அத்தியாயம் 39

இரகசியத்தின் திறவுகோல்

குணதிசைச் சாளரத்தின் மூலம் சுள்ளென்று கன்னத்திலடித்த கதிரவன் கிரணங்களால் எழுதப்பட்டுக் கண் விழித்துக்கொண்ட கூலவாணிகன் சேந்தன் தனது பஞ்சணையில் இருமுறை புரண்டு படுத்துத் தன் கண்களையும் நன்றாகக் கலக்கிவிட்டுக் கொண்டான். பிறகு கூரையிலிருந்த சித்திரங்களை அராய்ந்து சில விநாடிகள் மிரண்டு விழித்தான். மறுபடியும் கண்களைப் பலமாகத் தேய்த்துக் கலக்கி விட்டுக்கொண்டு எதிரே சற்றுத் தூரத்திலிருந்த மரத்தின் மீது கடந்த பெரும் மெழுகு உருண்டையையும் பார்த்துத் திடீரெனப் பஞ்சணையில் துள்ளி உட்கார்ந்தான். மெழுகு உருண்டை இருந்த மஞ்சத்தில் மெழுகுக்கு அருகே ஒரு மதுக்குப்பியும் கண்ணமும் இருப்பதையும் கவனித்துப் பெரிதும் குழம்பினான். “இரவு நான் படுக்க முயலும் போது இளைய பல்லவர் இந்த மதுக்குப்பியையும், கிண்ணத்தையும் அனுப்பியது உண்மைதான். இருந்தாலும் நான் குடிக்க வில்லை. எப்படி குடிக்க முடியும்! எனக்கும்தான் பயங்கரப் பணியை இட்டிருந்தாரே படைத்தலைவர்!” என்று பஞ்சணையில் உட்கார்ந்தபடி, தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். அந்த மதுக்குப்பியும், கண்ணமும் வந்தது அவனுக்கு நன்றாக நினைவிருந்தது. பேழையிலிருந்த மெழுகை எடுத்து மதுக்குப்பியிருந்த மஞ்சத்தில் வைத்ததும் ஞாபகத்தில் இருந்தது. அத்துடன் மதுக்குப்பியை எடுக்காமல் தான் மெழுகை மட்டும் எடுத்துக் கொண்டு பலவர்மன் அறைக்குச் சென்றதும் திட்டமாக நினைப்பி லிருந்தது கூலவாணிகனுக்கு. அதுமட்டுமல்ல, சென்ற இரவில் நடந்தது அனைத்துமே அவன் புத்தியில் தெளி வாகத் தென்பட்டன.

நள்ளிரவில் தான் ஓசைப்படாமல் நடந்து பலவர்மன் அறையை நாடியது, கதவைத் தொட்டதும் கதவு திறந்து கொண்டது, பலவர்மன் ரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தது, தான் வெளியே ஓட முயன்றது, பிறகு ‘நில்’ என்ற சொல் தன்னைத் தடுத்தது ஆகிய ஓவ்வொரு நிகழ்ச்சியும் சந்தேகமறத் தெரிந்தது கூலவாணிகன் சேந்தனுக்கு. அந்தக் காலை நேரத்தில் கூட முதல் நாளிரவு அறையின் பயங்கரச் சூழ்நிலை அவன் கண் முன்பு எழுந்து அவனை நடுங்க வைத்தது. முதுகில் குருதி பாயக் கிடந்த பலவர்மனும் அவனால் கொலை செய்யப்பட்டவர்களின் சித்திரங்கள் பக்கச் சுவர்களிலிருந்து கோரவிழி விழித்த பயங்கரமும் கண்முன்பு எழுந்ததால், காலை நேரத்திலும் நடுங்கினான் சேந்தன். ‘நில்’ என்ற சொல்லைத் தொடர்ந்து வந்த பூரண கவசமணிந்த அமீர் தன்னை அறையை விட்டு ஓட விடாமல் தடுத்து, குப்புற விழுந்து கடந்த பலவர் மனைப் புரட்டிவிட்டுக் கழுத்திலிருந்த சாவிக்கு மெழுகு ஒற்றி எடுக்கக் கட்டளையிட்டதும் மெழுகு ஒற்றப்பட்டவுடன் சென்றுவிட்டதும் நன்றாகப் புத்தியில் நடமாடவே, அடுத்தபடி என்ன நடக்கிறதென்பதை அறியாமல் சேந்தன் திணறினான். ‘மெழுகு ஒற்றியபிறகு என்ன நடந்தது? நான் எப்படி இங்கே வந்தேன், என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்ட சேந்தன், அடடா? மெழுகில் சாவியின் அமைப்பு இருக்குமே! அதை யாராவது பார்த்துவிடப் போகிறார்கள்!” என்று கிலி பிடித்துச் சரேலெனப் பஞ்சணையை விட்டிறங்கி மஞ்சத்துக்காகப் பாய்ந்து அங்கிருந்த மெழுகு உருண்டையைக் கையிலெடுத்தான். மெழுகில் சாவியின் அமைப்பு ஏதுமில்லை. அது ஒற்றியெடுத்த மெழுகாகவே தெரியவில்லை சேந்தனுக்கு. அதனால் பெரும் குழப்பத்துக்குள்ளான சேந்தன், மதுக் கிண்ணத்தை எடுத்துப் பார்த்தான். அதன் அடியில் சிறிது மது தங்கிக் கிடந்தது. அதன் வாடையும் விபரீதமாயிருந்தது.

