அத்தியாயம் 24

நீர் மோகினி

துணியை எடுத்த கரம் துவட்டிக்கொள் எனத் துணிந்து நீள, துணிவற்ற வீர முகம் வேறுபுறம் திரும்பி நோக்க, உறுதியுள்ள கால்களிலும் ஒரளவு சலனம் காண, எங்கோ பார்ப்பவன்போல் பரம சங்கடத்துடன் நின்றிருந்த இளையபல்லவனைக் கண்டதும் மஞ்சளழகி வெட்கம், திகில், சஞ்சலம் முதலிய பலவித உணர்ச்சிகளுக்கு இலக்காகி, அவன் நீட்டிய மேலாடையைச் சரேலென அவன் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டு, நெடுங்கடலின் நீரப்பரப்பை நோக்கித் திரும்பி, சிறிது வளைந்தும், ஒடுங்கியும் நின்றாள். அந்த ‘மெல்லியல்’ வளைந்தபோது “பார்க்கவும் அஞ்சினான் அப்பணையினும் உயர்ந்த தோளான்” என்றால் அதற்குக் காரணங்கள் ஆயிரமாயிரம் இருந்தன. எல்லாக் காரணங்களையும் விட, உயர்குடியில் பிறந்தவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பாடு பெரும் காரணமாயிற்று இளையபல்லவனின் அந்தத் துணிவற்ற நிலைக்கு. அழகை உஊன்றிப் பார்ப்பதும் எளிது, புலன்களுக்கு வழிவிட்டு மனத்தைப் புண்படுத்திக் கொள்வதும் எளிது. ஆனால் அவற்றுக்கு அறத்தின் வேலியிட்டுப் பயன்படுத்திக் கொள்வது மிகக் கடினம். பார்ப்பதைவிட பார்க்காததில் பெருமை இருப்பதைப் பெரியோர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ‘பிறன் மனை நோக்காத பேராண்மை’ என்று வள்ளுவரும் சொல்லுவார். பிறன் மனைவியை நோக்காத துடித்த முள்ளவன் எவனோ அவனே பேராண்மை படைத்தவன் என்பது வள்ளுவர் கருத்து. அந்தக் கருத்து நாம் உரிமை கொண்டாட முடியாத எந்தப் பெண்ணைப் பற்றியும் பொருந்தும். அத்தகைய சிறந்த ஆண் மக்கள் வர்க்கத்தில் சேர்ந்தவனான இளையபல்லவன், எழிலின் இருப்பிடமாக விளங்கிய மஞ்சளழகி அத்தனை அருகில் வந்ததும் அவன் இதயத்தைப் பண்பாடு விளைவித்த அச்சம் பலமாகச் சூழ்ந்து கொண்டது. முந்திய இரவும் அன்றைய காலையும் எழுப்பிய இதயக் கிளர்ச்சியை அந்தப் பண்பாடு பெரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே, அவன் கோட்டைப் புறம் திரும்பிய தலையை மஞ்சளழகியிருந்த புறத்துக்குத் திருப்பவே இல்லை. அப்படித் திரும்பாத அந்த நேரத்திலும், அத்தனைக் கட்டுப்பாட்டிலும், மனம் சபலத்தின் சிற்றலை களை அவன் இதயத்தில் மெல்ல மெல்ல மோத விட்டுக் கொண்டுதான் இருந்தது.

