத்தனை இன்பமான காட்சி! இதிலா கொலையும் கலவரமும் நடக்க வேண்டும்!” என்று தன்னைத்தானே வருத்தத்துடன் கேட்டுக்கொண்டான். மாலை வேளையில் மஞ்சள் வெய்யிலில் மனோகரமாகக் காட்சி அளித்த அந்தப் புது நகரம், இரவில் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. எங்கும் பெரும் மர ஸ்தூபிகளின் மீது ஈட்டிகளில் சொருகப்பட்ட பந்தங்கள் பெரிதாக எரிந்தன. பலவகை விளக்குகளும் பல தூண்களும் பிணைக்கப் பட்டுக் காற்றில் சுடர்கள் படபடத்தன. இவற்றுக்கெல்லாம் சற்றுத் தள்ளி மேற்கு நோக்கி இருந்த நடன மண்டபம் கண்ணைப் பறித்துக்கொண்டிருந்தது. அதன் பின்னால் கிழக்கில் எழுந்த முழுமதி மண்டபத்துக்குச் சிறந்த பின்னணியையும் கடற்கரைக்குப் பெரும் சோபையையும் அளித்துக் கொண்டிருந்தது. மண்டபத்துக்கு மேற்புறக் கூரையும் பின்புறத் திரையும் அமைக்காத காரணத்தை இளையபல்லவன் நன்றாகப் புரிந்துகொண்டான். நடனத் தன் சிறப்பை, சூழ்நிலையின் அமைப்பை ரஸிகனான அவனால் அப்பொழுதே புரிந்துகொள்ள முடிந்தது.
இரவு விளக்குகள் எரியத் தொடங்கிய இரண்டு நாழிகைகளுக்கெல்லாம் கோட்டைக்குள்ளிருந்து மக்கள் சாரி சாரியாக வரத் தொடங்கினார்கள். மெள்ள மெள்ள கூட்டமும் கூச்சலும் அந்தக் கடற்கரையில் பெருகலாயிற்று. கூட்டம் சற்று வலுத்ததும் ஆயுதந் தாங்கிய வீரர்கள் கோட்டைக்குள்ளிருந்து வந்து கூட்டத்தைச் சக்கர வட்டமாக உட்கார வைத்துச் சுற்றிலும் வளைந்து நின்று காவல் புரியலாயினர். இந்த ஏற்பாடுகள் ஒரு நிதானத்துக்கு வருவதற்கும், மண்டபத் தூண்களின் மறைவிலிருந்த குடிசைகளிலிருந்த கொள்ளைக் கூட்டத்தார் பெரும் கூச்சலுடன் அந்த நடன அரங்க வளையத்துக்குள் நுழைவதற்கும் சரியாயிருந்தது. வீரர்கள் எத்தனையோ கட்டுப்பாடு செய்தும் கூச்சலும் குழப்பமும் கடற்கரையில் மண்டியே கிடந்தது.
அமீரும், கண்ஷியத்தேவனும், கூலவாணிகனும் அக்கம் பக்கத்தில் நிற்க, தளத்தின்மீது நின்றவண்ணமே கடற்கரையில் குழுமிக் கொண்டிருந்த பெரும் கூட்டத்தைக் கவனித்த இளையபல்லவன், நடனவிழாவில் மக்கள் பெரும் பைத்தியம் பிடித்தவர்களாயிருக்க வேண்டுமென்று தீர்மானித்தான். அத்தனை மக்களை மயக்கவும், தன் பிடியில் வைத்திருக்கவும் அக்ஷயமுனைக் காவலன் வகுத்துள்ள பல ஏற்பாடுகளில் நடனவிழா முக்கியமான தாக இருக்கவேண்டுமென்ற முடிவுக்கும் வந்தான் இளைய பல்லவன். இத்தனை பேரையும் பிரமிக்க வைக்கும் படியான எத்தகைய நடனத்தை மஞ்சளழகி ஆடப் போகிறாளென்பதையும் அவன் எண்ணிப் பார்த்தான். சில விநாடிகள் மனக் கண்ணில் அவள் சுழன்றாடும் காட்சி யையும் நடன மண்டபத்தில் அவளுக்கிருக்கக்கூடிய அபந இயற்கை வசதிகளையும் கண்டான். ‘எவனையும் மயக்கக் கூடியதாகத்தான் நடனமிருக்கும். சந்தேகமில்லை’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளவும் செய்தான்.
