அத்தியாயம் – 29
உடைந்த கவசம்
வாழ்வில் விநாடி என்பது அற்ப காலம். ஆனால் அந்த அற்பகாலம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதும் உண்டு. மாற்றங்கள் எண்ணங்களில் ஏற்படலாம். சரீரத் தில் ஏற்படலாம். உயிரைப் பற்றிக்கூட ஏற்படலாம். ஆகை யால் விநாடிதானே என்று காலத்தை ஒதுக்குவதற்கில்லை. விநாடியாயிருந்தாலுமஅ்த காலம்தான். அதன் வேகம் இணையற்றது என்பதை உணருவதுதான் விவேகம். அந்த விவேகம் மறையும் காலமும் உண்டு. அதை மயக்கம் தரும் காலம் என்று வேதாந்தம் சொல்லும். அப்படி மயக்கம் தரும் காலங்களில் காதல் வசப்படும் காலமும் ஒன்று. அப்படிக் காதல் மயக்கத்தில் இருந்த அந்த இருவரையும் பிரித்தது ஒரே விநாடி தான்.
அவன் முத்திரையை விரும்பி, கூம்பிச் சென்ற மஞ்சளழகியின் இதழ்கள் திடீரென கடைசி விநாடியில், அமுதம் கிட்டும் நிலையில் தாழி கவிழ்ந்ததுபோல, வேறு பக்கம் திரும்பின. அவன் கரங்களின் பிடியிலிருந்து உடலும் தமிறிப் பிரிந்து தனித்து உட்கார்ந்த அவள் முகத்தில் அச்சம் பெரிதும் உதயமாகியிருந்தது. அவள் திடீர் மாற்றத் துக்குக் காரணத்தை அறியாத இளையபல்லவன், “ஏன்! மஞ்சளழகி! என்ன நேர்ந்துவிட்டது? ஏன் இந்த மாற்றம்?” என்று கவலை நிரம்பிய குரலில் வினவினான்.
மஞ்சளழகயின் கண்களின் பார்வை அவன் தோளுக்கு மேல் பாய்ந்து பின்னால் சென்றுகொண் டிருந்தது. ஏதோ யோசனைகள் புத்தியின் அதிவேகத்துடன் சுழல்வதை அவள் முகம் சந்தேகமற எடுத்துக் காட்டியது. புத்தியில் பல எண்ணங்கள் சுற்றிக் கொண்டிருந்ததால் அவள் நீண்ட நேரம் பதில் சொல்லவில்லை. பதில் சொன்னபோது குரல் மெல்ல ஆட்டம் கண்டித்தது. “பின்புறம் திரும்பிப் பாருங்கள்” என்று மட்டும் கூறினாள் அவள்.
பின்புறம் திரும்பிப் பார்த்த இளைய பல்லவனின் விழிகளில் ஆச்சரியம் பெரிதும் படர்ந்தது. கொள்ளைக் கூட்டம் பலமாகக் கூடி, தன்னையும் மஞ்சளழகியையும் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட இளையபல்லவன் இதயத்தில் ஆச்சரியத்துடன் சினமும் ஏற்படவே, “இதென்ன அநாகரிகம்! ஒரு பெண்ணும் ஆணும் தனித் திருப்பதை வெறித்து வெறித்துப் பார்க்கும் பழக்கம்!” என்று கோபத்துடன் கேட்டான் மஞ்சளழகயை நோக்கி.
“அதுதான் சொன்னேனே முன்பே! இந்த நாட்டுப் பழக்கம் இது” என்றாள் மஞ்சளழகி குரலில் துயரம் தோய.
“என்ன பழக்கம், விளக்கித்தான் சொல்லேன்” என்று வினவினான் இளையபல்லவன் அலுப்புடன்.
“பெண்ணும் அணும் தனிப்படச் சேர்ந்து சல்லாபித் இருக்கக் கூடாது.
இருந்தால்...