கூலவாணிகன் யைத்தியம் பிடிக்கும் நிலைக்கு வந்து தனது மண்டையை இருமுறை பட்டென்று கைகளால் தட்டிக் கொண்டான். “நான் உண்மையில் பலவர்மன் அறைக்குச் சென்றேனா அல்லது அத்தனையும் கனவா? நான் கட்டளையை நிறைவேற்றநினேனா? அல்லது மதுவைக் குடித்து மயங்கிப் பஞ்சணையில் உறங்கி விட்டேனா? தவிர மதுவில் மயக்க மருந்தன் வாடை அடிக்கிறதே? யார் போட்டிருப்பார்கள்? பலவர்மனுக்குத் தான் ஒற்றர்கள் அதிகமாயிற்றே! ஒருவேளை அவன்.. .?” என்று நினைத்துப் பார்த்து, “சே, சே! இருக்காது! இருக்காது என்ன? திட்டமாய் இல்லை. நான் குடிக்கவில்லை. குடித்தாலல்லவா மயக்க மருந்து என்னை வீழ்த்தி யிருக்கும்!” என்று பலபடி நினைத்துத் தண்டாடிய கூல வாணிகன் இது அத்தனைக்கும் விளக்கத்தை அமீரிட மாவது, படைத்தலைவனிடமாவதுதான் கேட்க வேண்டும் என்று தீர்மானித்துக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு படைத் தலைவனிருக்குமிடத்தை நோக்கி நடந்தான். சேந்தன் மாடியின் இரு வாசல் அறைக்குள் கையும் மெழுகுமாக நுழைந்தபோது அமீரும் படைத் தலைவனும் மிக ரகசியமாக, எதையோ பேசிக்கொண் டிருந்தார்கள். அவர்களிருவரையும் மாறி மாறிப் பார்த் தான் சேந்தன் பல விநாடிகள். அவனது மருண்ட பார்வையைக் கண்ட படைத்தலைவன், “என்ன பார்க் கிறாய் சேந்தா? வா உள்ளே! மெழுகில் அமைப்பு எடுத்து விட்டால் அதை இங்கு கொண்டு வருவானேன்? நீயே வார்ப்படக்காரனிடம் கொடுத்திருக்கலாமே?” என்றான்.

சேந்தனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. “மெழுகில் அமைப்பு இல்லை.” என்றான் குழப்பத்துடன்.

இளையபல்லவன் இமைகள் மேல் எழுந்து கோபமும் கேள்வியும் கலந்த சாயையை முகத்தில் படரவிட்டன. “வெறும் மெழுகை என் கண்கள் பார்த்ததில்லை என்ற நினைப்பா உனக்கு!” கோபம் குரலிலும் ஒலிக்கக் கேட்டான் படைத்தலைவன்.

“இல்லை படைத்தலைவரே” என்றான் சேந்தனும் சற்றுக் கோபத்துடன்.

“பின் எதற்கு இந்த மெழுகைக் கொண்டு வந்தாய்?” படைத்தலைவன் கேள்வி முன்னைவிட உக்கிரமாக எழுந்தது.

“உங்களுக்குக் காட்டக் கொண்டு வந்தேன். அது மட்டுமல்ல...” என்று கோபம் தணியாமலே சொன்னான் சேந்தன்.

