அத்தியாயம் 47

சுயநலச் சதுரங்கம்

இமை நொடிக்கு முன்பாக இடது கையால் அறைக் கதவைத் தாழிட்டு, வலது கையால் வாளை உருவிப் பிடித்த வண்ணம் கதவின்மீது வெகு அலட்சியமாகச் சாய்ந்து நின்று இளநகை கோட்டிய இளையபல்லவனைக் கண்ட தும் இடிந்துபோய் ஏதும் பேசமாட்டாமல் பல விநாடிகள் உட்கார்ந்துவிட்ட பலவர்மன், உணர்ச்சிகளின் பெருக்கால் தன் நிதானத்தையெல்லாம் அடியோடு காற்றில் பறக்க விட்டு, “அயோக்கியன்! அயோக்கியன்! நீ பரம அயோக் கயன்!” என்று அந்த அறையே அதிரும் படியாக இரைந்து கூவினான்.

எந்த நிலையிலும் நிதானத்தைக் கைவிடாத பல, வர்மன் நிலைகுலைந்து அப்படி இரைந்து கூவியதைக் கண்டு இளநகையை உதடுகளில் விரிவடையச் செய்து கொண்ட இளையபல்லவன், “கோட்டைத் தலைவர் கோபத்துக்குக் காரணமிருக்கிறது. இருப்பினும் மன்னிக்க வேண்டும்” என்று அந்த இளநகையைத் தொடர்ந்து சொற்களையும் உதிர விட்டான்.

அக்ஷ்யமுனைக் கோட்டைத் தலைவன் மட்டும் சுய நிலையில் இருந்திருந்தால் படைத்தலைவனின் பதிலில் ஊடுருவிச் சென்ற ஏளன ஒலியைக் கவனித்திருப்பான். ஆனால் அந்தச் சமயத்தில் அவன் இருந்த அவல நிலையில் எதையும் கவனிக்கும் சக்தியை இழந்துவிட்டதால், “மன்னிப்பதாவது! உன்னைக் கொலை செய்ய வேண்டும்,” என்று மீண்டும் கூவினான் பலவர்மன்.

“தங்கள் நினைப்பு சிறந்ததுதான். ஆனால் அதை நிறைவேற்ற அடியவனால் முடியவில்லை. இன்னும் கொஞ்சநாள் உயிரை வைத்திருக்க உத்தேசிக்கிறேன்” என்ற இளையபல்லவன் சற்று இரைந்தே நகைத்தான்.

அந்தச் சிரிப்பு பலவர்மனுக்கு ஒரளவு நிதானத்தை அளித்தது. கொந்தளித்தெழுந்த உணர்ச்சிகளை வெகு சீக்கிரம் அடக்கிக்கொண்ட பலவர்மனும் மெளனப் புன்முறுவலொன்றை உதடுகளில் தவழவிட்டுக்கொண்டே சொன்னான், “சோழ நாட்டுப் படைத்தலைவரே, நமது உத்தேசப்படி காரியம் நடப்பதில்லை. உயிரை வைத்திருக்க நீர் உத்தேசிக்கிறீர். ஆனால் வாழ்வில் உத்தேசம் வேறு, விளைவது வேறு.” என்று.

“உண்மை.” என்று சர்வ சாதாரணமாக ஒப்புக் கொண்டான் இளையபல்லவன்.

எது உண்மை?” என்று சற்றே சந்தேகத்துடன் கேள்வியை வீசினான் பலவர்மன்.

“உத்தேசம் வேறு, விளைவது வேறு என்பது.

“அதை உணர்ந்து கொள்வதுதான் விவேகம்.

“அந்த விவேகம் தங்களுக்கும் இத்தனை நேரம் உண்டாயிருக்க வேண்டும்.” இந்தப் பதிலைச் சொல்லி இளையபல்லவன் பலவர்மனை ஏளனத்துடன் நோக்கினான்.

“எனக்கா! விவேகமா?” என்று கேட்டான் பலவர்மன் ஆச்சரியம் குரலில் பூரணமாகத் தொனிக்க. அந்த ஆச்சரியத்தின் ஊடே சற்றுப் பயமும் ஊடுருவி நின்றது.

