அத்தியாயம் 37
எட்டாக் கனியும் கிட்டாக் கனியும்
கடற்கரையில் அந்தக் காலை நேரத்தில் கப்பலருகே நின்ற கருணாகர பல்லவன் தனது கேள்விக்கு விடுத்த கருத்தை உலுக்கும் பதிலைக் கேட்டதும் பெரும் அதிர்ச் சிக்கு உள்ளான கண்டியத்தேவன் கவலையும் பிரமையும் நிரம்பிய கண்களைப் படைத்தலைவன் மீது நாட்டினான். மேன்மேலும் ஏதேதோ கேள்விகளை உதிர்க்கக் கண்டியத் தேவன் நா துடித்ததானாலும் படைத்தலைவன் முகத்தி லிருந்த ஆழ்ந்த யோசனையின் விளைவாக அந்தக் கேள்விகள் நாவிலேயே உறைந்து விட்டன. முதல் நாளிரவு, தான் கோட்டையில் பலவர்மன் மாளிகையில் பார்த்த இளைய பல்லவனுக்கும், அன்று காலையில் கடற்கரைக்கு வந்துள்ள படைத்தலைவனுக்கும் பெருத்த வித்தியாச மிருக்கவே கண்டியத்தேவன் கவனித்தான். மூதல்நாள் இரவு மது வெறியிலிருந்த இளையபல்லவனுக்கும் அன்று காலை மிகத் தெளிவான புத்தியுடன் வந்திருக்கும் படைத் தலைவனுக்கும் பார்வையிலும் பேச்சியிலும் வித்தியாச மிருக்கவே செய்ததானாலும், அந்த வித்தியாசமெதுவும் முதல் நாளிரவு குடி வெறியில் இட்ட உத்தரவை மாற்றும் நிலையில் இல்லாததைக் கவனித்த கண்டியத்தேவன் மேலும் மேலும் பிரமிப்புக்கே உள்ளானான். மரக்கலத்தை மாற்றியமைக்க மாதம் ஒன்று பிடிக்கும் எனத் தான் கூறியதும், “ஆகலாம். ஆகட்டும். ஒரு மாதம் அவகாசம்தான் உமக்குக் கொடுக்க முடியும்.” என்று படைத்தலைவன் பதிலிறுத்ததிலிருந்து மரக்கலத்தை மாற்றியமைக்கும் துட்டத்தை அவன் மாற்றப் போவதில்லை, என்பதைப் புரிந்துகொண்ட கண்டியத்தேவன், “அதற்குப் பின்?” என்று ஒரூ கேள்வியையும் போட்டு வைத்தான்.
எந்தத் தாமதமுமில்லாமல் சட்டென்று வந்தது படைத் தலைவன் பதில். “அதற்குப் பின் நாம் இங்கு இருக்க மாட்டோம்.” என்றான் இளையபல்லவன் திடீரென்று. அந்தப் பதில் வீசின குரலில் மிகுந்த வேகமிருந்ததையும் பெரும் பொருளும் புதைந்து கிடந்ததையும் கண்டியத் தேவன் கவனித்தான். இருப்பினும் திடீரென்று கிடைத்த அந்தப் பதிலே அவனைப் பெரும் திகைப்புக்குள்ளாக்கியது. அந்தத் திகைப்புடன், “அப்படியானால் அப்படி யானால்...” என்று தட்டுத் தடுமாறி இழுத்தான் கண்டியத் தேவன்.
“இங்கிருந்து போய்விடுவோம். தொலைதூரம் போய் விடுவோம்.” என்ற இளையபல்லவன் பதில் முன்னைப் போலவே துரிதமாக வெளிவந்தது.
“எங்கு போகப்போகிறோம் படைத்தலைவரே?” கண்டியத்தேவன் கேள்வி கலக்கத்துடன் ஒலித்தது.
“அதைப் பிறகு சொல்கிறேன்.