“வேறென்ன?”

“விளக்கமும் கேட்க வந்தேன்.

“என்னிடமா?”

“முதலில் உங்களிடந்தான் விளக்கம் கேட்க எண்ணி னேன். இப்பொழுது கருத்தை மாற்றிக்கொண்டு விட்டேன்.

“எப்படி மாற்றிக் கொண்டாய்?”

“அமீர்தான் பதில் சொல்ல வேண்டும் எனக்கு” என்று உக்கிரத்துடன் கூறிய கூலவாணிகன், அறைக்குள் வந்து கதவையும் சாத்திவிட்டு, “அமீர்! இப்பொழுது நாம் பேசலாம் தெளிவாக.” என்றும் அமீரை நோக்கிச் சொன்னான்.

அமீரின் பெருவிழிகள் வியப்பினால் இருமுறை உருண்டன. “என்ன பேச வேண்டும் நாம்?” என்று வினவி னான் அமீர் வியப்புக் குரலில் பலமாக ஒலிக்க.

“நான் சாவியில் ஒற்றி எடுத்த மெழுகு எங்கே?” என்று கேட்டான் கூலவாணிகன்.

“என்ன உளறுகிறாய் சேந்தா? ஏது சாவி? என்ன மெழுகு?” என்று மிதமிஞ்சிய ஆச்சரியத்துடன் மறுபடியும் வினவினான் அமீர்.

கூலவாணிகன் பொறுமை இழந்தான். “அமீர்! என்னிடம் விளையாடாதே, தேற்றிரவு சந்தித்தபோது “என்ன செய்தாய் என்னை?” என்று மிகுந்த சீற்றத்துடன் கேட்டான்.

அமீரின் கண்களிலிருந்த ஆச்சரியச் சாயை மூக மெங்கும் படர்ந்தது. “நேற்றிரவு உன்னைச் சந்தித்தேனா!” என்று கேட்டான் அமீர் கூலவாணிகனை உற்று நோக்கி.

“ஆம்.” கூலவாணிகன் குரல் உறுதியாயிருந்தது.

“எங்கு சந்தித்தேன்?”

“பலவர்மனின் அந்தரங்க அறையில்?”

“அக்ஷ்யமுனைக் கோட்டைத் தலைவன் அறை யிலா!”

“ஆம்.

“அங்கு எதற்காகச் சென்றாய் நீ?”

“படைத்தலைவர் கட்டளையை நிறைவேற்ற.

“அங்கு என்னைச் சந்தித்தாயா?”

“ஏன் உனக்கு நினைப்பில்லையா ?”

இதைக் கேட்ட அமீர் ஏளனம் தொனிக்க நகைத் தான். “நினைப்பா! இருக்கிறது இருக்கிறது! உனக்கும் எனக்கும் பலவர்மன் அவன் அறையில் விருந்து வைத் தானா?” என்று அமீரின் கேள்வியிலும் ஏளனம் மண்டிக் கடந்தது.

கூலவாணிகன் புத்தி மேலும் மேலும் குழம்பத் தொடங்கியது. தன் நிலையைப் பற்றியே பெரும் சந்தேகம் அடைந்தான் அவன். இருப்பினும் சமாளித்துக்கொண்டு, “பலவர்மன் விருந்து வைக்கும் நிலையில் இல்லை, உனக்கே தெரியும் அது?” என்று கூறினான் சேந்தன்.

“வேறு எப்படி இருந்தான் சேந்தா?”

“மஞ்சத்தில் குப்புற விழுந்து கடந்தான்.

“கொலை செய்யப்பட்டா?”

“இருக்கலாம்.

“ஏன் இருக்கலாம்?”

“அவன் முதுகில் குருதி மண்டிக் கிடந்தது.

“கொலை செய்யப்பட்டிருந்தால் ஒருவேளை அந்தக் கொலையை நான் செய்தேன் என்றுகூடச் சொல்லுவாய் போலிருக்கிறது?”

இப்படித் திரும்பத் திரும்பத் தன்னைக் கேவி செய்து ஏளனத்துடன் பேசிய அமீர்மீது எரிந்து விழுந்தான் சேந்தன். “வேறு யாரும் அங்கில்லை, பலவர்மன் குருதி பாயக் குப்புறக் கிடக்கிறான்.