அவன் இத்தகைய யோசனைகளில் ஈடுபட்டிருந்த இரண்டொரு தநாழிகைகளுக்குள் கடற்கரை ஜன சமுத்திர மாகக் காட்சியளித்தது. கொள்ளைக்காரர்களும் அவர்கள் மாதர்களும் தானளித்த விதவிதமான உடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து சகல கட்டுப்பாடுகளையும் மீறிக் குறுக்கும் நெடுக்கும் நடப்பதையும், அவர்களை வீரர்கள் மடக்க முயன்று முடியாமல் தவிப்பதையும் கண்ட இளையபல்லவன், தான் கரை செல்லவேண்டிய சமயம் நெருங்கவிட்டனெறு தீர்மானித்தான். ஆகவே பக்கத்தில் நின்ற அமீரை நோக்ஒத் திரும்பி, “அமீர்! நீயும் கண்டியத் தேவரும் சேந்தனும் அடுத்தபடி. உள்ள ஆறு உபதலைவர் களும் சிறந்த உடைகளை அணிந்து கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சிக்கு வரும் கோட்டைத் தலைவனுக்கும், மற்றப் பிரமுகர்களுக்கும் உங்கள் உடைகளும் அணிகளும் எந்த விதத்திலும் குறைந்ததாயிருக்கக் கூடாது. அமீர்! உனது குறுவாள்களில் நாலைந்து எடுத்துக் கச்சையில் செருகக்கொள். அவற்றுக்குத் தேவையிருக்காதென்று தினக்கிறேன். எதற்கும் கையில் இருப்பது நல்லது.” என்று உத்தரவிட்டான். பிறகு சேந்தனை நோக்கு, “சேந்தா! நமது பொக்கிஷத்தில் இருப்பவற்றுள் சிறந்த மாணிக்க மாலை ஒன்றை எடுத்து என்னிடம் கொடு. மற்றும் ஏதாவது மாலைகள் இருந்தால் நாலைந்தைத் தனியாகக் கொடு.” என்று கூறிவிட்டு நடனக் காட்சிக்குப் புறப்படத் தன்னைச் சித்தம் செய்துகொள்ள அறையை நோக்கிச் சென்றான்.
அறைக்குள் நுழைந்ததும் அங்கு தயாராயிருந்த மாலுமியொருவன், ஏந்தி நின்ற கண்ணத்திலிருந்த பன்னீர் கலந்த குளிர் நீரில், முகம் கழுவி, நுதலில் பிறைச் சந்திரச் சாந்தணிந்து, பெட்டியைத் திறந்து மிகவும் படாடோப மாகக் காட்சியளித்த உடைகளையும் நவரத்தினப் பிடி யுள்ள குறுவாள் ஒன்றையும் எடுத்தான். சாதாரணமாகப் படாடோபத்தில் விருப்பமில்லாத கருணாகர பல்லவன் அன்று அவசியத்தை முன்னிட்டு மிகவும் படாடோபமான உடைகளையும் அணிந்தான். காலில் சீனத்துச் சராயும் மேலே சரிகையும் பொன்னும் மணியும் வைத்துத் தைத்த அங்கியும் இடையில் வைரங்கள் பதித்த கச்சையையும் அணிந்தான். அதில் நவரத்தினப் பிடியையுடைய குறுவாளைச் செருகிக் கொண்டான். ஏற்கெனவே அழகும் வீரமும் நிரம்பிய, கருணாகர பல்லவனின் வதனம் இந்தப் பெரும் அலங்காரத்தாலும், பிறைச்சந்திரனாலும், மெல்லத் தொங்கிய முடியிழைகளாலும், கன்னத்தில் நன்றாகப் பளபளத்த வெட்டுத் தழும்பாலும், மிகக் கப்பீரத்துடனும் இணையற்ற அணவத்துடனும் காட்சியளித்தது. அத்தகைய தோற்றத்துடன் அறையை விட்டு வெளிப்போந்த இளைய பல்லவனைக் கண்டு அமீர் பிரமித்தான்.