“நீங்கள் ஆச்சரியப்படுவதில் காரணமிருக்கிறது. உங்களுக்கும் விவேகத்துக்கும் அதிக சம்பந்தமிருப்பதாகத் தெரியவில்லை.” என்று சர்வசாதாரணமாகக் கூறினான் இளையபல்லவன்.

இதைக் கேட்டும் பலவர்மன் கோபத்தையோ, வேறு எந்தவித உணர்ச்சிகளையோ காட்டாமலே கேட்டான். “எனக்கு விவேகமில்லையென்பதை எப்பொழுது கண்டு பிடித்தீர் படைத்தலைவரே?”

“கண்டுபிடித்துப் பல நாள்களாயின. ‘“ என்றான் இளையபல்லவன்.

பலவர்மனின் உதடுகளில் இகழ்ச்சிப் புன்முறுவல் படர்ந்தது. “பல நாள்களாக எதையும் கண்டுபிடிக்கும் நிலையில் படைத்தலைவர் இல்லையே.” என்று விஷமத் துடன் கூறவும் செய்தான் அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவன்.

இளையபல்லவன் மெல்லச் சிரித்துவிட்டுச் சொன் னான், “இங்கு விவேகக் குறைவு இருக்கிறது.” என்று.

இந்தப் பதில் பலவர்மன் நிதானத்தை உடைக்கவே அவன் அதுவரை கடைப்பிடித்த நிதானத்தைக் கைவிட்டு இளையபல்லவனைச் சொந்தப் பெயர் கொண்டு அழைத்து “கருணாகரா! குடிகாரன் விவேகத்தைப் பற்றி விளக்கம் கூறுவது விசித்தரமாக இல்லை உனக்கு?” என்றான்.

இளையபல்லவன் இதழ்களில் இருந்த இளநகை சரேலென மறைந்து அவன் முகத்தில் சாந்தமும் உறுதியும் நிலவின. அவன் பேசியபோது குரல் நிதானத்துடனும் கடுமையுடனும் ஒலித்தது. “பலவர்மா! எவன் குடிகாரன் எவன் குடிகாரனில்லை என்பதை உணரும் விவேகம் மட்டும் உனக்கிருந்திருந்தால் நீ தற்சமயம் -இருக்கும் நிலையில் இருந்திருக்கமாட்டாய்.” என்று இளைய பல்லவன் வாயிலிருந்து உதிர்ந்த சொற்களைக் கேட்டதும், மெள்ள உண்மை உதயமாகவே ஆசனத்திலிருந்து எழுந் திருக்க முயன்றான் பலவர்மன். “அப்படியே உட்கார்! இருக்குமிடத்தைவிட்டு அசைந்தால் இந்தக் கணத்தில் நீ பிணமாகிவிடுவாய். உன்னை இந்த அறையில் சந்தித்த முதல்நாள் குறுவாள் வீசி உன் கழுத்து அங்கியை உன் ஆசனத்துடன் வைத்துவிட்டேனே நினைப்பிருக்கிறதா பலவர்மா? அதே குறுவாள் இதோ இன்றும் என் இடைக் கச்சையிலிருக்கிறது. இன்று அதை வீசினால் குறி உன் கழுத்து அங்கியின் பக்கப் பகுதிக்கு இருக்காது. உன் கழுத்துக்கே இருக்கும்.” என்று எச்சரித்து இடைக் கச்சையைத் தட்டிக் காட்டிய இளையபல்லவன் மேலும் சொன்னான் “பலவர்மா, நீ அறிவாளி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அறிவு மட்டும் விவேகத்தை அளிப்ப தில்லை. தர்மம் இணையும்போதுதான் அறிவு சரியான துறையில் வளர்ச்சியடைகிறது. அறிவின் தெளிந்த ஒளி தான் விவேகம். அதர்மம், அநீதி இந்தச் செயல்களை உடையவன் அந்த ஒளியைப் பெறுவதில்லை. பெரும் வஞ்சகச் செயல்களை விவேகத்தின் விளைவு என்று சிலர் எடை போடுவார்கள். அந்தச் சிலரில் நீ ஒருவன். இந்த அறையில் உன்னை முதல் நாள் சந்தித்தபோதே நீ பெரிய வஞ்சகன் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆகவே உன்னை வஞ்சகத்தாலேயே வெற்றி கொள்ளத் தீர்மானித் தேன்...