மஞ்சளழகியை அந்தச் சமயத்தில் அந்த நிலையில் சந்திப்போம் என்பதைக் கனவிலும் இளையபல்லவன் நினைத்துப் பார்க்காமலே அன்று காலை அந்தக் கடற் கரையை அடைந்தானானாலும், அவளைப் பற்றிய வேறு கனவுகள் மட்டும் அவன் மனத்தை முதலிலிருந்து அலைக்கழித்துக் கொண்டுதானிருந்தனமுதல் நாளிரவு மஞ்சளழஇக்கு எப்படி உறக்கமும் உணவும் சரிவரப் பிடிக்க வில்லையோ அப்படித்தானிருந்தது இளையபல்லவன் நிலையும். பஞ்சணையில் படுத்த நிலையில் அவன் பாலூர்ப் பெருந்துறையையும், கடாரத்துப் பைங்கிளியை யும், தனக்கு இரு பெண்களாலும் ஏற்பட்டுவிட்ட பெரும் பொறுப்புகளையும் எண்ணினாலும், திரும்பத் திரும்ப இரவு நடன நிகழ்ச்சியும் மஞ்சளழகியும் இணையற்ற எழில்களும் எழில்களின் கருத்தழிக்கும் அசைவுகளும் அவன் சித்தத்தலே வலம் வந்தன. மஞ்சளழகியின் பாவாடை நடனத்தில் விசிறிய விசிறல், கண்களின் மயக்கமான பார்வை, சங்குக் கழுத்தின் அசைவுகள் இத்தனையும் மாறி மாறி அவன் மனத்திலே தோன்றி அவனை உறங்கவொட்டாமல் அடித்தன. உறக்கமே மனிதனுக்கு இன்பமும் சாந்தியும் அளிப்பதென்பதை இளையபல்லவன் உணர்ந்திருந்தான். ஆனால் அந்த உறக்கத்தை விட இன்பமானவை மஞ்சளழகியைப் பற்றிய நினைப்புகள் என்பதை அவன் அறிந்து கொண்டானா னாலும் அதில் சாந்தி மட்டும் பூஜ்யம் என்பதைப் புரிந்து கொண்டான்.

இப்படி மஞ்சளழகியைப் பற்றியும், அவளாலும் அன்றைய இரவில் கடற்கரையில் நிகழ்ந்துவிட்ட விபரீத சம்பவத்தாலும் தனக்கு ஏற்பட்டுவிட்ட பொறுப்பைப் பற்றியும் நினைத்தே, இராப்பொழுதை ஓஒட்டிவிட்ட இளையபல்லவன் கருக்கல் சமயத்தில் படுத்துச் சிறிது நேரம் மட்டுமே கண்ணயர்ந்து உதய காலத்துக்குச் சன்று மூன்பே எழுந்து தளத்துக்கு வந்து சேர்ந்து சுற்றுமூற்றிலும் பார்த்தான். அக்ஷ்யமுனையின் உதயகாலம் பேரின்பத்தை யும் பெரும் பயத்தையும் கலந்து அளித்துக் கொண்டிருந்தது. தூரத்தே புகைந்து கொண்டிருந்த பகிட்பாரிஸான் எரிமலைத் தொடர் உச்சியும், ஏதோ பல வருஷங்களுக்கு முன்னால் அது கக்கிவிட்ட கந்தகம் கலந்த கனிப்பிழம்பின் காரணமாகப் பழுப்புத் தட்டிக்கிடந்த அதன் சரிவுகளும் அருணோதயத்தின் சிவப்பில் அக்ூயமுனையை நாடி வருபவர்களை எரித்து விடுவனபோல் காட்சியளித்தன. அதன் பழுப்புக் கற்களைக் கொண்டே கட்டப்பட்ட கோட்டையும் மதிலும் பெரும் காராக்கிரகமாகவே கண்ணுக்குத் தென்பட்டன. அந்தப் பகுதியை ஒருமுறை கூர்ந்து நோக்கிவிட்டு மீண்டும் நீர்ப்பகுதியையும், எழும்பி எழும்பி வந்த திரைகளை மடித்துக் கொடுத்துக் கொண் டிருந்த அலைகளையும் கவனித்த இளைய பல்லவன், அருணோதயத்தில் அந்த நீர்ப்பகுதி அளித்த மனோகரக் காட்சியில் மனத்தைப் பெரிதும் பறிகொடுத்தான். அந்த நீரில் மிதந்துவந்த காலையின் சில்லென்ற காற்று அவன் முகத்தை மிகுந்த சுகத்துடன் தடவிக் கொடுத்து, முந்திய நாள் இரவு தூக்கமின்மையால் ஏற்பட்ட உடல் உஷ் ணத்தைச் சமனம் செய்ய முயன்றது. சாரதி அருணனைத் தொடர்ந்து கழக்குப்புறத்தில் தலை காட்டிய பரிதியும் அந்தக் கடல்பகுதியை தன் கிரணங்களால் மிக அற்புதமாக அடிக்கத் துவங்கினான்.

