அத்தியாயம் 50

பிரிவு

அறைக் கதவைத் திறந்துவிட்டு, “அக்ஷயமுனையின் சொந்தக்காரர்கள் இதோ வந்துவிட்டார்கள், “ என்று இளையபல்லவன் கூறிய சொற்கள் எங்கோ தொலைவி லிருந்து அசரீரி போல் காதுகளில் ஒலிக்கவும், கண்கள் பஞ்சடைந்து மிரண்டும் திணறி விழிக்கவும், அந்த அறையே சுழல்வது போன்ற பிரமை ஏற்படவும், எதிர்பாராத உணர்ச்சிகளால் தாக்கப்பட்டுக் கிவி பிடித்து வெல லெத்துப் போன அக்ஷ்யமுனைக் கோட்டைத் தலைவன் வாயிற்படி யைப் பார்த்தது பார்த்தவண்ணமே ஆசனத்தில் சாய்ந்து கடந்தான். தன் கண்முன்னே எழுந்த காட்சி உண்மையா கனவா என்ற சந்தேகம்கூட அவன் சித்தத்தில் எழுந்ததன்றி, கனவாக இருந்து தொலையக்கூடாதா என்ற ஏக்கமும் உள்ளத்தில் திடுதிடுவென நடமாடத் தொடங் கவே இருதயமும் படக்படக்கென்று பலமாக அடித்துக் கொண்டது. கதவு திறந்ததும் நுழைந்த தன் வளர்ப்பு மகள் மஞ்சளழ௫ூயைக் கண்டுகூட அவன் திகைப்படைய வில்லை. அவளுக்குப் பின்னால் ஓசைப்படாமல் வந்து அறைக்குள் நுழையாமலும் பின்னுக்கும் நகராமலும் வாயிற்படியில் புதிதாக அமைத்த நடுச்சிலை போல் நின்ற உருவத்தைக் கண்டதும்தான் பிராணனே போய்விடும் நிலையை அடைந்தான் அக்ஷயமுனைக் கோட்டையின் தலைவன். அவன் கண்கள் சில விநாடிகள் திகைப்படைந்த போது அந்த உருவம் சிறிது மங்கலாகத் தெரிந்த தென்றாலும் அந்த மங்கலிலும் பெரும் பயங்கரம் இருக்கத் தான் செய்தது. கண்கள் மீண்டும் சுயநிலை அடைந்து புத்தி சுழன்றபோது அறையும் சுழன்றதாகையால் அதில் தலைழாகச் சுழன்ற அந்த உருவத்தின் சுழற்சிகூடப் பழிவாங்க வரும் பெரும் பிசாசு தலைகீழாக ஆடுவது போன்ற பிரமையை அளித்தது பலவர்மனுக்கு. அத்தனை மங்கலிலும் சுழற்சியிலும் அந்த உருவத்தின் இதழ்களில் தென்பட்ட கோரப் புன்னகைக்கும் மயானத்தின் பூதங் களின் புன்னகைக்கும் எந்த வித்தியாசமும் இருந்த தாகத் தெரியவில்லை அந்த வஞ்சகனுக்கு. பூதத்தின் புன்ன கையை அவன் கண்டதில்லை. கண்டால் இப்படித் தானிருக்கும் என்பதில் மட்டும் அவனுக்குச் சம்பூர்ண நம்பிக்கை அந்தச் சில விநாடிகளில் உண்டாயிற்று. அந்த நம்பிக்கை வாழ்வின் வளத்தில் அதுவரையில் அவனுக் கிருந்த சிறிது நம்பிக்கையைக் கூடத் தூள்தூளாக உடைத் தெறிந்தது. அப்படி சகலத்திலும் நம்பிக்கை இழந்த பயத்தின் வசப்பட்ட அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவ னின் கண்கள் இறுதியை எதிர்நோக்கும் முறையிலேயே வாயிற்படியை எதிர்நோக்கிக் கொண்டிருந்தன.