“இந்தச் சமயத்தில் இளையபல்லவனை இடைமறித்து “கருணாகரா...” என்று ஏதோ சொல்ல முயன்ற பலவர் மனைக் கையால் சைகையாலே தடுத்த இளையபல்லவன், “பலவர்மா! சொல்வதை முழுவதும் கேட்டுக்கொள் பிறகு சந்தேகமிருந்தால் விளக்கம் தருகிறேன். இங்கு வருமுன்பே உன் பிரக்கியாதியை அறிந்துதான் வந்தேன். இங்கிருந்த கொள்ளையர் கூட்டத்தையும் பூர்வகுடிகளையும் பாதி அச்சுறுத்தியும், பாதி உறவாடியும் அவர்களை நிலத்திலும் நீரிலும் கொள்ளையடிக்கச் செய்து அதில் நீ பங்கு பெற்று வந்ததையும், உன் பெயரைக் கேட்டாலே இந்தப் பக்கம் பூராவும் நடுங்கி வந்ததையும் அறிந்தேன். நாட்டுப்பற்றின் பெயரால் நீ கலிங்கத்துடன் சேர்ந்துகொண்டு பிற நாட்டுக் கப்பல்களைக் கொள்ளையடித்ததையும் அறிந்தேன். வங்கக் கடலின் நடுவே, சோழ நாட்டுக்கும் கடாரத்துக்கும் இடையே மூக்கை நீட்டிக் கொண்டிருக்கும் சொர்ணத் தீவின் வடமுனையான. இந்த அக்ஷயமுனைத் தளம் உடைக்கப் படாவிட்டால், சோழநாட்டுக் கப்பல்கள் பயமின்றிக் கடாரம் செல்ல முடியாதென்பதைத் தீர்மா னித்தேன்...” என்று பேச்சை சற்றே நிறுத்தினான்.

“சொல் பதரே! கொள்ளைக்காரா!” என்று உணர்ச்சி களின் மிகுதியால் இரைந்து கத்தினான் பலவர்மன்.

இளையபல்லவன் அந்தக் கத்தலைச் சட்டை செய்யாமலே மேலும் சொன்னான் “பலவர்மா! அந்தத் தீர்மானத்தின் விளைவாகவே இங்கு வந்தேன். இந்த அக்ஷயமுனைத் தளத்தின் பலத்தை உடைக்கவும் இதை எனக்கு அனுகூலமான தளமாக்கிக் கொள்ளவும் முடிவு செய்தே இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தேன். வந்து உன்னை இந்த அறையில் முதல்நாள் சந்தித்ததும் முக்கியமான ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டேன். உனக்கு நாட்டுப் பற்றோ, மக்கள் பற்றோ எதுவும் கிடையாது. நீ பெரும் வஞ்சகன். முதல் தரமான சுயநலக்காரன்! பணப்பேய் பிடித்தவன் என்பதைச் சந்தேகமறத் தெரிந்து கொண்டேன். நீ கொலை செய்த கொள்ளைத் தலைவர் படங்களையும் பட்டயங்களையும் பார்த்தேன். நீ எத்தனை கொடியவன் என்பதையும் புரிந்துகொண்டேன். அது மட்டுமல்ல! ஸ்ரீவிஐயத்துின் உபதளபதியை மாள அடித்து அவர் சித்தரத்தையும் பட்டயத்தையும் நீ இங்கு பகிரங்கமாக மாட்டியிருப்பதிலிருந்து மற்றொரு உண்மையும் புரிந்தது எனக்கு. அந்த உண்மை என்ன தெரியுமா பலவர்மா?”

“என்ன என்ன?” பலவர்மன் கிலியுடன் கேட்டான்.

“பதீவிஜய மன்னனான ஜெயவர்மன் எதற்கோ உன்னிடம் அச்சப்படுகிறான் என்ற உண்மையைத்தான் குறிப்பிடுகிறேன்.

“எப்படித் தெரியும் உனக்கு?”

“உபதளபதியை நீ கொன்றும் உன்னை இந்தக் கோட்டைத் தலைவனாக வைத்திருப்பதிலிருந்தே தெரிந்து கொண்டேன்.