சித்திரைத் தங்களின் அந்தக் காலை நேரம் சிறிது ஏறினாலும் வெப்பம் மிகவும் ஏறி அந்தக் கடற்கரைப் பிராந்தியத்தைத் தகக்கத் தொடங்கிவிடும் என்பதை முதல்நாள் காலையில் அறிந்திருந்த இளையபல்லவன், குளிர்ந்த சமயத்தில் அந்தக் கடலில் தனது நீராட்டத்தை முடித்துக் கொண்டால், சற்று வெய்யில் ஏறி கோட்டைப் புறம் விழித்தெழுந்ததும் தான் பலவர்மனைச் சந்தித்து மேற்கொண்டு நடக்க வேண்டியதைக் கவனிக்கலாமென்ற முடிவுக்கு வந்தான். அகவே கீழே அரபு நாட்டுச் சராயொன்றை அணிந்து, மேலே துவட்டிக் ரொள்ளச் சிறு துண்டொன்றையும் தோளில் போட்டுக்கொண்டு மார்பில் புலிநகத் தங்க ஆரம் ஆட ஆயுதமேதும் எடுத்துக் கொள்ளா மல், படகொன்றில் ஏறி, தானே படகைத் துடுப்புகளால் துழாவிக் கொண்டு கரையை அடைந்தான். கரையை அடைந்ததும் அந்த இடத்தில் தன் நீராட்டத்தைத் துவங்காமல் கொள்ளைக்காரர் குடிசைகளுக்கு அப்பா லிருந்த தனியிடத்தை நோக்கிச் சென்று அலைகளில் இறங்கி நீந்தினான். நீண்ட நேரம் அப்படி நீந்தி விளை யாடியதால் உடலின் உஷ்ணம் மட்டுமின்றி, சிந்தனைச் சூடும் பெரிதும் குளிர்ந்ததால் ஓரளவு சந்துஷ்டியுடன் அலைகளில் வந்து சர் சர் என்று மோதிய கடல் முகப்பின் தரையில் தனது இரு கால்களையும் நீட்டி உட்கார்ந்து கொண்டு கடலின் இணையற்ற லாவண்யத்தை ஆசை யுடன் கண்களால் பருகினான். அவன் கால்களை அலைநீர் திரும்பத் இரும்பத் தடவிச் சென்றதே பெரும் இன்பமா யிருந்தது இளையபல்லவனுக்கு. அத்துடன் கண்களுக்கும் கிடைத்தது பெரு விருந்து.

வடமேற்கு நோக்கித் தலையை நீட்டிக் கொண் டிருந்த அக்ஷயமுனையின் கடலில் கிழக்கிலிருந்து குறுக்கே பாய்ந்த கதிரவன் ஒளி நீரின் நீல நிறத்திற்கு அதிக நீலத்தை யும் எழுந்து மடிந்த அலைகளின் வெண்மைத் திரைகளுக்கு அதிக வெண்மையையும் அளித்ததால், நீலக்கல் ஆபரணத் துக்கு இடையே வைரங்களின் வரிசையைப் பதித்த தோற்றத்தை அளித்தது. மெல்லக் காற்றிலாடிய தனது மரக்கலமும், அதைச் சுற்றிலும் போர்க்கலங்களுடன் அசைந்து கொண்டிருந்த கொள்ளையரின் மரக்கலங்களும் எதிரேயிருந்த கோட்டையைத் தாக்கத் தயார் செய்து கொள்ளும் படையணியைப் போல் காட்சியளித்தன. அலைகள் மீது உலாவிய கடல் நாரைகளைத் தவிர, தரையிலிருந்து நீர் முனைக்கு நகர்ந்து மீன்களையும் நண்டுகளையும் பிடிக்க முயன்று கொண்டிருந்த பெரும் கொக்குகளும் அந்தக் கடற்கரைக்குக் கண் கவரும் அழகைக் கொடுத்துக் கொண்டிருந்தன. அந்தப் பெரும் வெண் கொக்குகளிலொன்று நண்டொன்றைத் தன் அலகில் கொத்திக் கொண்டு ஓட ஆரம்பிக்க, அதைக் கண்களால் தொடர்ந்த இளையபல்லவன் அந்தக் கடற் கரையில் வேறு கவர்ச்சியும் இருப்பதைத் திடீரென்று உணர்ந்தான். உணர்ந்ததால் திகைத்தான். திரும்பிப் படகில் ஏறி மரக்கலத்துக்குப் போய்விடலாமா என்றுகூட நினைத்தான். மனம்தான் அதற்கு இடங் கொடுக்கவில்லை. கொக்கு சென்ற திசையில் தானிருந்த இடத்துக்கு வெகுதூரம் தள்ளி மஞ்சளழகி அலைகளில் துளைந்து விளையாடுவதைக் கண்டான் இளையபல்லவன்.