அப்படிக் கிலியால் நிலைத்த அந்தக் கண்களுக் கெதிரே வாயிற்படியில் அசையாமல் நின்றான் சீனக் கொள்ளைக்காரனான அகூதா. அவன் இதழ்களில் சிறு புன்னகையொன்று படர்ந்து நின்றது. அவன் கூரிய கண்களில் விவரிக்க இயலாத ஓளி ஒன்று சுடர்விட்டுக் கொண்டிருந்தது. எந்தவித ஆயுதமும் தரிக்காமல்தான் நின்றிருந்தான் அகூதா. அதையும் கண்ட பலவர்மன் அந்தச் சமயத்தில் அகூதாவுக்கு ஆயுதமெதுவும் தேவை யில்லை யென்றே நினைத்தான். உதடுகளில் தெரிந்த பேயின் புன்முறுவலையும் விழிகளில் விரிந்த விவரிக்க இயலாதிருந்த பார்வையையும்விட தன்னைக் கொல்லக் கூடிய ஆயுதங்கள் வேறு இல்லையென்பதை நன்றாக உணர்ந்த பலவர்மன் உடல் மெல்ல நடுங்கவும் செய்தது. அவன் பிரமை, கிலி, உடலின் நடுக்கம் எல்லாவற்றையும் கவனித்த அகூதா வாயிற்படியை விட்டு நகராமலும் ஏதும் பேசாமலும் சில விநாடிகள் நின்றான். அடுத்த விநாடி களில் அகூதாவின் இதயத்தில் எழுந்துகொண்டிருந்தது பெரும் புயல். அதன் காரணம் இளையபல்லவனுக்குத் தெரிந்திருந்தது.

மஞ்சளழகி அந்தக் காரணத்தை உணரா விட்டாலும் தன் தந்தையை அழிப்பதற்கு வேண்டிய கட்டத்தை மற்ற இருவரும் துவக்கிவிட்டார்கள் என்பதை மட்டும் அறிந்தாள்.

அதன் விளைவாக ஏற்பட்ட அனுதாபத்துடனும், அனுதாபமும் நீண்ட நாள் பழக்கமும் விளைவித்த அன்புடனும் தந்தையை அணுகி அவன் தோள்மேல் ஆதரவுடன் தனது கையை வைத்தாள் மஞ்சளழகி. அந்த அதரவுக்கரம்கூட அவனுக்கு அமைதி யை அளிக்கவுமில்லை, பயத்தை நீக்கவுமில்லை. பாதாளத்தில் விழத் துவங்கிவிட்டவனுக்கு அறுந்த கயிறு அளிக்கும் ஆதரவையே அந்தக் கரம் அந்த நிலையில் அளித்தது அவனுக்கு. ஆகவே அந்தக் கையைக் கூடத் தன் கையால் அகற்றினான். மீண்டும் மஞ்சளழகி அவன்மீது கையை வைக்கப் போனாள். “வேண்டாம்! அந்தப் பாதகன்மீது உன் புனிதமான கையை வைக்காதே” என்ற அகூதாவின் சொற்கள் எழுந்து அவள் கையைத் திடீரெனத் தேக்கின.

மஞ்சளழகியின் சிற்றம் மிகுந்த விழிகள் அகூதாவை நோக்கத் திரும்பின. “என் தந்தை மீது கையை வைக்கலாமா கூடாதா என்பதை எனக்குச் சொல்ல நீங்கள் யார்?” என்று சிற்றம் மிகுந்த சொற்களையும் கொட்டினாள் அக்ஷய முனை அழகி.

“அந்தக் கேள்வியை அவனையே கேள்.” அகூதாவின் பதில் வந்த குரல் சர்வ சாதாரணமாகத்தானிருந்தது மஞ்சளழகிக்கு. ஆனால் பலவர்மனுக்கு அதில் ஏதேதோ பொருள்கள் தொனித்தன.

மஞ்சளழகி பலவர்மனையும் பார்த்து, அகூதாவை யும் ஒருமுறை பார்த்தாள். “தந்தையை மரியாதை மட்டின்றி ஏன் அழைக்கிறீர்கள்?” என்று மீண்டும் வினவினாள் மஞ்சளழக சிறிதும் கோபம் குறையாமலே.

