அத்தியாயம் 33
பாதுகாப்பு ஏற்பாடுகள்
அக்ஷயமுனைக் கோட்டை மாளிகைக்குள் தான் நிதிப் பெட்டிகளைக் கொண்டு வந்த நாளிலிருந்து அடுத்த ஒரு வாரம் முடிய பலவர்மன் பெரும் சாதுவாக விட்ட தையும் மாளிகையிலும் கோட்டையின் இதர பகுதி களிலும் தான் ஏற்படுத்திய மாறுதல்களில் ஒன்றுக்குகூட அவன் எந்த எதிர்ப்பையும் காட்டாததையும், சகலத்தையும் ஆதரித்தும் அமோதித்தும் வந்ததையும் கவனித்த இளைய பல்லவன் சித்தத்தில் அந்த வாரம் முழுவதும் பெருத்த சந்தேகம் எழுந்து உலாவிக் கொண்டிருந்ததாகையால் தான் புரிந்த அலுவல்கள் அனைத்தையும் மிகுந்த தீர்க்கா லோசனையுடனே செய்து வந்தான். எழுந்து நடந்துவரும் புலியைவிட உறங்குவதுபோல் இருக்கும் முக்கால் கண் மூடிய புலி பெரும் அபாயத்தை விளைவிக்கக்கூடிய தென்பதை அறிந்திருந்த சோழர் படைத்தலைவன், பலவர்மன் மீது ஒரு கண் வைத்தே தன் வேலைகளைச் செய்து வந்தான். சொர்ணத்தீவின் பூர்வகுடிகளிடம் அக்ஷயமுனைக் கோட்டை மக்களுக்குள்ள பயத்தை உடைப்பதும், பூர்வகுடிகளின் எதிர்ப்பு ஏற்பட்டால் அதை மக்களைக் கொண்டே சமாளிப்பதும், இடையே அக்ஷ்ய முனைத் தளத்தில் தனது மரக்கலத்தைத் திடப்படுத்திக் கொள்வதும் ஆகிய மூன்றும் முக்கிய பணிகளென்பதைத் தீர்மானித்துக் கொண்ட இளையபல்லவன் அதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கினான். அத்தகைய னை எத வக ண பணிகளிலும் அக்ஷபமூனைக் கோட்டைவாசுிகளின் ஒத்துழைப்பும் கடற்கரைக் கொள்ளையர் ஒத்துழைப்பும் பூர்ணமாயிருந்தது சோழர் படைத்தலைவனுக்கு. காண் பதற்கரிய பெரும் செல்வத்தைக் கண்களால் கண்ட அக்ஷயமுனை நகரவாகிகளும் சரி, கொள்ளையரும் சரி, “இத்தகைய பெரும் செல்வத்தைத் திரட்டுவதானால் பெரும் சாதனைகளுக்குப் பின்புதான் திரட்ட வேண்டும். இத்தகைய செல்வத்தை ஓர் உபதலைவன் பெற அகூதா அனுமதித்திருக்க வேண்டுமானால் அந்த உபதலைவனின் துறமை அற்ப சொற்பமானதாயிருக்க முடியாது” என்ற முடிவுக்கு வந்தார்களாதலாலும், அத்தனை செல்வமும் அக்ஷயமுனையைப் பலப்படுத்தவே உபயோகப்படுமாத லால் அக்ஷயமுனையில் தொழிலுக்கும் ஊதியத்துக்கும் குறைவிருக்காதென்பதை உணர்ந்து கொண்டார்களாத லாலும், இளையபல்லவன் எள்ளென்பதற்கு முன்பு எண்ணெயென முனைந்து நின்றார்கள்.