ஆனால் ஒரு மாதத் துற்குமேல் இந்தத் துறைமுகத்தில் நமக்கு வேலையில்லை.” என்றான் இளையபல்லவன்.
“இந்தத் துறைமுகத்தில் தங்கப் போவதாகச் சொன் னீர்களே?”
“ஆம், சொன்னேன்.
“கலிங்கத்தின் படைபலத்தை உடைக்க...
“இதை ஒரு தளமாக உபயோகிக்கத் திட்டமிட்டேன்.
“அந்தத் இட்டம்?”
“இப்பொழுது மாறிவிட்டது.
“இளையபல்லவன் பதில் பெரும் விந்தையாயிருந்தது தேவனுக்கு. “ஏன் மாறிவிட்டது?” என்று அவன் கேட்ட கேள்வியிலும் வியப்பு மண்டிக் கிடந்தது.
இளையபல்லவன் கண்டியத்தேவனைச் இலை விநாடிகள் கூர்ந்து நோக்கினான். “நிலைமைக்குத் தக்கபடி திட்டங்களை மாற்றுவது விவேகம் தேவரே.” என்ற இளைய பல்லவன் முகத்தில் தீவிரமான உறுதியுடன் கவலையும் மண்டிக் கிடந்ததைக் கண்டியத்தேவன் கவனித்தான்.
ஆகவே கேட்டான் தேவன், “அப்படியென்ன நிலைமை இங்கு ஏற்பட்டிருக்கிறது?” என்று.
“மிகவும் அபாயமான நிலைமை ஏற்பட்டி ருக்கிறது தேவரே! இன்னும் ஒரு மாத காலத்தில் நாம் மட்டும் மூன் யோசனையுடன் நடந்து கொள்ளாவிட்டால் நீரும் நானும் நமது மாலுமிகளும் அழிக்கப்படுவோம். இந்த அக்ஷய முனையில் பெரும் உயிர்ச்சேதமும் வேறுவித நாசமும் ஏற்படும். நாம் இப்பொழுது எரிமலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிறோம். அது உள்ளூரப் புகையத் துவங்கி யிருக்கிறது. வெடிக்க ஒரு மாத காலமிருக்கிறது. அது வெடிக்கும்போது...” என்று பேசிக்கொண்டு போன இளைய பல்லவன் சற்றுப் பேச்சை நிறுத்திக் கண்டியத் தேவனைத் தன் கூரிய கண்களால் நோக்கினான்.
“அது வெடிக்கும்போது?” கண்டியத்தேவன் குரலில் கலக்கமிருந்தது, குழப்பமும் இருந்தது.
“அக்கினிப் பிழம்பு நம்மை அழிக்காதிருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்றான் இளையபல்லவன்.
“எப்படி ஏற்பாடு செய்வது?” என்று கேட்டான் கண்டியத்தேவன்.
“அந்தப் பொறுப்பை எனக்கு விட்டுவிடுங்கள், அக்கினிப்பிழம்பு நம்மை அழிக்காதது மட்டுமல்ல. நமது எதிரிகளை அழிக்கவும் அதைத் திருப்பிவிட வேண்டும்,” என்றான் இளையபல்லவன்.
இந்த விளக்கத்தைக் கேட்கக் கேட்கக் கண்டியத் தேவன் முகத்தில் பெரும் சந்தேகச் சாயை படர்ந்தது. அந்தச் சாயையின் உட்கருத்தைப் புரிந்துகொண்ட இளைய பல்லவன் முகத்தில் புன்முறுவல் விரிந்தது.
“மனத்திலுள்ளதை விட்டுக் கேளுங்கள் தேவரே.” என்றான் இளைய பல்லவன், அந்தப் புன்முறுவலைத் தொடர்ந்து.
“மனத்தில் அப்படியெதுவும் இல்லை.
“கண்டியத் தேவன் குரலில் தயக்கமிருந்தது.
“பயப்படாமல் சொல்லும், “ என்று ஊக்கினான் படைத்தலைவன்.