உபதளபதியைக் கொன்றவனை, அதுவும் கொன்றதைப் பறைசாற்றிக் கொண்டிருப்பவனை, கொலை காரனென்று பிரசித்தியடைந்திருப்பவனை, சொர்ண பூமியின் இந்த முக்கியமான துறைமுகத்தின் அதிபதியாக இந்தச் சாம்ராஜ்யாதிபதி ஏன் வைத்திருக்க வேண்டும்? ஏன் அத்தகைய மனிதனை விசாரணைக்குக் கொண்டு வரவில்லை? உறவினன் என்பதால் விசாரணைக்குக் கொண்டு வராவிட்டாலும் சாம்ராஜ்ய நன்மையை முன்னிட்டுப் பதவியிலிருந்தாவது ஏன் அகற்றவில்லை? இதையெல்லாம் பரிசீலித்துப் பார்த்தேன். முதலில் விடை கிடைக்கவில்லை. பிறகு கிடைத்தது...

“எப்படிக் கிடைத்தது?”

“நீ அளித்தாய் விடையை.

“நானா?” அச்சரியமும் பயமும் கலந்து ஒலித்தது பலவர்மன் குரலில்.

“ஆம்! நீதான் பலவர்மா?’” என்று திட்டமாகச் சொன்ன இளையபல்லவன் தன் விளக்கத்தை மேலும் தொடர்ந்து,. “மஞ்சளழகியை என்னை மயக்கும்படி குரண்டியதிலிருந்து விடை கிடைத்தது எனக்கு. சொந்தப் பெண் அல்லாவிட்டாலும் வளர்ப்புப் பெண்ணைக்கூட மனித இதயமூள்ள, பண்புள்ள, மானமூள்ள எவனும் பிறனுடன் உறவாட விடமாட்டான். ஆனால் நீ உறவாட விட்டாய். அதிலிருந்து உன்மீதிருந்த சந்தேகம் அதிகமாயிற்று எனக்கு. ஆகவே உன்னை அருகிலிருந்து கவனிக்கத் திட்டமிட்டேன். அருகிலிருந்து கவனிக்க வேண்டுமானால் உன்னிடமுள்ள சந்தேகத்தை நீக்க வேண்டும். நீ என்னை அதிகமாகச் சட்டை செய்யாத அளவுக்கு நான் மாற வேண்டும். அப்படி மாறினேன். அதற்காக் குடிகாரனா னேன். குடித்தது உண்மை பலவர்மா! ஆனால் மிதமிஞ்சிக் குடிக்கவில்லை. எனது நாட்டில் புலாலுக்குப் பிறகு நான் அருந்தும் அளவே மது அருந்தி வந்தேன். அதிகப்படி அருந்திவிட்டதாக நடித்தேன். மெள்ள மெள்ள என் வலையில் நீ விழுந்தாய். முதலில் மக்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்தேன். நீ பயந்தாய். பிறகு காவலைக் குறைத்தேன். நீ மகிழ்ந்தாய். ஆனால் நீ பூணமாக என்னை உணர முடியவில்லை. நான் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும், உனக்கு என் குடியில் பூரண நம்பிக்கையும் நிதானமிழந்த என் தன்மையால் பூரண அவிவேகமும் உண்டாக்குவதற்காகவே எடுக்கப்பட்டன. நீ அந்த நம்பிக்கையில் ஆழ்ந்தாய். நம்பிக்கையல்ல, படுகுழியில் ஆழ்ந்தாய் பலவர்மா! குடியில் நான் மதியிழந்து கடந்ததாக நீ நினைத்து, பூர்வகுடிகளுடன் தொடர்பு கொண்டு என்னை ஒழிக்கவும் அக்ஷ்யமுனையை ஒடுக்கப் பழைய ஸ்துதிக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டதெல்லாம் ஒவ்வோர் அணுவும் எனக்குத் தெரியும்” என்றான்.

“என்ன திட்டம்! என்ன தெரியும் உனக்கு?” என்று சீறினான் பலவர்மன். அவன் குரலில் சீற்றமிருந்தது. முகம் பேயறைந்து கிடந்தது.