“இருந்தால்?”
“அந்தப் பெண்ணை அவன் மணம் செய்துகொள்ள வேண்டும்.
“செய்துகொள்ள மறுத்தால்?”
“விசாரணைக்கூடம் அமைக்கப்படும்.
“அமைக்கப்படட்டுமே.
“அந்த இருவர் தனியாயிருந்ததற்கு, சாட்சிகள் அழைக்கப்படுவார்கள்.
“அதைப் புரிந்துகொண்டேன்.
அந்தச் சாட்சிகளை ஏற்பாடு செய்ய உன் தந்தை கொள்ளைக்காரர்களை அழைத்து நம்மிருவரையும் காட்டியிருக்கிறார்.
“ஆம், அதுதான் அவர் எண்ணம். சாட்சிகள் விசாரிக்கப்பட்டு நீங்கள் குற்றவாளியெனத் தீர்மானிக்கப்படுவீர்கள்.
“என்ன குற்றம்?”
மஞ்சளழகி தலையைக் குனிந்து கொண்டாள், சற்றுத் தயக்கத்துடன் மெல்லச் சொன்னாள், “என்னைச் சீரழித்த குற்றம்.” என்று.
“பொய்! பொய்! அப்படி வரம்பு மீறி நான் என்ன செய்தேன்?” என்று இளையபல்லவனும் சங்கடத்துடன் பேசினான்.
வரம்பு மீறினாலும் மீறாவிட்டாலும் மீறியதாகக் குற்றம் சாட்டப்படும் உங்கள்மீது. அதை ஜோடித்து நிரூபிக்கும் திறமை என் தந்தைக்கு உண்டு. உங்கள் விஷயத்தில் அந்தத் திறமையும் தேவையில்லை.” என்றாள் மஞ்சளழகி.
“ஏன் தேவையில்லை?”
“நாமிருவரும் அத்தனை லட்சணமாக நடந்து கொண்டிருக்கிறோம்.
“என்ன தவறுதலாக நடந்துவிட்டோம்?” “நடன நிகழ்ச்சியின்போது நீங்களும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதைத் தந்தை கவனித்திருக்கிறார். தந்தை என்ன, எல்லோரும் பார்த்திருக் கிறார்கள். இல்லாவிட்டால் தந்த என்ற முறையை மீறி உங்களை மணந்துகொள்ள என் தந்தை தூண்டுவாரா? அது இருக்கட்டும். இத்தனை நேரம் நாமிருவரும் இருந்த நிலை...நிலை...எந்தத் தவறான பொருளுக்கும் இடங் கொடுக்கும்...” என்று வெட்கத்துடனும் பயத்துடனும் பதில் சொன்னாள் மஞ்சளழகி.
அப்படி நிரூபிக்கப்பட்டால் ஏற்படக்கூடிய ஆபத்து என்ன என்பதை மட்டும் இளையபல்லவன் அறியாததால் மீண்டும் கேட்டான், “சரி மஞ்சளழகி!! விசாரணை நடக்கிறது. என்னைக் குற்றவாளியாகத் தீர்மானிக்கிறார்கள். அப்புறம் என்ன?” என்று.
“ஏற்கெனவே சொன்னேனே, நீங்கள் ஒன்று என்னை மணக்கலாம்.
அல்லது மரணத்துக்கு உள்ளாகலாமென்று.” எனக் குறிப்பிட்டாள் மஞ்சளழகி. “என்னைப் பற்றிய விவரங்கள் பல உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கின்றன அல்லவா?” என்று வினவி னான் இளையபல்லவன் உறுதியான குரலில்.
ஆம்.
“நான் மரணத்துக்கு அஞ்சாதவன் என்ற விவரம் மட்டும் உங்கள் காதுக்கு எட்டவில்லையா?”
“அதுவும் எட்டியிருக்கிறது.