“மன்னிக்க வேண்டும்.
தங்கள் போக்கு சில நாட்க ளாகவே...” என்று மென்று விழுங்கினான் தேவன்.
“கண்ணியமானவர்கள் ஒப்புக்கொள்ளத் தக்கதாயில்லை” என்று முடித்தான் இளையபல்லவன்.
கண்டியத்தேவன் சில விநாடிகள் குழம்பினாலும் இறுதியில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “ஆம், படைத்தலைவரே॥! கண்ணியமானவர்கள் ஒப்புக் கொள்ளத்தக்கதாயில்லை.
அது மட்டுமல்ல, நாமிருக்கும் நிலைமைக்கும் சாதகமல்ல அது.
நீங்கள் மிதமிஞ்சிக் குடிக்கிறீர்கள்.” என்றான்.
இளையபல்லவன் முகத்தில் புன்முறுவல் மேலும் விரிந்தது.
“யார் சொன்னது அப்படி?” என்று வினவினான் படைத்தலைவன், மெல்ல நகைத்து.
“யாரும் சொல்ல வேண்டியதில்லை.” என்றான் கண்டியத்தேவன்.
“நீங்களே கண்டிருக்கிறீர்கள்...” என்று கூறிய இளைய பல்லவன் பதிலில் ஏளன மிருந்தது.
அந்த ஏளனத்தைக் கண்டியத்தேவன் கவனித்தானா னாலும் அதை லட்சியம் செய்யாமலே சொன்னான்.
“ஆம் நானே கவனித்தேன்.
நான் மட்டுமல்ல எல்லோரும் கண்டிருக்கிறார்கள், “ என்று
“கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.” என்று பழமொழி யொன்றைச் சொன்னான் இளையபல்லவன் சிரித்துக் கொண்டே.
“இதில் தீர விசாரிக்க வேண்டிய அவசியமில்லை.” என்றான் கண்டியத்தேவன் சினத்துடன்.
“அராய்ச்சிக்கு அவசியமிருக்கலாம், ‘‘ என்றான் இளையபல்லவன்.
“எந்த ஆராய்ச்சிக்கு?”
“நாம் காண்பது சரிதானா என்ற ஆராய்ச்சிக்கு.
“அந்த அராய்ச்சியும் அவசியமில்லை.
நீங்கள் குடியில் மயங்கியிருந்ததை நேற்றிரவு நானே கண்டேன்,” என்றான் கண்டியத்தேவன் உறுதியுடன்.
இளையபல்லவனின் இதழ்களில் இளநகை பூத்தது. “அதிகமாகக் குடித்திருந்தேனா?” என்று கேட்டான் அவன். ஆம். “உளறினேனோ?” ஆம். “என்ன உளறினேன்?” நமது சன மரக்கலத்தைப் பாரதத்தின் மரக்கல மாக்கச் சொன்னீர்கள்...
“வேறு என்ன சொன்னேன்?”
“அதிலும் ஸர்ப்பமந்திரம் வேண்டாம் - மத்திய மந்திரம் வேண்டாம் - அக்ரமந்திரமாக்கிவிடு என்றீர்கள்.
“வேறு என்ன சொன்னேன்?”
“அக்ரமந்திரந்தான் வேகமாகப் போகும்.
அக்ர மந்திரந்தான் நன்றாகப் போரிடும்.
அப்படி மாற்றிவிடு என்றீர்கள்.
“இப்படியா உளறினேன்?” என்று அச்சரியத்துடன் கேட்டான் இளையபல்லவன்.
“ஆம்.” என்று பதில் கூறினான் தேவன்.
“அப்படியானால் தேவரே, இந்த அக்ஷயமுனையின் மதுவை தான் பாராட்டுகிறேன்.” என்றான் இளைய பல்லவன்.
“இதில் பாராட்ட என்ன இருக்கிறது?” எரிச்சலுடன் எழுந்தது கண்டியத்தேவன் கேள்வி.