கண்ட கண்கள் கண்டதைக் கண்டுகொண்டே இருந்தன. மருண்ட மனம் உருண்டெழுந்து உணர்ச்சி அலைகளைப் பாய்ச்சின. சிந்தனையில் எழுந்தன அந்தச் சித்தினியைப் பற்றி எத்தனையோ கற்பனைக் குவியல்கள். அலைகளைப் பற்றிய பொறாமையும் அவன் இதயத்தில் ஓரளவு எழுந்தது. அவள் கை மாற்றிப் போட்டபோது படகுத் துடுப்புகள் போல் துழாவிய அந்த வெண்மைக் கரங்களின் அழகைக் கண்டு பிரமித்தான் அவன்.

அவள் நீந்தல் விளையாட்டைப் பார்த்துக் கொண் டிருந்த இளையபல்லவன் ஓரளவு தைரியத்துடன் தான் அதைப் பார்த்தான். ஆனால் அவள் கரைமீது ஏறி வந்ததும் அந்தத் தைரியமெல்லாம் எங்கோ பறந்தது. அவள் கரைமீது வந்ததும் அந்தப் பகுதியில் யாருமில்லை யென்ற நினைப் பால் மேலாடையைக் களைந்து தலையைத் துவட்டிக் கொள்வாளோ எனப் பயந்தான் அவன் ஒரு விநாடி. அந்தப் பயத்துக்கு இடமில்லாமல் அவள் செய்து விட்டா லும் வேறு பயத்துக்கு இடம் வைத்தாள். கரையேறியதும் கீழே தார்ப்பாய்ச்சாகக் கட்டியிருந்த சிற்றாடையை லேசாகப் பிழிந்துவிட்டு மேலாடையைப் பிழியாமலே சில விநாடிகள் நின்று கடற்புறத்தை ரசித்தாள். பிறகு ஏதோ நினைத்துத் தலையை ஆட்டி விட்டுத் தானாகச் சிரித்துக் கொண்டு கடல்நீர் தரையில் முட்டிக் கொண்டிருந்த இடத்தின் ஓரமே தரையைப் பார்த்துக்கொண்டு நடந்தாள். அவள் தான் இருப்பதை அறியாமல் தன்னை நோக்கி வருவதைக் கண்ட இளையபல்லவன், தான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணரும் சக்தியை அறவே இழந்தான்.

அவள் அழகு அவன் அறிவைப் பறித்துக் கொண்டது. கடலிலிருந்து கிளம்பிய நீர்மோடுினி யொருத்தி இந்தத் தரணியின் தரையிடம் அசைப்பட்டு வருவதுபோல் நடந்து வந்தாள் மஞ்சளழகி. இழ்ச்சிற்றாடை வரிந்து கட்டப் பட்டதாலும், மேலாடை நீரினால் உடலில் ஒட்டிக் கடந்ததாலும் புலப்பட்ட அழகின் மனோகரத் தோற்றம் காந்தமென அவன் கண்களை இழுத்தது. மஞ்சள் நிறத்தின் மீது கதிரவன் பாய்ச்சிய காலை நேரச் செங்கிரணங்கள் அத்த மஞ்சளுக்கு ஒரளவு சிவப்பையும் கொடுத்ததால், கண்ட இடத்தில் அவள் செம்பஞ்சுக் குழம்பை வாரித் தெளித்துக் கொண்டிருக்கிறாளோ என்ற பிரமையை அளித்தது. முகத்திலும் காலிலும் கைகளிலும் இருந்த நீர் முத்துகள் காலை வெய்யிலில் பளபளத்து உடலெங்கும் முத்திழைத்துக் கொண்ட மோகினியாக அவளைச் செய்து கொண்டிருந்தது.