அத்தகைய ஒத்துழைப்பைப் பூரணமாகப் பயன் படுத்திக் கொள்வதில் இளையபல்லவன் ஒரு விநாடிகூட அலட்சியம் காட்டாமல் விடுவிடுவெனத் தன் அலுவல் களைச் செய்தான். அந்த அலுவல்களில் இறங்குவதற்கு முதல் நடவடிக்கையாகத் தனக்கெனப் பிரத்தியேமாக ஓர் அறையை வேண்டிய படைத்தலைவன் பலவர்மன் மாளிகையின் மாடியறையைத் தனது இருப்பிடமாக்கிக் கொண்டான். அந்த அறையைத் தான் உபயோகிப்பதால் ஏதாவது அசெளகரியமுண்டாவென இளையபல்லவன் கேட்டதற்கு, “எந்த அசெளகரியமுமில்லை. இந்த மாளிகையே தங்களுக்குச் சொந்தம்.” எனப் பதில் வந்தது அக்ஷ்யமுனைக் கோட்டைத் தலைவனிடமிருந்து. அந்தப் பதிலும் அது சொல்லப்பட்ட இனிப்பான முறையும் சற்று அதிர்ச்சியைத் தந்ததானாலும், அந்த அதிர்ச்சியைச் சற்றும் வெளிக்குக் காட்டாமல் புன்னகை தவழும் வதனத்துடன் அக்ஷயமுனைக் கோட்டைக் காவலனுக்கு நன்றி தெரி வித்துவிட்டு அந்த அறையில் தங்குவதற்கு வேண்டிய சகல செளகரியங்களையும் செய்துகொண்டான் சோழர் படைத் தலைவன். நிதிப் பெட்டிகளை பொக்கிஷ அறைக்குக் கொண்டு செல்லவும் பாதுகாக்கவும் சேந்தனுக்கு உத்தர விட்ட பிறகு, மாளிகையைச் சுற்றிப் பார்த்த இளயை பல்லவன், மாளிகையின் மாடியறையை விடத் தன் வேலைக்குச் சிறந்த இடம் வேறு எதுவுமில்லை யென்பதை முடிவு செய்துகொண்டான். அக்ஷ்யமுனை நகரத்தின் மற்றக் கட்டடங்களைவிடச் சற்று உயரத்தி லிருந்ததன் காரணமாக அந்த ஒற்றை அடுக்கு மாளிகை யின் கீழ்த்தளத்திலிருந்தே ஊரின் அமைப்பு கண்ணுக்கு நன்றாகத் தெரிந்ததென்றால் மேல்தளத்தின் அறையி லிருந்து ஊர் மட்டுமின்றி ஊருக்குப் பின்புறமிருந்த பகிட்பாரிஸான் மலைத்தொடரும் முன்புறமிருந்த கடற் பகுதியும்கூட மிகத் தெளிவாகத் தெரிந்தன.
அந்த மாளிகை பார்ப்பதற்கு ஒற்றையடுக்கு மாளிகையே தவிர, மேல்தளத்தில் ஒரே ஒரு விசாலமான அறை மட்டுமே நடுவில் இருந்தது. அதைச் சுற்றிலும் பெரும் தாழ்வறைகள் இருந்தனவேயொழிய, வேறு அறைகள் ஏதுமே இல்லை. தவிர, அந்த ஓர் அறையிலும் பலவர்மன் என்றும் தங்கியதில்லையென்பதற்கான அடையாளங் களும் இருந்தன. இளையபல்லவன் முதலில் அதைப் பார்வையிட்டபோது சுவர்களின் அலங்காரத்துக்கான வசதிகளோ, மஞ்சங்களைத் தரையில் பொருத்துவதற்கான ஏற்பாடுகளோ பெரும் சரவிளக்குகளைக் கூரையிலிருந்து தொங்க விடுவதற்கான அமைப்புகளோ ஏதுமில்லாததைக் கவனித்த இளையபல்லவன், கோட்டைத் தலைவன் என்றும் அந்த அறையில் தங்கியதில்லை யென்பதைப் புரிந்துகொண்டான். தவிர, அந்த அறைச் சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த மர ஆணிகளிலிருந்த இரண்டொரு