இரண்டும் இரண்டும் நான்கு அல்லவா?” என்றான்.

இதைக் கேட்டதும் இடி.

இடியென நகைத்த அமீர், ஏன் சேந்தா? அந்தக் கொலையை நீ செய்திருக்கக் கூடாதா? நீயும்தானே அறையிலிருந்ததாகச் சொல் கிறாய்?” என்று சிரிப்புக்கிடையே கேட்கவும் செய்தான்.

நான் பிறகுதான் வந்தேன்” என்றான் சேந்தன் ஏற்றத்துடன்.

“அப்படிச் சொல்வது நீ.

இந்த நாட்டு நீதிபதிகள் ஒப்புக்கொள்ள வேண்டுமே?” என்றான் அமீர்.

“அமீர்! விளையாடாதே, கொலை செய்தது நானல்ல. உனக்கே தெரியும் அது. எனக்கு முன்பு நீதானிருந்தாய் அந்த அறையில்” என்று குழறினான் சேந்தன்.

“அதைச் சொல்ல வேண்டியது நீ அல்ல.” என்றான் அமீர்,

“வேறு யார்?” என்றான் சேந்தன்.

“படைத்தலைவர். பளிச்சென்று வந்தது அமீரின் பதில். மேலும் சொன்னான் அமீர், “கொலை செய்ததைப் பற்றி அஞ்சாதே சேந்தா! உன்னை நானும் படைத் தலைவரும் கைவிட மாட்டோம். போயும் போயும் யாரைக் கொலை செய்துவிட்டாய்? எதிரியைத்தானே?”

பரிதாபத்தை நாடும் பார்வையொன்றைக் கூல. வாணிகள் படைத்தலைவனை நோக்கி வீசினான். இதுவரை அவ்விருவர் பேச்சிலும் குறுக்கிடாமல் கேட்டு வந்த இளையபல்லவன் பஞ்சணையிலிருந்து மெல்ல எழுந்து கூலவாணிகன் அருகில் வந்து, “சேந்தா! என்ன இன்று காலையில் ஏதேதோ உளறுகிறாய்? யார் யாரைக் கொலை செய்தது? நேற்றிரவு முழுவதும் அமீர் இந்த மாளிகைப் பக்கமே வரவில்லையே? காட்டுப் பகுதியில் பூர்வகுடிகளின் நடமாட்டம் அதிகமாயிருக்கிறது. இரவு பூராவும் அங்கல்லவா காவலில் இருந்திருக்கிறான் அமீர். ஏதாவது கனவு கண்டாயா?” என்று கேட்டு, கூலவாணிகன் தோளிலும் கையை வைத்து, “என்ன ஆயிற்று நான் சொன்ன வேலை?” என்றும் விசாரித்தான்.

கூலவாணிகன் என்ன சொல்வதென்று அறியாமல் விழித்தான். மீண்டும் பழைய விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்து, “நான் சொல்வதெல்லாம் உண்மை. நம்புங்கள் படைத்தலைவரே, உங்கள் கட்டளைப்படி நான் பலவர்மன் அறைக்குள் நுழைந்ததும் உண்மை. அங்கு...“என்று தொடர்ந்ததை இடைமறித்த இளையபல்லவன், “பலவர்மன் கொல்லப்பட்டுக் குருதியுடன் குப்புறக் கிடந்தான். பிறகு அமீர் உன்னைச் சந்தித்தான். சரி சரி.” என்று கூறி, “நீ பலவர்மன் அறைக்குப் போகவே இல்லை, ஒன்று நீ குடித்திருக்க வேண்டும். அல்லது உறங்கி கனவு கண்டிருக்க வேண்டும்.

“படைத்தலைவன் இப்படிச் சேந்தனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியில் தாரைகள் சப்தித்தன. குதிரைகள் வந்து நிற்கும் குளம்பு ஒலிகளும் கேட்டன். தாரைகள் ஊதப்பட்டதாலும், குதிரைகள் வந்து நின்ற தாலும், இளையபல்லவனும் அமீரும் அறைக்கதவைத் திறந்துகொண்டு மாடியின் வெளிப்புறம் செல்லவே, சேந்தனும் அவர்களைப் பின்தொடர்ந்து கைப்பிடியில் சாய்ந்து அவர்களுடன் தானும் மாளிகையின் வாசலில் நடப்பதைக் கவனித்தான். தாரைகள் ஊதியதைத் தொடர்ந்து, பலவர்மன், திடகாத்திரத்துடன் வெளி வந்ததும், புரவியில் அமர்ந்து மாளிகைத் தளத்தை நோக்கியதும், பிறகு மகிழ்ச்சியுடன் இளையபல்லவனை நோக்கி நகைத்துவிட்டுச் சென்றதும் கூலவாணிகனின் குழப்பத்தை உச்ச நிலைக்குக் கொண்டு போயின வென்றால், அந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து எழுந்த அமீரின் பேச்சு அவன் கோபத்தையும் குழப்பத்தையும் கிளறிவிட்டன.