இளையபல்லவன் நகைத்துவிட்டுச் சொன்னான் “என்ன அப்படிக் கேட்கிறீர்கள் தேவரே! என் உளறவில் எத்தனை கோர்வையிருக்கிறது பார்த்தீர்களா? மரக் கலத்தை அக்ரமந்திரமாக்கக் காரணத்துடன் கூறியிருக்கிறேன். இந்த மதுவை அருந்த முற்பட்டது முதல் என் மூளை எத்தனை துரிதமாக வேலை செய்கிறது! மது அருந்தியபின் கோட்டைப் பாதுகாப்பு எத்தனை பலப்படுத்தப்பட்டிருக்கிறது! மதுவை அருந்த முற்பட்டபின் தெரியாத. எத்தனை விஷயங்கள் அறிவில் பளிச்சிடு இன்றன! அகா! எத்தனை சிறந்த மது இது! இதை ஏன் நாம் அருந்தக்கூடாது? சித்தத்தைத் துலக்கும் மது இது. மர்மங்களை உடைக்கும் மது இது. நமக்கு விழிப்பூட்டுவதும் இந்த மதுதான். வாழ்க அக்ஷ்யமுனை. வாழ்க அதன் மது. அதை நீங்களும் அருந்துங்கள் தேவரே. உமது மூளையும் துலக்கப்படும். விஷயங்கள் பளிச்சென்று புரியும் உமக்கு...
“இப்படிப் பேசிக்கொண்டே போன படைத்தலை வனை, “போதும், போதும். நிறுத்துங்கள் மது புராணத்தை.” என்றான் தேவன், குரலில் கசப்பு மண்டிக்கடக்க.
இளையபல்லவன், கண்டியத்தேவனின் கண்டனத்தை லட்சிம் செய்யாமலே மேலே தொடர்ந்தான் “தேவரே! அக்ஷயமுனையின் மதுவை மட்டும் நான் அருந்தாதிருந்தால் பல விஷயங்கள் என் மூளைக்கு எட்டி யிருக்காது. பல மர்மங்கள் துலங்கியிருக்காது. மர்மத்தின் அஸ்திவாரங்களையும் நான் அறிந்திருக்க முடியாது. அதை அருந்தத் துவங்கினேன், அதனால் உண்டான பலன் சொல்ல முடியாது. போகப் போக உமக்கே தெரியும் பலன் என்ன என்பது. உதாரணமாக, நமது மஞ்சளழகி மகா ராணியென்பதை உமக்கு யார் சொன்னது? நான்தானே? நான் சொல்லாவிட்டால் உமக்கு அது தெரிந்திருக்குமா? தவிர...இந்த இடத்தில் பேச்சைச் சற்று நிறுத்தினான் இளையபல்லவன்.
கண்டியத்தேவன் இதயத்தில் பெரும் சந்தேகம் எழுந்தது. ஒருவேளை இப்பொழுதும் குடித்துவிட்டே இளையபல்லவன் வந்திருக்கிறானோ என்ற நினைப்பு ஏற்படவே அவனை நன்றாக உற்று நோக்கினான் தேவன். ஆனால் இளையபல்லவனிடம் மதுவாடை ஏதும் அடிக்கா துருந்ததைப் பார்த்துச் சிறிது தேற்றிக் கொண்டானென் றாலும் முதல்நாள் அருந்திய மதுவின் சேஷ்டை காலை யிலும் தொடர்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படவே, “இளையபல்லவரே, இப்பொழுது உமது பேச்சில் தொடர்ச்சி இல்லை,” என்றான்.
“நேற்றிரவு?”
“தொடர்ச்சி இருந்தது.
“இப்பொழுது புரிகிறதா? மது அருந்தியபோது தொடர்ச்சி இருந்தது.
மது அருந்தாத போது தொடர்ச்சி இல்லை...
“ஒரு வேளை அந்த மதுவின் சேஷ்டை...
“காலையில் இருக்குமென்று நினைக்கிறீரா 7”
“நினைத்தால் தவறா?”