வாள்கள், ஈட்டிகள் முதலியனவும் அறைக்கு வெளியே இருந்த இரும்பு வளையங்களில் பொருத்தப் பட்டிருந்த இதப்பந்தங்களும் அது காவல் வீரர் அறையாக இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தின. மற்றபடி அறை விசாலமானதாயும் அக்ஷ்யமுனைக் கோட்டை முழு வதையும் கண்வீச்சால் அளந்து விடக்கூடிய முறையிலும் அமைந்திருந்ததால் இத்தகைய இடத்தைப் பலவர்மன் தனக்குச் சொந்தமாக ஏன் வைத்துக்கொள்ளவில்லை யென்பதை எண்ணிப் பார்த்த இளையபல்லவனுக்கு விடையேதும் விளங்கவில்லையென்றாலும், அதற்குத் தக்க காரணமிருக்குமென்பதில் மட்டும் அவனுக்குச் சந்தேக மில்லை. இருப்பினும் அந்த அறையே தனக்கு வாசஸ்தல மாக இருப்பதற்குத் தகுதியுள்ளது என்பதை முடிவு செய்தான் படைத்தலைவன். அதனுடைய விசாலம், கடலை நோக்கியும் மலையை நோக்கியும் எதிரும் புதிருமாக இருந்த இரண்டு வாயில்கள், சுற்றிலுமிருந்த தாழ்வறைகள் எல்லாமே அவனுக்குப் பெரும் வசதியா யிருந்தன. அந்த அறையின் நடுவிலிருந்து பகிட்பாரிஸான் மலைக்காட்டுப் பகுதியையும், கொள்ளையர் இருந்த கடற் பகுதியையும், ஒரே காலத்தில் கவனிக்கலாமாகையால் அந்த அறையின் நட்டநடுவில் தனது மஞ்சத்தை அமைக்க மாளிகை வீரர்களுக்குக் கட்டளையிட்டான் படைத் தலைவன்.
தனது இருப்பிடத்துக்கு ஏற்பாடு செய்துகொண்டு பலவர்மன் அனுமதி பெற்றுப் பொக்கிஷ அறை மேற் பார்வைக்கும் சேந்தனை நியமித்த இளையபல்லவன் அந்த நாள் முழுவதும் அமீருடனும் மற்ற இரு உபதலைவர் களுடனும் அந்த நகரத்தைச் சுற்றிச் சுற்றி நகரத்தின அமைப்பு நுட்பங்களை ஆராய்ந்தான். நகரம் அதிகப் பெரிதாயில்லாமல் கால்காதச் சுற்றளவேயுடையதா யிருந்ததையும், நகரப் பாதைகள் விசாலமாகவும், ஆயுத வண்டிகள் போவதற்கு வசதியாகவும் அமைக்கப் பட்டிருந்ததையும், எல்லாப் பாதைகளும் திரும்பத் திரும்ப கோட்டைத்தலைவன் மாளிகையில் வந்து முடிவதையும் கண்டான் படைத்தலைவன். நகரத்துக்கு மொத்தம் மூன்று வாயில்களே இருந்ததை முன்பே அறிந்திருந்த படைத் தலைவன் அந்த மூன்று வாயில்களில் கடற்கரையை நோக்கியிருந்த முதல் வாயிலைத் தான் வந்த அன்றே பார்த்திருந்தாலும் மற்ற வாயில்களைப் பார்க்கவில்லை யாகையால் நகரத்துக்குக் கிழக்கிலும் மேற்கிலும் இருந்த அந்த வாயில்களின் பலத்தையும் சோதித்தான். கடற்கரை வாயிலைப்போலவே அந்த இரண்டு வாயில்களும் பலமாக இருந்ததாலும் அவற்றின் பெரும் கதவுகளில் செருகப்பட்டு வெளி நோக்கிக் கூரிடப்பட்டிருந்த இரும்பு ஆணிகளைப் பெரும் மரத் துண்டுகளைக்’ கொண்டும் இடித்துத் தகர்ப்பது சாத்தயமில்லையென்பதையும் புரிந்து கொண் டான் இளையபல்லவன்.