“மாண்ட பலவர்மன் பிழைத்துவிட்டான் சேந்தா? இனி நீ என்மீது கொலைக்குற்றம் சாட்ட முடியாது” என்றான் அமீர் விஷமத்துடன்.

“எனக்கு ஏதும் புரியவில்லை. பலவர்மன் குப்புறக் கிடந்ததை எனது இரண்டு கண்களாலும் பார்த்தேன்” என்றான் கூலவாணிகன்.

“அப்படியானால் புரவியில் போவது பிணமா?” என்று அமீர் எள்ளி நகையாடினான்.

“விளையாடாதே என்னிடம் அமீர். இந்த மர்மத்தைச் சிக்கிரம் நான் உடைக்கிறேன்” என்று சீறினான் சேந்தன்.

இருவருக்கும் மேலும் வார்த்தை முற்றுமுன்பாக இளையபல்லவன் நடுவே புகுந்து, “போதும் சச்சரவு சேந்தா! நீ உன் பணியில் தோல்வியுற்றதால் பாதகமில்லை. அந்தப் பெட்டியைத் துறக்க நான் வேறு ஏற்பாடு செய்கிறேன். நீ போய் நீராடி உண்டு சற்று இளைப்பாறு. நிதானத்துக்கு வரலாம்.” என்று சொல்லி அவன் முதுகில் இருமுறை தட்டியும் கொடுத்தான். அதற்குப் பின் அங்கு நிற்கவும் இஷ்டப்படாத கூலவாணிகன் அமீரை ஒரு தரம் ச ம முறைத்து நோக்கிவிட்டு அறையை விட்டு விடுவிடுவென வெளியே நடந்தான்.

அவன் சென்றதும் ஏதும் நடவாதது போலத் தங்கள் பேச்சைத் தொடர்ந்த அமீரும் இளையபல்லவனும், கோட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி விவாதித் தார்கள். “அமீர்! இன்னும் இரண்டு நாள்களில் அமா வாசை வருகிறது. இதற்கு அடுத்த அமாவாசை அக்யமுனையின் கதியை நிர்ணயிக்கும். அக்ஷய முனையின் கதியை மட்டுமல்ல -- சோழ நாடு, கலிங்க நாடு, ஸ்ரீவிஜய நாடு ஆகிய மூன்று பேரரசுகளின் கதியையும் நிர்ணயிக்கும். அமாவாசைக்கு முன்தினம் பகட்பாரி ஸான் பகுதியிலிருந்து பதக்குகளின் தாக்குதலையும், கடற்பகுதியிலிருந்து சூளூக்களின் தாக்குதலையும், எதிர் பார்க்கிறேன். மேற்கு மலைத்தொடர் பகுதியை நீ கவனித்துக்கொண்டால் கடற்கரைப் பகுதியைக் கண்டியத் தேவன் கவனித்துக்கொள்வான். கோட்டையின் ௨ள் புறத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். அன்று பயங்கர விளைவுகள் நேரிடும் அமீர்! அவற்றைச் சமாளிக்க உன் வரையில் நீ தயாரா?” என்று வினவினான் இளைய பல்லவன்.

“நான் இன்றே தயார்.” என்றான் அமீர் இடையி லுள்ள குறுவாள்களைத் தடவிக் கொண்டே.

“கண்டியத்தேவன் தயாராக ஒரு மாதம் பிடிக்கும். என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

புரிந்நுகொண்டதற்கு அடையாளமாகத் தலையை அசைத்த அமீர் “ஆம், ஆகும்” என்றான்.

“அதற்குள் கோட்டையையும் நான் வலுப்படுத்தி விடுவேன். மக்கள் விழிப்பு பெற்றிருக்கிறார்கள். அது நமக்குப் பெரும் பாதுகாப்பு” என்றான் இளையபல்லவன்.