“அப்படியிருக்க இஷ்ட விரோதமாக என்னை யார் எதைச் செய்யக் கட்டாயப்படுத்த முடியும்?”
மஞ்சளழகி சற்று நிதானித்தாள். பிறகு சற்றே குரல் நடுங்கச் சொன்னாள். இந்த மரணம் சாதாரண மரண மல்ல.” என்று.
“சாதாரண மரணமல்ல வென்றால், சித்தரவதை செய்வார்களா?” என்று வினவினான் படைத்தலைவன்.
“சித்தரவதையென்பது சாமானிய வார்த்தை.
“அதைவிடக் கடுமை தரும் மரணமா?”
“ஆம், இளையபல்லவரே! மிகவும் கொடிய மரணம். என் விரோதிக்குக்கூட அத்தகைய மரணம் விளைவதை நான் விரும்ப மாட்டேன். நன்றாகக் கேளுங்கள் விளையக் கூடிய கொடுமையை.” என்ற மஞ்சளழக, “அதோ அந்தக் கோட்டையின் மத்தியப் பகுதியைக் கவனியுங்கள்.” என்று தன் கையால் சுட்டிக் காட்டினாள்.
தலையைத் திருப்பி அந்தப் பகுதியைப் பார்த்த இளையபல்லவன், “ஆம், அங்கொரு பெரும் கொடி பறக்கிறது.” என்றான்.
“அந்தக் கொடி எந்த நாட்டுக் கொடியென்பதை பார்த்தீர்களா?” என்று கேட்டாள் மஞ்சளழகி.
“பார்த்தேன், அது சொர்ணபூமியின் கொடியல்ல. ஸ்ரீவிஜய சாம்ராஜ்ய சின்னமாகத் தோன்றவில்லை ஆது.” என்றான் இளையபல்லவன்.
“இல்லை, ஸ்ரீவிஜயத்தின் கொடி அல்ல அது. அக்கொடி இதோ இருக்கிறது.” என்று வேறொரு பகுதியில் பறந்து கொண்டிருந்த கொடியைச் சுட்டிக்காட்டினாள் மஞ்சளழகி,
இரண்டு கொடிகளையும் மாறி மாறிப் பார்த்த இளையபல்லவன், “ஆம்! ஆம்! இரண்டு கொடிகளுக்கும் பெரும் வித்தியாசமிருக்கிறது.” என்று கூறினான். “அந்தக் கொடி யாருடையது?” என்று வினவினான்.
“இந்நாட்டுப் பூர்வகுடிகளில் பெரும் பகுதியினரான பதக் ஜாதியினரின் கொடி அது.” என்று சொன்னாள் மஞ்சளழகி.
இளையபல்லவன் விழிகளில் ஆச்சரியம் தெரிந்தது. “அரசாங்கக் கொடியிருக்கும் கோட்டையுள் இன்னொரு கொடி அனுமதிக்கப்படுகிறதா?” என்று ஆச்சரியம் குரலிலும் பூர்ணமாகப் பிரதிபலிக்கக் கேட்டான் அவன்.
“சாதாரணமாக அனுமதிக்கப்படுவதில்லை. விசேஷ காலங்களில் அனுமதிக்கப்படுகிறது. முக்கியமாக விசார ணைக்குப் பூர்வாங்கமாக இக்கொடி உயர்த்தப்படும்.
“ஏன்?”
“இங்கு இன்னும் பதக் இனத்தவரின் சட்டதிட்டங் கள்தான் பழக்கத்தில் இருந்து வருகின்றன. ஸ்ரீவிஜயத்தின் நாகரிகப் பழக்கங்கள் இன்னும் இங்கு வழக்கத்துக்கு வர வில்லை. ஆகவே முக்கிய விசாரணைக் காலங்களில் அரசாங்கத்தாரே பதக்குகளின் கொடியை உயர்த்துகிறார்கள். அவர்கள் வழக்கப்படித்தான் விசாரணை நடக்கும். அவர்கள் வழக்கப்படித்தான் தண்டனையும் அளிக்கப்படும்.