கதவுகளைப் போலவே கோட்டைச் சுவர்களும் பலமாயிருந்தன. சுவர்களின் தளம் சுமார் நான்கடி அகலத்தில் அமைக்கப்பட்டு நகரத்தைச் சுற்றி ஒட்டிக் கொண்டிருந்தது. அந்த நான்கடி அகலச் சுவர்களின் பகுதிகள் சில அங்காங்கு இரண்டடி முன் தள்ளப்பட்டு அவற்றில் தூரப்பார்வைக் கூடங்கள் அறைகளைப்போல் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து சதா கண் காணித்து வந்த காவலரின் பார்வையிலிருந்து சுற்றும் காத தூரத்துக்குள் வரும் எதுவும் தப்ப முடியாதென்பதை அறிந்த இளையபல்லவன், அந்தக் கோட்டையமைப்பு பாரத நாட்டின் கோட்டைகளின் அமைப்பு போலவே இருந்ததைக் கவனித்து, ‘பாரதத்தின் நாகரிகம் நாட்டி யத்தில் மட்டுமல்ல, போர்த் துறைகளிலும் சொர்ண பூமியில் பரவியிருக்கிறது. பாரதம் வழி காட்டாவிட்டால் இந்த நாட்டின் கதி என்ன?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டதில் ஓரளவு திருப்தியும் அடைந்தான். இத்தனை ஏற்பாட்டிலும் ஒரு முக்கிய வித்தியாசமிருந்ததையும் கண்ட இளையபல்லவன், அதற்குக் காரணம் என்னவென்பதை மட்டும் அறியாமல் திணறினான். கோட்டைக்கு மூன்றே வாயில்கள் இருந்தன. அந்த மூன்று வாயில்களில் ஒன்று கூட மலைப்பக்கம் இல்லை. காடு அடர்த்தியாயிருந்த பகுதியில் வாயிலும் இல்லை, காவலும் அதிகம் இல்லை. காட்டில் வாழும் பூர்வகுடிகளைக் கண்டு நகர மக்கள் நடுங்கிக் கொண்டிருக்க அந்தப் பூர்வகுடிகள் வரும் அந்த வழியில் கூர்மையான ஆணிகள் உள்ள பெரும் கதவு களுள்ள வாயிலையும், தளத்தில் பலமான காவலையும் வைப்பது நியாயமாயிருக்க, அந்தப் பகுதியை ஏன் பரம பலவீனமாக வைத்திருக்கிறான் பலவர்மன் என்பதை எண்ணிப் பார்த்தும் விடை கிடைக்கவில்லை இளைய பல்லவனுக்கு. இருப்பினும் பலவர்மன் செய்த தவறைத் தான் செய்யாமல் அந்த விஷயத்தில் பலமான காவலையும் அமைக்கத் தீர்மானித்தான் இளையபல்லவன்.
இப்படி நகரம் முழுவதையும் சுற்றிப் பார்த்துவிட்டு அன்று மாலை அவன் கோட்டைத்தலைவன் மாளி கைக்குத் திரும்புவதற்குள் மேல் தள அறையில் அவனுக்கு வேண்டிய சகல வசதிகளையும் அவனது மாலுமிகள் செய்து முடித்திருந்தார்கள். இளையபல்லவனின் ரசிகத் தன்மையை உணர்ந்திருந்த கூலவாணிகன் சேந்தன் பெரும் மன்னனின் சயன அறைபோல் அதை அலங்கரிக்க மாலுமிகளுக்கு உத்தரவிடவே இளையபல்லவன் மரக்கல அறையிலிருந்தே மஞ்சம் முதற்கொண்டு சகல வசதிகளும் அந்த அறைக்குக் கொண்டு வரப்பட்டன. அப்படி வசதி செய்யப்பட்ட அந்த அறையில் அன்றிரவு இளைய பல்லவன் தன் உப தலைவர்களனைவரையும் வர வழைத்துச் செய்யவேண்டிய ஏற்பாடுகளை விவரித்து, அதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்தான். தனது மரக்கலத்தைக் கயிறுகள் கட்டித் தரைக்கு இழுத்துச் செப்பனிடும் வேலையைத் துவங்கும்படி கண்டியத்தேவ னுக்குக் கட்டளையிட்ட இளையபல்லவன், “தேவரே! மரக்கலத்தின் அமைப்பிலும் சிறிது மாறுதல் தேவையிருக்கிறது. மரக்கலத்தைத் தரையில் இழுத்து அடிப் பகுதியைப் பழுது பார்த்த பிறகு என்னிடம் சொல்லும். மாறுதல் எப்படிச் செய்ய வேண்டுமென்று சொல்கிறேன்,” என்று கூறினான்.