“ஆம்.” என்று தலையை ஆட்டினான் அமீர்.

இளையபல்லவன் சிறிது நேரம் தீவிர யோசனையில் அழ்ந்துவிட்டுக் கவலையுடன் கேட்டான். “அந்த எழுத்து என்னவென்று புரிந்ததா அமீர்?” என்று.

“புரியவில்லை.

“நகல் சரியாக எடுத்தாயா?”

“அப்படியே எடுத்தேன்.

“கையெழுத்து?”

“யார் கையெழுத்தையும் இம்மி பிசகாமல் நான் போடவல்லவனென்பதைத் தென் கலிங்க அதிகாரிகளே உணர்ந்திருக்கிறார்கள்.

“அப்படியானால் அந்த வாசகத்தின் மொழி பெயர்ப்பு எப்பொழுது கிடைக்கும்?”

“இன்றிரவு.

“இளையபல்லவன் முகத்தில் கவலை பெரிதாகப் படர்ந்தது. “எச்சரிக்கையுடன் நடந்துகொள் அமீர்! முதலில் நாம் காணப்போகும் விஷயத்தைப் பொறுத் திருக்கிறது அடுத்த நடவடிக்கை! நகலைப் படிப்பவன்...“என்று ஏதோ சொல்லப்போன இளையபல்லவனை இடை மறித்த அமீர், “பேசமாட்டான், கவலை வேண் டாம்,” என்றான்.

“அத்தனை நம்பிக்கையானவனா!” என்று கேட் டான் இளையபல்லவன்.

“நம்பிக்கையானவன்தான், எதற்கும் அவன் படித்து விஷயத்தைச் சொன்னதும் நாவைத் துண்டித்துவிடுகிறேன்.

“சே! சே! வேண்டாம் அமீர்.

“அரபு நாட்டில் அப்படித்தான் பழக்கம்.

“அந்தப் பழக்கம் நமக்கு வேண்டாம். அவனைச் சில நாள்கள் காவவில் வைத்துவிடு.

“சரி, உங்களிஷ்டம்” என்று அலுப்புடன் பதில் சொன்ன அமீர் இளையபல்லவனிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே சென்றான். அப்பொழுது சென்றவன் இரவில் தான் திரும்பி வந்தான். திரும்பி வந்தவன் முகத்தில் ஈயாடவில்லை. “படைத்தலைவரே!” என்றழைத்த அமீரின் நாவும் மேலே பேச முடியாமல் திணறியது. அப்போதுதான் பஞ்சணையில் யோசனையுடன் படுத்த இளையபல்லவன் அமீரின் முகத்தில் திகைப்பைக் கண்டதும், “என்ன அமீர்?” என்று துள்ளி எழுந்தான். பதிலெதுவும் சொல்லாத அமீர் கதவைத் தாழிட்டுவிட்டுப் பூனை போல் மெல்ல நடந்து விளக்கிருந்த இடம் நோக்கி நடந்தான்.

இளையபல்லவனும் அந்த விளக்கருகில் வந்ததும், இடைக் கச்சையிலிருந்து எடுத்த ஓர் ஓலையை அமீர் நீட்டினான் படைத்தலைவனிடம். அதை விளக்கொளியில் படித்த படைத்தலைவன் முகத்தில் பெரும் ஆச்சரிய ரேகை படர்ந்தது. அமீரின் பெருவிழிகள் முன்னைவிடப் பெரி தாகி முகத்திலிருந்து பிதுங்கிவிடுவன போல் காட்சியளித்தன.

இருவர் கண்களும் சந்தித்தன.

அந்தச் சந்திப்பில் வியப்பு, அதிர்ச்சி முதலிய பல உணர்ச்சிகள் பளிச்சிட்டன.

“இப்பொழுது புரிகிறது! புரிகிறது!” என்று இருமுறை சொல்லிக்கொண்ட படைத்தலைவன் ஓலையைத் தட்டிக் காட்டி, “இரகசியத்தின் திறவுகோல் இது! அப்பப்பா, எத்தனை பயங்கரமான திறவுகோல்! எத்தனை மர்மங் களை விளக்குகிறது!” என்று குரலில் பல உணர்ச்சிகள் அலைபாயக் கூறினான்.