“அப்படியா?”
“ஆம். கொடியை உயர்த்த முக்கிய காரணமுண்டு.
“என்ன காரணம்?”
“சுற்றுப்புறமுள்ள பதக்குகளை வரவழைக்க இது ஒரு வழி. இந்தக் கொடி உயர்த்தப்பட்ட மறுவிநாடி இங்கிருந்து பதக்குகளின் இருப்பிடங்களுக்கு ஒற்றர்கள் பறந்துவிடுவார்கள். விசாரணையின் போது பதக் இனத்தாரின் பெண் களும், ஆண்களும் பெருவாரியாக வந்து கூடுவார்கள். ஆசையுடன் எதிர்பார்ப்பார்கள்.
“என்ன? தருமணத்தையா?”
“இல்லை.
உங்கள் மரணத்தை.
“என் மரணத்தில் என்ன அவர்களுக்கு அத்தனை திருப்தி?” மஞ்சளழகி மேற்கொண்டு பேசமுடியாமல் திணறினாள். அதுவரை அவனைப் பார்த்துப் பேசிய அவள் தன் இரு கைகளிலும் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். “என்ன திருப்தி என்று கேட்கிறாரே! எப்படிச் சொல்லு வேன்! ’ என்று ஏக்கப் பெருமூச்சு விட்டாள். அந்தப் பெருமூச்சைத் தொடர்ந்து தயங்கித் தயங் இத் துக்கம் குரலில் அலைமோதப் பேசினாள். “இளையபல்லவரே! உமக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெட்டுப் பாறைக்கு உம்மை அழைத்துச் செல்லமாட்டார்கள். அதோ அந்தப் பதக்குகளின் கொடிமரத்துக்கு அழைத்துச் செல்லுவார்கள். அழைத்துச் சென்று...” என்று சொல்லிக் கொண்டே போன அவள் குரல் கம்மியது.
“அஞ்சாதே! சொல் மஞ்சளழக.” என்றான் இளைய பல்லவன். “அழைத்துச் சென்று தூக்கிலிடுவார்களா?” என்று கேட்டான்.
“அதுவும் அத்தனை கோரமல்ல...” என்று தேம்பி னாள் அவள்.
இளைய பல்லவனின் இதயத்தில் அந்த ஏந்தியழை யின் துக்கத்தைக் கண்டு பரிதாபம் பெருக்கெடுத்து ஓடியது. அவளை மீண்டும் தன்னருகில் இழுத்தான். “சொல் மஞ்சளழக, சித்திரவதைக்கு அஞ்சாதவன் நான்” என்று ஆதரவாகப் பேசவும் செய்தான்.
“அந்தக் கொடி மரத்தில் கட்டுவார்கள். அந்தக் கொடி மரம் பதக் சாதியருக்குச் சொந்தம். ஆகவே அதில் கட்டப்படுபவர்களும் அவர்களுக்குச் சொந்தம்...” இதைச் சொன்ன மஞ்சளழகி லேசாக நடுங்கினாள்.
“என் உடல் அவர்களுக்குச் சொந்தமாகிவிடும் அவ்வளவுதானே?” என்றான் இளையபல்லவன்.