இப்படிப் பற்பல ஊகங்களுடனும் கற்பனைகளுட னும் அவள் தன்னை நோக்கி வருவதைக் கண் கொட் டாமல் பார்த்துக் கொண்டிருந்த இளையபல்லவனின் மன உறுதி அந்தக் காலைக்காற்றில் பறந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு தேவதை தன்னை நோக்கி வருவதுபோல் வந்து கொண்டிருந்த மஞ்சளழகியின் உடல் கட்டுகளின் தோற்ற மும் நடை துலங்கிய எழில்களும் அவனைப் பெரும் சங்கடத்துக்குள்ளாக்கின. அகவே அவள் தானிருக்குமிடத் துக்குச் சற்றுத் தூரத்தில் வரும்போதே இளையபல்லவன் சரேலென எழுந்து நீர்க்கரையிலிருந்து சற்றுப் பின் னடைந்து நின்றான். அவள் வெகு அருகில் வந்ததும் பிறந்த நாட்டின் பண்பாடுகள் உள்ளத்துக்கு அணை போடவே பார்வையை அவளை விட்டு நிலத்திலும் தாழ்த்தினான். ஏதேதோ யோசனையின் காரணமாக இளையபல்லவன் இருப்பதைப் பாராமலே அவனை நெருங்கி நீர்ப்புறத் துக்குத் இரும்பி, தலை துவட்டிக் கொள்ள மேலாடையை நீக்கி, அது கீழே விழுந்ததன் விளைவாக இளையபல்லவனைப் பார்த்துவிட்ட மஞ்சளழகியின் உடலில் நாணமும் துலலும் பாய்ந்து சென்றன.

இளையபல்லவன் தன்னை அப்பொழுது பாராமல் தலையைத் திருப்பிக் கொண்டு துணியை எடுத்து நீட்டிய தால் ஓரளவு அவன் பண்பாட்டைப் புரிந்தகொண் டாலும், மஞ்சளழகியின் மனத்தில் சங்கடம் பெரிதும் ஒங்கி நின்றது. சரேலென அவள் கை நீட்டித் துணியை பறித்துக் கொண்டு அலைகள் வந்துகொண்டிருந்த பெரும் நீர்ப் பரப்பை நோக்கினாள். அந்த அலைகளைவிடத் தன் இதய அலைகள் தன்னைத் தூக்கிப் பல திசைகளில் எறிவதை அவள் உணர்ந்தாள். அவன் தன்னை, தன் நடையை, தன் எழில்களைப் பெரிதும் பார்த்திருப்பான் என்று தீர்மா னித்த மஞ்சளழக, ‘யாருமிருக்க மாட்டார்கள் என்பதால் தானே இங்கு நீராட வந்தேன். இங்கும், அதுவும், போயும் போயும் இவர் வந்து சேர்ந்தாரே! ’ என்று எண்ணினாள். “அவர் முகம் திரும்பித்தானிருக்கிறது, எண்ணங்கள் திரும்பி யிருக்காதே, தூர வரும்போது கண்ணால் கண்டதையெல் லாம் திரும்பவும் கற்பனையில் காண்பாரே இவர். ஊனக் கண்ணைவிட உள்ளக்கண் பொல்லாததாயிற்றே!’ என்று சிந்தித்து சிந்தித்து இன்பமும் துன்பமும் கலந்து வாட்டத் தலை துவட்டினாள் அவள். இல்லை இல்லை, இளைய பல்லவன் இதயத்தைத் துவட்டினாள். இதயத்தை இளைய பல்லவன் இரும்பாகத்தான் செய்துகொண்டிருந்தான். ஆனாலும் இரும்பை உருக்கும் சக்தி அந்தக் கரும்புக்கு இருந்ததை உணர்ந்தான். அந்த நீர்மோகினி அவன் இதயத்தைப் பல மலர்க்கணைகளால் பிளந்தாள். தலை மீண்டும் கடற்புறத்தை நோக்ஒித் திரும்பியது. சற்று தூரத்தே இருந்து அந்த நாடகத்தை வேறு ஓர் உருவமும் கவனித்தது.