“இப்பொழுதிருக்கும் அமைப்புக்கு என்ன?” என்று கேட்டான் கண்டியத்தேவன்.
“போர் வசதி போதாது.” என்று விடையளித்தான் இளையபல்லவன்.
“அகூதா அளித்த மரக்கலம்.” என்று முணுமுணுத் தான் கண்டியத்தேவன்.
“ஆம்.
“பல போர்களைக் கண்டிருக்கிறது.
“ஆம்.
“இதைவிடச் சிறப்பாக எப்படி அமைப்பது ஒரு போர்க்கலத்தை?”
இந்தக் கேள்விக்கு இளையபல்லன் பதிலேதும் சொல்லவில்லை. “பிறகு சொல்கிறேன் தேவரே?” என்று சட்டென்று வார்த்தையை முடித்துவிட்டுக் கோட்டையின் பாதுகாப்புக்கான உத்தரவுகளை இடுவதில் முனைந்தான். தனது உப தலைவர்களில் இருவரைக் கிழக்கு வாயிலையும், இருவரை மேற்கு வாயிலையும் காக்க உத்தரவிட்டான். மற்றும் இருவருக்கு நகர மக்களில் போருக்குத் தகுதி யுள்ளவர்களாகப் பொறுக்கிப் பாதுகாப்பு முறைகளில் பயிற்சியளிக்க உத்தரவிட்டான். கடைசியாக அமீரை நோக்கு, “அமீர்! இந்த நகரத்தின் அபாயமான பகுதியைக் காக்கும் பொறுப்பை உன்னிடம் அளிக்கப் போகிறேன். அந்த இடத்தைக் காப்பதில் உன் உயிருக்கு ஆபத்துத்தான். ஆனால் வேறு யாரிடமும் அதை ஒப்படைக்க எனக்குத் தைரியமில்லை.” என்றான்.
“புரிகிறது” என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்தான் அமீர்.
“குறுவாள்கள் உனக்கு அதிகம் தேவையாயிருக்கும்” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.
குறுவாள்களைப் பற்றிப் பிரஸ்தாபம் வந்ததும் அமீரின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. “தேவையானதை நமது மரக்கலத்திலிருந்து எடுத்துக் கொள்கிறேன். மேலும் தேவையாயிருக்குமானால் இங்குள்ள பட்டறைகளில் தயாரித்துக் கொள்கிறேன்” என்றான் அமீர் தன் பெரு உதடுகளை விரித்துப் புன்முறுவல் செய்து.
“பகட்பாரிஸான் மலைக்காட்டுப் பகுதியை நீ பாதுகாக்க வேண்டும்” என்றான் இளைய பல்லவன்.
“முன்பே தெரிந்ததுதான்” என்றான் அமீர்.
“நினைப்பூட்டவே மீண்டும் சொன்னேன்.” என்றான் இளையபல்லவன்.
ஆபத்தை இனிப்புப் பண்டம்போல் வரவேற்கும் சுபாவமுடைய அரபு நாட்டு அமீரின் பெருவிழிகள் மகிழ்ச்சியைக் கக்கின.
“உம்” என்று எழுந்த ஆமோதிப்புக் குரலிலும் உற்சாகம் இருந்தது.
“அந்தப் பகுதியில் கண்ணோட்டம் வைக்க எத்தனை வீரர்கள் தேவை?” என்று கேட்டான் இளையபல்லவன்.
“இருபது பேர் போதும்” என்றான் அமீர்.
அமீரின் திறமையையும் முன் யோசனையையும் உள்ளூர வியந்தான் இளையபல்லவன். ‘அதிகப்படி வீரர்களை அந்தப் பகுதியில் நடமாட விட்டால், பூர்வ குடிகள் எச்சரிக்கையடையலாம். ஊருக்குள் புக வேறு முறைகளைக் கையாளலாம். அதைத் தவிர்க்கவே அமீர் குறைந்த வீரர்களைக் கொண்டு அப்பகுதியைக் கண் காணிக்க முயலுகிறான்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட இளையபல்லவன், “அப்படியானால் உனக்கு நமது மரக்கலம் ஊதும் கொம்புகளில் ஒன்று தேவையா யிருக்கும்” என்றான்.