இளையபல்லவனின் சொற்கள் தீப்பொறிகளென உதிர்ந்தன. “அந்தையின் அலறல் தெரியும்...” என்று மெள்ள இழுத்தான் படைத்தலைவன்.

பலவர்மன் மூச்சுப் பெரிதாக வந்தது. முகத்தில் பயத்தின் வியர்வைத் துளிகள் உண்டாயின. “ஆந்தையின்...அலறலா?...அதற்கென்ன...?” என்று குளறினான் பலவர்மன்,

அந்தக் குரலைக் கண்டதும் வெறுப்புமிகுந்த பார்வை யொன்றைப் பலவர்மன் மீது வீசினான் இளையபல்லவன். “வஞ்சகனாயிருப்பவன் கோழையாகத்தான் இருப்பா னென மனோதத்துவ சாத்திரம் சொல்வது எத்தனை உண்மை உன் விஷயத்தில்?” என்று வெறுத்து அலுத்துக் கொண்ட படைத்தலைவன், “இடும்பன் உன்னை வர வழைக்க ஊதிய கடற்சிப்பியை மாளிகைத் தோட்டத்தின் மரத்து நிழலிலேயே தவறவிட்டுச் சென்றான். அதை நான் எடுத்து மஞ்சளழகியிடம் கொடுத்தேன்” என்றான்.

பலவர்மன் புத்தியில் உண்மை மெள்ள மெள்ள உதயமாகத் தொடங்கியது. தன் மாளிகையிலிருந்து கொண்டே தன் ஒவ்வொரு நடவடிக்கையையும் இளைய பல்லவன் கவனித்திருப்பதை உணர்ந்த பலவர்மன், “அன்றிரவு நீ குடித்து மயங்கி உறங்கிவிட்டதாகவும் காவலரையும் உறங்கச் சொல்லிவிட்டதாகவும் கேள்விப் பட்டேனே.” என்றான் குரல் தழுதழுக்க,

“காவலரை உறங்கச் சொன்னேன், நானும் கண் மூடினேன் - உனது ஒற்றன் வந்து என்னை அசக்கிப் பார்த்துச் செல்லும் வரை. பிறகு நான் என்ன செய்கிருப் பேன்” என்று கேட்ட இளையபல்லவன் நகைத்தான்.

இளையபல்லவன் என்ன செய்திருப்பானென்பதைப் புரிந்துகொண்ட பலவர்மன் நடுங்கினான். இடும்பனும் நானும் பேசியதையெல்லாம் கேட்டிருக்கிறான் இளைய பல்லவன் என்பது தெளிவாகத் தெரிந்தது அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனுக்கு. அப்படியிருந்தும் இடும்பன் மஞ்சளழகியைத் தூக்கிச் செல்வதற்கு எப்படி. அனுமதித் தான் இளையபல்லவன் என்பது புரியாததால் பிரமித்து விழித்தான் பலவர்மன். அவன் பிரமிப் பிலிருந்தே உள்ளத்தி லோடும் எண்ணங்களைப் புரிந்துகொண்ட இளைய பல்லவன் சொன்னான். “மஞ்சளழகியை அபகரித்துச் செல்ல நீ இடும்பனுக்கு உத்தரவிட்டதற்கு ஆதரவளித்தது நான்தான். அவன் தூக்கிச் சென்றால் செல்லும்படி மஞ்சளழகிக்குக் கூறியதும் நான்தான்!”

பலவர்மனின் பிரமிப்பு உச்சஸ்தாயியை அடைந்தது. “மஞ்சளழகிக்கு இது தெரியுமா முன்பே?” என்று வினவினான். “தெரியும். முதலில் அவள் நம்பவில்லை. பிறகு உன்னிடம் அவளை அனுப்பினேன்.

“எதற்கு?”

“உன் உண்மைச் சொரூபத்தை விளக்க.

“என்ன சொரூபத்தை விளக்கினாய்?”