“அதற்கும் அவனையே காரணம் கேட்கலாம் பெண்ணே” என்றான் அகூதா மீண்டும்.

மஞ்சளழூக்கு எதுவுமே புரியவில்லை. ஏதாவது விளக்கம் கடைக்குமா என்பதற்காக இளையபல்லவனை ஒருமுறை நோக்கினாள். அவன் முகம் உணர்ச்சியற்றுக் கல்லாக உறைந்து கிடந்தது. ஆகவே மறுபடியும் அகூதா வையே சேட்டாள். “அக்ஷ்யமுனைக் கோட்டையின் தலைவரை மரியாதையின்றி அழைக்கிறீர்கள். அவரை மட்டும் என்ன? என்னையும் பெண்ணே என்றும் அழைக் கிறீர்கள். அப்படி அழைக்க உங்களுக்கென்ன உரிமை யிருக்கிறது? நான் உமது பெண்ணா?” என்று.

பதில் மெல்லத்தான் வந்தது அகூதாவிடமிருந்து. சொற்கள் நிதானமாகத்தான் உதிர்ந்தன அவன் உதடுகளி லிருந்து. ஒலியில்கூட வெறுப்போ விரோதமோ இல்லை. அன்புதான் பரவிக் கடந்தது. “பெண்ணல்ல, மருமகள்?” என்ற சொற்கள் அறையை மட்டுமல்ல, மஞ்சளழகியின் உணர்ச்சிகளையும் ஊடுருவிச் சென்றதால் அவள் தஇகைத்துச் சில விநாடிகள் நின்று விட்டாள். “நான்...நான்...“என்று ஏதோ குழறவும் செய்தாள்.

“நீ என் மருமகள்?” திட்டமாக மீண்டும் ஒலித்தன அகூதாவின் சொற்கள்.

“மருமகளென்றால்...” மேலே பேச முடியவில்லை மஞ்சளழகிக்கு - தொண்டையை ஏதோ அடைத்துக் கொண்டது.

“என் சகோதரியின் மகள்.” என்றான் அகூதா. இதைச் சொன்ன அவன் குரலில் உணர்ச்சிகள் அலை பாய்ந்தன.

“நான்...உங்கள்...” என்று கேட்டாள் மஞ்சளழகி சந்தேகத்துடன் தட்டுத் தடுமாறி.

“சகோதரியின் மகள். என் சகோதரி ஒரு வஞ்சகனால் கடத்திச் செல்லப்பட்டாள். இன்னொரு வஞ்சகனுக்குப் பரிசாக அளிக்கப்பட்டாள். அந்த வஞ்சகர்களைப் பல வருஷங்களாகத் தேடித் திரிந்தேன். அவர்கள் யாரென்று தெரியவில்லை. வருஷக்கணக்கில் புலன் எதுவும் கிடைக்க வில்லை. புலன் கிடைத்தபோது நீயும் கிடைத்தாய். இளைய பல்லவன் முயற்சியால் கிடைத்தாய். நாமிரு வருமே அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று அகூதா நன்றி ததும்பிய கண்களை இளையபல்லவனை நோக்கித் திருப்பினான்.

மஞ்சளழகியின் மூளை குழம்பிக் கிடந்தது. அந்தக் குழம்பிய நிலையிலும் அகூதா சொன்னது அவளுக்கு விளக்கமாகப் புரிந்தது. அகூதாவின் சகோதரியை வஞ்சித்தது தன் வளர்ப்புத் தந்தையாகத்தானிருக்க வேண்டும் என்பதை அவள் தீர்மானமாக அறிந்து கொண்டாலும், தன் தாயை அவர் யாருக்குப் பரிசாக அளித்தார் என்பது மட்டும் புரியவில்லை அவளுக்கு. அதையும் புரிய வைத்தான் அகூதா. வாயிற்படியில் நின்ற வண்ணமே அந்தப் பழைய கதையை அவன் சொன்னான். சொன்னது கதை. நிகழ்ந்த இடத்துக்கும் காலத்துக்கும் அவன் கருத்து சென்றது. கண்கள் கனவுலகத்தில் சஞ்சரித்தன. வார்த்தைகளில் வேதனை நிரம்பி நின்றது. சகோதரியை அவன் உயிருக்குயிராக தேசித்தானென்பது மஞ்சளழகிக்கு நன்றாகத் தெரிந்தது.