“ஆம் ஒன்று எனக்கு, இன்னொன்று உங்களுக்கு”! என்றான் அமீர்.
“நம்மிருவர் கொம்புகளில் எது ஊதப்படுகறதோ அங்கு வீரர்கள் விரைந்தால் போதும் “ என்று ஆமோதித்த படைத்தலைவன் அத்துடன் தனது உத்தரவுகளை முடித்துக் கொண்டான்.
மறுநாள் முதற்கொண்டு கோட்டைப் பாதுகாப்பு வேலைகள் மும்முரமாகத் துவங்கின. இரும்புப் பட்டறை களில் பெரு வேல்களும், வேல்களை வீசும் இரும்பு விற்களும் குறுவாள்களும் அடித்தும் வளைத்தும் தீட்டப் பட்டும் தயாராகிக் கொண்டிருந்தன. கடல்புற மதில் மேலிருந்த காவல் வீரரும் விஷ ஆம்பு எய்யும் வில்லாளி களும் குறைக்கப்பட்டு மதில்சுவரின் இடையிடையே இருந்த காவற்கூடங்களில் மட்டும் வீரர்கள் பத்துப் பத்துப்பேர் நிற்க வைக்கப்பட்டனர். எதிர்ப்பு ஏற்பட்டால் சுவர்களில் ஏணி போட்டு ஏறவும், எண்ணெய்க் குடங் களைத் தீயிட்டுக் கவிழ்க்கவும் நகரவா௫சுகளுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. கிழக்கு மேற்கு வாயில்களைக் காக்க நியமிக்கப்பட்ட இரு உபதலைவர்களும் காவலை மிகவும் வலுப்படுத்தினர். மற்ற நான்கு உபதலைவர்கள் மக்களுக்குப் பயிற்சியளித்தனர். மேற்கு வாசலிலிருந்து கடற்கரையை ஒட்டிய வண்ணம் ஸ்ரீவிஜயத் தலைநகருக்கு ஓடிய பாதை மூலம் வண்டிகள் பக்க நகரங்களுக்கு அனுப்பப்பட்டு உணவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. பகிட்பாரிஸான் மலைக்காட்டுப் பகுதியைக் கவனிக்க மதில்சுவர் தளத்திலிருந்த காவற் கூடத்தையே தனது அறையாக அமைத்துக் கொண்ட அமீர், இருபது வீரர்களை மட்டும் துணை கொண்டு இரவும் பகலும் அந்த மதில்மீது தானே சஞ்சரித்து வந்தான். எந்த நிமிஷத்திலும் காட்டுப் கரவான பகுதியிலிருந்து பதக்குகள் ஆம்போ வேலோ எய்து அவனைக் கொன்றுவிடலாமெனக் கோட்டை வீரா் எச்சரித்தும் அமீர் பயங்கரச் சிரிப்புச் சிரித்துவிட்டுத் தன் இஷ்டப்படி மதில் சுவரில் உலாவினான். அவன் காட்டிய தைரியம் மற்ற இருபது வீரர்களுக்கு மட்டுமல்ல, அந்த “நகரவாசிகளுக்கும் பெரும் துணிவை உஊட்டியதால் பூர்வகுடிகளைச் சமாளிக்கப் பெரும் மஇழ்ச்சிக் கூச்ச லுடன் ஏற்பாடுகளை நகர மக்களும் செய்தனர்.