அவன் பிரமிப்பைக் கண்டு இளநகை கொண்ட இளையபல்லவன், “அமீர், நாம் செல்லுமிடம் படாடோ பத்தின் இருப்பிடம். நமது உயர்வை நாம் பலவிதத்திலும் இங்குள்ளவர்களுக்குக்’காட்ட வேண்டும். இந்தக் கோட்டை வாசிகளும் பயங்கரப் பூர்வகுடிகளும் நமது தோற்றத்தைப் பார்த்தே அஞ்ச வேண்டும்” என்று கூறி விட்டு அமீரையும் மற்றவர்களையும் உற்று நோக்கினான். அந்தப் பார்வையில் பெரிதும் சங்கடப்பட்டான் அமீர். அமீரும் பெரும் சரிகை உடைகளை அணிந்திருந்தாலும் அவனுடைய ராட்சதத் தோற்றத்துக்கு அவை சற்றும் பொருத்தமில்லாதிருந்ததோடு கண்ணியத்துக்குப் பதில் ஒரு கொடூரத்தையே அளித்திருந்தன. நல்ல உயரமுள்ள கண்டியத்தேவன் மட்டும் சிறந்த உடைகளில், குறுநில மன்னன்போல் காட்சியளித்தான். எந்தச் சூழ்நிலையிலும் தன் தமிழகத்துத் தொழிற்பணியை விட விருப்பமில்லாத கூலவாணிகன் தலையில் சரிகை முண்டாசுடனும் உடலங்கியுடனும் இடையில் வரிந்து கட்டப்பட்ட துணியுடனும் விளங்கினான். மற்ற உபதலைவர்கள் ஆறு பேரும் மாலுமிகளின் உடைகளையே அணிந்து போர்க் கோலத்தில் இருந்தார்கள்.
இத்தகைய பரிவாரத்துடன், சேனாதுபதிகளுடன் வரும் சக்கரவர்த்தயைப்போல் கடற்கரைக்குச் செல்லப் படகில் இறங்கினான் இளையபல்லவன். மற்றவர்களும் படகில் உட்கார்ந்ததும் சில நிமிடங்களில் கரையை அடைந்த படகிலிருந்து தரையில் குதித்த இளையபல்லவன் எதிரேயிருந்த பெரும் கூட்டத்தை நோக்கினான். அவன் உடை அணிந்து படகில் கரை வந்து சேரப் பிடித்த ஒரு நாழிகைக்குள் அந்தப் பெரும் கூட்டத்தில் ஒரளவு அமைதி ஏற்பட்டு விட்டதையும், நடனக் காட்சியைப் பார்க்க வந்தவர்கள் சக்கர வட்டமாக உட்கார்ந்து விட்டதையும், யாரும் அடக்க முடியாத அந்த நானாவித மக்களின் கூட்டம் நடனத்தை எதிர்பார்த்து மண்டபத்தை நோக்கிக் கொண்டிருந்ததையும் கண்ட இளையபல்லவன் கலையின் அபார சக்தியை நினைத்து வியந்தான்.
அந்த விநாடியில் கோட்டைக்குள்ளிருந்த தோல் கருவிகள் டமடமவெனச் சப்தித்தன. தாரைகள் பலமாக முழங்கின. கோட்டைக்கதவு திடீரெனத் திறக்கப்பட்டுப் புரவிக் கூட்டமொன்று மண்டபத்தை நோக்கி வந்தது. அந்தப் புரவி வீரர் கூட்டத்தின் நடுமத்தியில் சிவப்புப் புரவியொன்றில் பலவர்மனும் நல்ல வெள்ளைப் புரவியில் மஞ்சளழகியும், பவனி வரும் அரசனைப் போலவும் ராணியைப் போலவும் வருவதை இளையபல்லவன் கண்டான். அந்த இருவரும் அணிந்திருந்த கிரீடங்கள், சுற்றிலும் அடிமைகள் பிடித்த பந்தங்களின் ஓளியில் பளபளத்தன. அந்த கரீடங்களின் ஒளியைவிடச் சிறந்த ஒளியைப் பெற்றிருந்த மஞ்சளழகியின் முகம் வசகரத்தின் எல்லையை எட்டி, காண்பவர் யாரும் விநாடியில் மயங்கக்கூடிய அழகைப் பெற்றிருந்தது.
அந்த இருவரையும் கண்டதும் கடற்கரையில் குழுமியிருந்தவர் பெரும் கூச்சலிட்டனர். பதிலுக்குப் பலவார்மன் தலையை மட்டும் அசைத்தான். அவன் முகத்தில் மிதமிஞ்சிய கவலை குடிகொண்டிருந்தது. மஞ்சளழகியின் முகத்தில் கவலை ஏதுமில்லை. அவள் மக்களை நோக்கப் புன்னகை புரிந்தாள். பிறகு கிரீடத்தில் புனைந்திருந்த பட்டுத்துணியை எடுத்துக் காற்றில் விசிறினாள். அதைக் கண்ட கூட்டம் வெறி பிடித்துப் பலவிதமாகக் கூச்சலிட்டது. அந்தக் கூச்சலையும் மக்களின் வெறியையும் கண்ட இளையபல்லவன் பலவர்மனுக்கும், மஞ்சளழகிக்கும் அந்த மக்கள் மேல் எத்தனை பலத்த பிடிப்பு இருக்கிறதென்பதையும் உணர்ந்து கொண்டதன்றி, பலவர்மனின் செல்வாக்கை அழிக்க வேண்டுமென்றால் தனது முழுத்திறனும், முழுத்தந்திரமும் உபயோகப்படுத்தப் பட வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டான்.