“தவறுதான்.
“ஏன்? “.
“மதுவின் சேஷ்டையிருந்தால் பேச்சில் தொடர்ச்சி இருக்க வேண்டுமே?”
“இதற்கு என்ன பதில் சொல்வதென்று கண்டியத் தேவனுக்குப் புரியாததால், “மஞ்சளழகி மகாராணியென்று உங்களுக்கு யார் சொன்னது?” என்று குறுக்குக் கேள்வியை வீசினான்.
“ஒருவர் சொல்ல வேண்டுமா? அவளைப் பார்த் தாலே தெரியவில்லையா ?”
“இது பார்த்துத் தெரிகிற விஷயமல்லவே.
“வேறு எப்படித் தெரிய வேண்டும்?”
“முடிசூட வேண்டும், நாடு வேண்டும்.
“இதைக் கேட்டதும் ஏதோ சொல்லத் துவங்கிய இளையபல்லவன் சட்டென்று சொற்களை அடக்கக் கொண்டு பேச்சை வேறு திக்கில் திருப்பினான். “இந்த வீண் தர்க்கம் எதற்கு தேவரே? அவள் மகாராணியாயிருந்தா லென்ன இல்லாவிட்டால் என்ன? என் இதயராணி அவள். அவைளப் போன்ற ஒரு பெண் இந்த மண்டலத்தில் இது வரை பிறந்ததில்லை. இனி பிறக்கப் போவதுமில்லை. அபூர்வப் பெண் அவள். அபூர்வமான வாழ்க்கையைப் படைத்தவள். இந்த உலகமே அவளை மறக்கலாம். ஆனால் என் உயிர் உள்ள மட்டும் அவளை நான் மறக்க மாட்டேன். எத்தனை எட்டாக் கனி அவள்...” என்று சொல்லிய இளையபல்லவன் பெருமூச்செறிந்தான்.
“எட்டாக்கனியா!” வியப்புடன் வினவினான் தேவன்.
“ஆம் தேவரே!”
“உமது கைக்குக் கிட்டித்தானே இருக்கிறது.
“கையின் அருகிலிருக்கும் பல பொருள்களை நாம் தொட முடிகிறதா?”
“ஏன் முடியாமலென்ன? உங்களுக்கு மஞ்சளழகியை மணமுடிக்கத் தயாராய் இருக்கிறாரே பலவர்மர்?”
இளையபல்லவன் முகத்தில் வேதனைப் புன்முறுவல் படர்ந்தது. “அவளை எனக்கு மணமுடிக்கப் பலவர்ம னாலும் முடியாது. இந்த நாட்டுச் சக்கரவர்த்தியாலும் முடியாது. பாவம் மஞ்சளழக! எத்தனை சிக்கலான பிறவி! எத்தனை சிக்கலான வாழ்க்கை! துன்பப்படவே பெண் ணாகப் பிறந்தாள் அவள். ஆனால் துன்பத்தை ஓரளவு நான் துடைக்க முடியும். அதற்காகவே துடிக்கிறேன். அதற்காகவே இந்த மரக்கலத்தை மாற்றுகிறேன். அகவே சிக்கிரம் மாற்றியமையுங்கள் தேவரே!” என்றான் இளையபல்லவன், வேதனை குரலிலும் ஒலிக்க.
இளையபல்லவன் பேச்சு பெரு மர்மமாயிருந்தது கண்டியத்தேவனுக்கு. மஞ்சளழகியின் வாழ்வுக்கும் மரக்கலத்தை மாற்றியமைப்பதற்கும் என்ன சம்பந்தம் என்பது அவனுக்குச் சற்றும் புரியவில்லை. இளைய பல்லவன் மேலும் பேசிய பேச்சு அவன் புத்தியில் உதித்த மர்மத்தை அதிகப்படுத்தயதேயொழிய குறைவுபடுத்த வில்லை.