அடுத்த ஒரு வாரம் அந்த மக்களைப் புது மனிதர் களாக அடித்தது. சுயநம்பிக்கை இழந்து பூர்வகுடிகளிடம் நடுங்கிக் கொண்டிருந்தவர்களைச் சுயநம்பிக்கையும் தைரியமும் உள்ளவர்களாக அடித்தது. நகர மக்கள் எதையும் சமாளிக்கத் துணிவு கொண்டார்கள். கடற்கரைக் கொள்ளையரிடமும் பெரும் மாறுதல் ஏற்பட்டு வந்தது. கோட்டையிலுள்ள சூதாட்ட அரங்கங்களில் பணத்தைப் பறிகொடுத்து வந்த கொள்ளையர் நகர மக்களின் மாறுதலைக் கண்டு மகிழ்ந்தனர். கடற் பகுதியில் பூர்வ குடிகள் எதிர்த்தால் அவர்களைச் சமாளிக்க முனைந்து தங்கள் மரக்கலங்களையும் தயார் செய்துகொண்டனர். இளையபல்லவன் அக்ஷ்யமுனையில் நுழைந்த நாளிலிருந்து சுற்றிலும் நின்ற கொள்ளையர் போர்க் கப்பல்களில் போர்க்கலங்கள் பழுது பார்க்கப்பட்டன. தீ ஆம்புகளை வீசும் விற்களின் திறனும் சோதிக்கப்பட்டது. பாய்களின் கிழிசல்கள் தைக்கப்பட்டன. பாய்களை இழுக்கப் புதுக் கயிறுகளும் கட்டப்பட்டன. தவிர, கரையில் இழுக்கப் பட்ட இளையபல்லவன் மரக்கலத்தைப் பழுது பார்ப்பதில் தீவிரமாக முனைந்து கோட்டையிலிருந்து வந்த மரக்கல அமைப்பாளருக்குப் பேருதவி புரிந்தனர்.
இளையபல்லவன் மரக்கலத்தைப் பழுது பார்க்கப் பகிட்பாரிஸான் காட்டுப் பகுதியிலிருந்து பெரும் மரங்கள் வெட்டப்பட்டுக் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டன. தச்சர்கள் அவற்றிலிருந்து பலகைகளும் புட்களும் தயாரித்தனர். கொல்லர்கள் இரும்புச் உலாகைகளை வடித்து அடித்தனர். நகரத்தின் உட்புறத்தைப் போலவே வெளிப் புறத்தில் இருந்த கடற்கரையிலும் பெரும் உலைகள் தீ நாக்குகளைக் காட்டின. சுத்தியல்களும் உளிகளும் சப்தித்தன.
இத்தனையையும் திருப்தியுடன் பார்த்துக்கொண் டிருந்த இளையபல்லவனின் மனத்தில் ஒரு பெரும் சந்தேகம் மட்டும் குடிகொண்டிருந்தது. ஒரு வாரத்துக்கு முன்பே எச்சரித்துப் போன வில்வலனோ அவனைச் சேர்ந்த பூர்வகுடிகளோ அந்த ஒரு வாரமும் நகர எல்லைக்குள் ஏன் தலைகாட்டவில்லையென்பது அவ னுக்குப் புரியவில்லை. பகிட்பாரிஸான் காட்டுப்பகுதி பெரும் அமைதியாய் இருந்ததும் பெரும் புதிராயிருந்தது. சிறிது தவறு நேர்ந்தாலும் ஊரில் புகுந்து, கொள்ளையும் கொலையும் விளைவிக்கும் தன்மையுடைய பூர்வகுடிகள் கடற்கரைப் பகுதியில் கொலை விழுந்து ஒரு வாராமாகியும் ஏன் எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லையென்பதும் தெரியாமல் தவித்தான் படைத்தலைவன். அவர்கள் சாந்தத்துக்குக் காரணம் தனது பாதுகாப்பு ஏற்பாடுகளா யிருக்க முடியாதென்பது அவனுக்கு நன்றாகத் தெரிந் திருந்தது. “அவர்கள் மெளனத்துக்கும் சாந்தத்துக்கும் என்ன காரணம்?” என்று யோசித்துக்கொண்டேயிருக்கையில் திடீரென ஒரு யோசனை உதயமாகவே, “ஆம், ஆம்! அப்படியிருந்தால்?” என்று நினைத்துச் சரேலெனத் தனது ஆசனத்திலிருந்து எழுந்தான். அப்பொழுது இரவு ஏறியிருந்தது. அறையை விட்டுத் தாழ்வரைக்கு வந்து ஆகாயத்தைப் பார்த்தான் இளையபல்லவன். பூச நக்ஷத்திரம் பெரும் கொத்தாக மேற்கே சாயத் தொடங்கி யிருந்தது. நள்ளிரவு அது என்பதைப் புரிந்துகொண்டான். அதே சமயத்தில் ஆந்தைகள் இரண்டு பெரிதாக அலறின.