அவள் திடீரென்றுத் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். அவள் கண்களில் நீர் நிரம்பி நின்றது. “இளைய பல்லவரே, பதக்குகள் நரமாமிசம் புசிப்பவர்கள். ஆகவே உமது உடல் சின்னாபின்னப்படுத்தப்படும். அந்தக் கொடி மரத்தில் உம்மைக் கட்டியதும் அக்ஷ்யமுனைக் காவலர் அகன்றுவிடுவார்கள். ஆயிரக்கணக்கான பதக்குகள் உம்மைச் சூழ்ந்துகொள்வார்கள். ஒவ்வொருவரும் உமது உடலின் ஒவ்வொரு புறத்தில் தசையைக் கத்தியால் அறுத்து எடுத்துக் கொள்வார்கள். கழுகுகள் உடலைக் குத்தினால் கூட ஏற்படாத இம்சை உங்களுக்கு ஏற்படும். உயிர் சிறிது சிறிதாகத்தான் போகும். உடலும் சிறிது சிறிதாகத்தான் அழியும். குருதியை அவர்களில் சிலர் வாய் வைத்துக் குடிப்பார்கள். இந்தக் கோரத்துக்குப் பூர்வாங்கமாகக் கண்கள் தோண்டப்படும். மிகப் பயங்கரம்! மிகப் பயங்கரம்!” என்று திணறினாள் மஞ்சளழகி.
இளையபல்லவன் கூடத் தனக்கு ஏற்படக்கூடிய அந்த விபரீத மரணத்தைக் குறித்து அச்சத்தின் வசப் பட்டான். அதுவரை அவன் கேட்டுமிராத அந்தக் கொடு மையை எண்ண எண்ண அவன் உள்ளம் நடுங்கியது. ‘வாளேந்திப் போரிட்டு அடையும் வீரமரணம் வேறு. மனிதர் மனிதனை அறுத்துத் தின்று குதூகலிக்கும் இந்தப் பயங்கர மரணம் வேறு.’ என்று நினைத்த அவன் தீவிர சிந்தனையில் இறங்கினான். கடைசியில் கேட்டான், “ஆம் மஞ்சளழகி! இது பயங்கரப் பழக்கம்தான். இத்தகைய தண்டனையை நீ முன்பு பார்த்திருக்கிறாயா?” என்று.
“பார்த்ததில்லை. இரண்டொரு சமயம் இப்படி நடந் திருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.” என்றாள் மஞ்சளழகி.
“உன் தந்தை எதற்காக இத்தகைய பயங்கர மரணத்தை எனக்கு அளிக்கப் பார்க்கிறார்?” என்று வினவினான் இளையபல்லவன்.
“நீங்கள் மணம் செய்துகொண்டாலும் அவருக்கு லாபம், மரணம் அடைந்தாலும் லாபம்” என்றாள் அவள்.
“மரணமடைந்தால் என்ன லாபம்?”
“நீங்கள் பூர்வக்குடியினரில் ஒருவனைக் கொன்று விட்டீர்களல்லவா?”
“நான் கொல்லவில்லை, அமீர் கொன்றான்.
“அமீர் உங்களைச் சேர்ந்தவர். அவர் கொன்றாலும் நீங்கள் கொன்ற மாதிரிதான் இங்குள்ளவர்களுக்கு. தவிர வில்வலனைப் பலர் முன்பு அவமானப்படுத்தியிருக் கிறீர்கள். இந்த இரண்டு செய்கைகளாலும் பூர்வகுடிகள் வெகுண்டிருக்கிறார்கள். உங்களை அவர்களுக்கு அளித்து விட்டால் பதக்குகள் சாந்தி அடைந்துவிடுவார்கள்அவர்கள் ஒத்துழைப்பு என் தந்தைக்கு இனிமேலும் இருக்கும்.
“நான் மணம் செய்துகொண்டால்?”
“அப்பொழுது பதக்குகளை நிலத்திலும் சூளுக் களைக் கடலிலும் எதிர்க்கக்கூடிய திறமை மிக்க படைத் தலைவர் கிடைக்கிறார் தந்தைக்கு. அப்பொழுதும் அவருக்கு லாபம்தான். இப்படி இரண்டு வழிகளிலும் உங்களைக் கட்டவே இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார் தந்தை. ஆகவே...
“அகவே?”
மஞ்சளழகி மீண்டும் முகத்தைக் கவிழ்த்துக் கொண் டாள். பிறகு மெல்லச் சொன்னாள், “இந்த அக்ஷ்ய முனையை விட்டுப் போய்விடுங்கள் இளையபல்லவரே!” என்று.