“உனக்கு அவளிடம் எந்த அக்கறையுமில்லை யென்பதை விளக்கினேன். இந்த நாட்டின் அரசியல் சதுரங்கத்தில் நானும் அவளும் காய்கள் என்பதை அவள் ஒருநாள் கடற்கரையில் என்னிடம் சொன்னாள். அரசியல் சதுரங்கம் ஏதும் அக்ஷ்யமுனையில் இல்லை. ஓர் அயோக் கியனின் சுயநலச் சதுரங்கம் தானிருக்கிறது என்று விளக்கி னேன். அதை நேரில் உணர அவளையே அனுப்பினேன். நான் அவளிடம் முறை தவறி நடப்பதாகவும், என் அறைக்கு அவளை அழைப்பதாகவும் கூறச் செய்தேன். அவள் உன்னிடம் வந்தாள். நான் சொல்லச் சொன்னதைச் சொன்னாள். உன்னைப்பற்றி நான் கூறியதையெல்லாம் சரியென்று உணர்ந்து மீண்டும் என்னிடம் வந்தாள். அடுத்துச் செய்ய வேண்டியதையும் கூறினேன். அவள் இணங்கினாள்.

பலவர்மன் தலை சுழன்றது. இருப்பினும் ஒரு நம்பிக்கை மட்டும் இருந்தது அவனுக்கு. அந்தச் சமயத் திலும் காட்டுப்பகுதியில் கேட்டுக் கொண்டிருந்த பூர்வ குடிகளின் இரைச்சலும் டமார ஓலிகளும் அவனுக்குப் பெரும் நம்பிக்கையை ஊட்டின. எப்படியும் அக்ஷ்யமுனை பொழுது விடிவதற்குள் தன் வசமாகிவிடு மாகையால், இளையபல்லவனை ஒழித்துக் கட்டிவிடலாமென நினைத்தான். அடுத்த விநாடி இளையபல்லவன் பெரிதாக நகைத்தான்.

“எதற்காக நகைக்கிறாய்? ‘“ என்று இரைந்தான் பல்வர்மன்.

“உன் மனக்கோட்டையை நினைத்து நகைக்கிறேன் “ என்றான் இளையபல்லவன்.

“என்ன மனக்கோட்டையைச் சொல்கிறாய்?” என்று மீண்டும் சீறினான் பலவர்மன்.

“விடிவதற்குள் இந்தக் கோட்டை உன் வசமாகி விடுமென்ற மனக்கோட்டையைச் சொல்லுகிறேன் பலவர்மா!” என்றான் இளையபல்லவன்.

பலவர்மன் முகத்தில் ஈயாடவில்லை. இளைய பல்லவன் அவனருகில் சென்று, “நம்மிருவர் பேச்சில் நேரம் ஓடிவிட்டது பலவர்மா! மாடிக்கு வா! உண்மையைப் புரிந்துகொள்” என்று கூறி அவன் கையைப் பிடித்துச் சரசரவென்று இழுத்துக்கொண்டு கதவைத் திறந்து மாடிக்கு அவனை அழைத்துச் சென்றான். அவர்களிரு வரும் மாடியை அடைந்த சமயத்தில் காட்டுப் பகுதியை அடுத்திருந்த மதில் சுவரிலிருந்து பெரும் கொம்பு ஒன்று பலமாக அலறியது.

அதைக் கேட்டதும் தனது அறைக்குச் சென்று மின்னல் வேகத்தில் மற்றொரு கொம்புடன் ஓடிவந்த இளையபல்லவன் அந்தக் கொம்பை வாயில் வைத்துப் பலமாக ஊதினான். மதில் சவரிலிருந்து வந்த கொம்புச் சத்தமும் மாளிகை மாடியிலிருந்து கிளம்பிய கொம் பொலியும் மாறி மாறி மூன்று முறை அக்ஷயமுனை நகரத்தை ஊடுருவிச் சென்றதும் பிரமிக்கத்தக்க நிகழ்ச் சிகள் தொடர்ந்தது.

“நன்றாகப் பார் பலவர்மா! உன் சுயநலச் சதுரங் கத்தின் காய்கள் சிதறுவதைப் பார். மக்கள் பலத்தைப் பார். உன் கதியைப் பார்” என்ற இளையபல்லவன் குரல் தொலை தூரத்திலிருந்து ஒலிப்பதுபோல் கேட்டது பலவர்மனுக்கு. அதிர்ச்சியால் பலவர்மனின் தலையும் சுழன்றது.