அடுத்த சில விநாடிகளில் பலவர்மனும், மஞ்சளழகி யும் நடன மண்டபத்தை நெருங்கிப் புரவிகளை விட்டு இறங்கினர். பலவர்மனைக் கண்டதும் கூட்டம் ஒருமுறை எழுந்து வணங்கி உட்கார்ந்தது. காவலர் புடைசூழ வந்த பலவர்மன் அவர்களுக்குச் சிரம் தாழ்த்தி வணங்கிவிட்டுத் தனக்கெனப் போடப்பட்டிருந்த தனி அசனத்தில் அமர்ந்தான். மஞ்சளழக நடன மண்டபத்தின் பக்கச் சிலைக்குள் சென்று மறைந்தாள். அதுதான் கூட்டத்துக்குள் தான் நுழைய வேண்டிய சமயமென்று தீர்மானித்த இளையபல்லவன் தன் உபதலைவர்களுடன் அந்தக் கூட்டத்தை நோக்கிச் சென்றான். அவன் அணிந்திருந்த ராஜ உடையையும் நடந்த தோரணையையும், அவனைப் இ - நக பின்பற்றி வந்த உபதலைவர்களின் பார்வைகளையும் கண்டு என்ன செய்வதென்று அறியாமல் திக்பிரமை பிடித்துக் கொண்டு நின்றுவிட்ட காவலர் வரிசையைப் பிளந்துகொண்டு உள்ளே சென்ற இளையபல்லவன், தன் உபதலைவர்களை மூன்னிலையில் உட்கார வைத்துத் தான் மட்டும் பலவர்மனுக்கு அருகில் சென்று தலைவணங்கி, “சொன்னபடி வந்துவிட்டேன்.” என்றான். பலவர்மன் பதில் ஏதும் சொல்லவில்லை. அவனைப் பலதரப்பட்ட உணர்ச்சிகள் ஆட்டி அலைக்கழித்துக் கொண்டிருந்தன.
இளையபல்லவன் உள்ளே நுழைந்ததுமே கூட்டத்தில் மீண்டும் ஆரவாரம் கிளம்பியதைப் பலவர்மன் கவனித்தான். கொள்ளையடிக்கும் மாலுமிகள், “வருக! வருக!” எனக் காவி மொழியில் கூச்சலிட்டு அவனை வரவேற் றார்கள். கொள்ளைக் கூட்ட மாதர்கள் அவன் தங்களுக்கு அளித்த பட்டாடைகளை விறிக் காட்டியும், கொண்டை ஆபரணங்களைத் தொட்டுக் காட்டியும் அனந்தக் கூச்ச விட்டார்கள். இவற்றையெல்லாம் பலவர்மன் கவனித் தான். ஒரே பகலுக்குள் இளைய பல்லவன் எப்படி இந்தக் கொள்ளையரை வசப்படுத்தினான் என்று எண்ணினான். ஏதும் புரியாததால் இளையபல்லவனைச் சந்தேகம் நிரம்பிய கண்களுடன் நோக்கினான். இன்னும் சில விநாடிகள் கழித்திருந்தால் இருவரும் அதைப்பற்றிப் பேசியிருப்பார்கள். ஆனால் அதற்கு நேரமில்லை. திடீரெனப் பின்னணி வாத்தியக்காரர்கள் மேடை மீது தோன்றி னார்கள். இன்பமான ஸ்வர ஜாலங்கள் எழுந்தன. சூழ்நிலை திடீரென மாறிவிட்டது. கூட்டம் மூச்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. இளையபல்லவன் கண்களையும் காதுகளையும் தீட்டிக் கொண்டான். அடுத்த விநாடி மண்டப மேடைமீது பறந்து வந்தாள் மஞ்சளழகி. சதங்கை ஒலித்தது. இண்குணி முரன்று பாடியது. கடற்கரை தேவலோகமாக மாறியது.