இளையபல்லவன் சற்று யோசித்துவிட்டுக் கேட் டான், “மஞ்சளழக என்னைக் கொல்வது அத்தனை சுலபமென்று நினைக்கிறாயா?” என்று.
“ஏன் சுலபமில்லாமலென்ன?”
“எனக்குப் பின்னால் அகூதா இருக்கிறாரென்பதை மறந்துவிட்டாயா? அவரிடமுள்ள பயத்தாலேயே உன் தந்தை என்னை தன் மாளிகையை விட்டு உயிருடன் வெளியில் அனுப்பினார் என்பதுதான் உனக்கு நினைப் பில்லையா?” என்றான் இளையபல்லவன்.
“எதையும் நான் மறக்கவில்லை இளையபல்லவரே இந்த ஒரு விஷயத்தில் அகூதாவும் எதுவும் செய்ய முடியாது” என்றாள் அவள்.
“ஏன்?”
“அகூதாவும் இந்தப் பழக்க வழக்கங்களுக்கும், சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டவன். அகூதா எதையும் மன்னிப்பானாம். பெண்களையும் ஆண்களையும் கொல் வதைக்கூட. ஆனால் ஒரு பெண் மட்டும் கெடுக்கப் பட்டால் கெடுத்தவன் யாராயிருந்தாலும் அவன் மன்னிப்பதில்லையாம்.
“இதைக்கேட்ட இளையபல்லவன் வியப்பின் எல்லையை எய்தினான். ஒரு வருட காலமாக அகூதாவைப் பற்றித் தான் அறியாத ஒரு புது தர்மத்தை மஞ்சளழகி எடுத்துச் சொன்னது அவனுக்குப் பெரிய ஆச்சரியத்தை முதலில் விளைவித்தாலும் பிறகு உண்மையும் மெல்ல மலர்ந்தது அவன் இதயத்தில், எந்த இடம் சூறையாடும் போதும் பெண்களை மட்டும் தொடக்கூடாதென அகூதா இட்ட உத்தரவு, அவனுக்கு அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. கொள்ளைக்காரன் இத்தனை வினோத உத்தரவை இடுகிறானே என்று அந்தச் சமயங்களில் சாதாரணமாகத் தோன்றியது இளையபல்லவனுக்கு. இப்பொழுது அதை நினைக்க நினைக்க அகூதாவின் புரிபடாத பல செயல்கள் அவனுக்குப் புரியலாயின. அகூதாவின் வாழ்க்கையில் பெண் சம்பந்தமான பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்க வேண்டுமென அவன் எண்ணினான். அந்த எண்ணங் களுடன் அகூதாவின் குணத்தின் பலன் தன் நிலையை அக்ஷயமுனையில் எத்தனை தூரம் பாதிக்கிறது என்பதை நினைத்துச் சற்று சிந்தை கலங்கவும் செய்தான். ‘அகூதா விடம் உள்ள பயம் ஒன்றுதான் எனக்கு இங்கு கவசம், அதை உடைத்துவிட்டான் பலவர்மன். இணி என் உயிர் அவன் கையிவிருக்கிறது,’ என்று எண்ணமிட்ட இளைய பல்லவன் திடீரென ஒரு முடிவுக்கு வந்து, “வா! மஞ்சளழகி!” என்று அவளை அழைத்தான்.
அவள் எழுந்து நின்றாள். அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டே கொள்ளையர் கூட்டமாக நின் றிருந்த இடத்தை நோக்கி நடந்தான் இளையபல்லவன். அவன் முகத்தில் உறுதி மண்டிக் கிடந்தது. அந்த உறுதிக்குக் காரணம் அவளுக்குப் புரியவில்லை. உடைந்த கவசம் அளித்த உறுதி அது என்பது அவளுக்கு விளங்கவில்லை.