“தேவரே! இந்த மரக்கலத்தை அக்ரமந்திரமாக்கும் பொழுது முகப்பை எப்படியமைப்பீர்? பக்கப் பகுதிகளை எப்படி அமைப்பீர்?” என்று வினவினான் படைத் தலைவன்.
“சிங்க முகம், பாம்பு முகம், யானை முகம், புலி முகம், எருமை முகம், பறவை முகம், இப்படி ஏதாவதொன்று அமைக்கத்தான் கப்பல் சாத்திரம் இடம் தருகறது’ என்றான் கண்டியத்தேவன்.
“எந்த முகத்தை நமது மரக்கல முகப்பாக அமைக்க உத்தேசிக்கறீர்?”
“புலி முகத்தை.
“ஏன்? நமது சோழநாட்டுக் கொடி புலிக் கொடியல்லவா?”
“ஆம்.
இருப்பினும் நாம் சோழ நாட்டில் இப்பொழு தில்லை.
புலி முகம் வேண்டாம்.
பறவை முகத்தை அமையுங்கள்.
“கண்டியத்தேவன் பெரிதும் ஆச்சரியப்பட்டான்.
நாட்டுப் பற்றும், நாட்டுக் கொடிப் பற்றும் மிக அதிகமாக உடைய இளையபல்லவன், தன் நாட்டுக் கொடியின் அடையாளம் தேவையில்லையெணச் சொன்னது பெரும் வியப்பாயிருந்தபடியால் அவன் கேட்டான்.
“எந்தப் பறவையின் முகத்தை அமைக்கட்டும்” என்று.
“புறாவின் முகம்.” தடையின்றி வந்தது இளைய பல்லவன் பதில்.
“புறா முகமா?”
“ஆம். புறாவின் முகம் முகப்பாக இருக்கட்டும். பக்கப் பகுதியை புறாவின் சிறகுகளைப் போல் அமையுங்கள். இந்த மரக்கலம் இனி கடலில் பறந்து செல்லும் பெரும் புறா. இந்தக் கடல்புறா சோழநாட்டு வரலாற்றைக் கடற் பகுதியில் விரிவுபடுத்தும். இதன் புகழைத் தமிழகக் கவிகள் பாடுவார்கள். கடல்புறா இன்றியமையாத கடற் போர்க் கலமாக கடற் காவியமாக மாறும்.” என்று கூறிய இளைய பல்லவன், “இப்படி வாரும் தேவரே.” என்றழைத்து, தேவன் காதுக்கருகில் சில வார்த்தைகளை மிக ரகசியமாகச் சொன்னான்.
ரகசியத்தைக் கேட்ட கண்டியத்தேவன் மலைத்து நின்றான். அந்த மலைப்புடன் மலைப்பாக அவன் ஏதோ சொல்லவும் துவங்கினான். “உம், பேச வேண்டாம், என்பதற்கறிகுறியாக வாயில் விரலை வைத்து எச்சரித்த இளையபல்லவன், “மஞ்சளழக எட்டாக் கனி! கடல்புறா கட்டாக் கனி! புரிகிறதா!” என்று கூறிப் பெரிதாக நகைத்தான். பிறகு விடுவிடுவென கோட்டையை நோக்கி நடக்கத் துவங்கினான்.
கண்டியத் தேவன் மலைத்துப் போய் படைத்தலைன் போவதைப் பார்த்துக்கொண்டு நின்ற இடத்திலேயே நின்றான். அவன் மலைப்பே பெரிது. அதைவிடப் பெரிய மலைப்பு மாளிகையில் காத்திருந்தது கூலவாணிகன் சேந்தனுக்கு, இளையபல்லவன் இட்ட ஓரே உத்தரவைக் கேட்டதும் அடியோடு நிலைகுலைந்து தடுமாறிப் போனான் கூலவாணிகன். “ஐயையோ! என்னால் முடியாது. பெரும் ஆபத்து. என் தலை போய் விடும்” என்று உளறினான் பெரும் கிலி குரலில் ஒலிக்க.