பலவர்மனை உற்று நோக்கிக்கொண்டே அந்தப் பழைய கதையை அகூதா சொன்னான். “நினைவிருக்கிறதா பலவர்மா! சொர்ணத் தீவின் தலைநகரான ஸ்ரீவிஜயத்தின் கடற்கரையோரத்திலிருந்த அந்தச் சிறுகுடிசை?’” என்று ஆரம்பக் கேள்வியுடன் கதையைத் தொடங்கிய அகூதா, “அன்று அந்தச் சிறு குடிசையில் இருவர் இருந்தார்கள். ஒருவன் வலைஞனான அகூதா பரம ஏழை. மீன் பிடிக்க அன்று படகில் ஓடினான். அந்த மீனைச் சமைக்க குடிசை யிலிருந்தாள் அவன் சகோதரி. இருவரும் ஏழ்மையிலும் பரஸ்பர அன்பினாலும் நல்வாழ்வு நடத்தினார்கள். இருவரும் கடற்கரைப் பறவைகளாக ஆடியோடித் தரிந்தார்கள். அந்தப் பறவைகளில் பெண் பறவை மிகவும் அழகாயிருந்தது. யாரோ ஒருவன் கண்ணிலும் பட்டது. அதைப் பிடித்து வரும்படி. அவன் இன்னொருவனுக்குச் சைகை செய்து போனான். இன்னொருவன் அதைக் கண்ணி வைத்துப் பிடித்துப் போனான். சகோதரனான அண் பறவை கடலுக்கு மீன் கொத்தப்போயிருந்த சமயத்தில் பெண் பறவையைக் கொத்திக் கொண்டு போயிற்று ஒரு கழுகு. திரும்பி வந்ததும் ஆண் பறவை அலைந்தது, தேடித் திரிந்தது, துடித்தது. விசாரித்ததில் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. நல்லுடை உடுத்தி இருவர் புரவிகளில் வந்ததாகவும், ஒருவன் என் சகோதரியை நோக்கிக் கைகாட்டிச் சென்றதாகவும், மற்றவன் அன்றிரவு அவளைப் பலவந்தமாகக் கதறக் கதறத் தூக்கிச் சென்ற தாகவும் கேள்விப்பட்டேன். அவர்கள் யாரென்று அங்கிருந்தவர்களுக்குத் தெரியவில்லை. இளையபல்லவர் ஓலை கிடைத்த பின்புதான் உண்மையறிந்தேன். என் சகோதரியை அலற அலறத் தூக்கிச் சென்றவன் இந்த அயோக்கியன் பலவர்மன். அவளைக் கெடுத்து வதைத்துக் கொன்றது யாரென்று தெரியவில்லை.” என்றான் அகூதா.

“ஜெயவர்மன்” என்ற இளையபல்லவன் சொற்கள் அந்த அறையில் மிகப் பயங்கரமாக ஒலித்தது.

“யார்! ஜெயவர்மனா! ஸ்ரீவிஜயத்தின் சாம்ராஜ்யாதி பதியா?” எதற்கும் அசையாத அகூதாவின் குரலும் அசைந்தது.

“ஆம் தலைவரே! ஜெயவர்மன்தான். ஆனால் அவன் உமது சகோதரியை வதைக்கவில்லை, கடற்கரையில் பலமுறை கண்டு அவள் இணையற்ற எழிலுக்கு இதயத் தைப் பறிகொடுத்தான். ஆகவே, அவளை அடையத் தீர்மானித்தான். அதற்கு உதவினான் பலவர்மன் “ என்று விளக்கினான் இளையபல்லவன்.

“கட்ற்கரைவாசிகள் அப்படிச் சொல்லவில்லையே! அரசனைக் கூடவா அவர்களுக்கு அடையாளம் கண்டு பிடிக்க முடியாது?” என்று வினவினான் அகூதா.

“மூடியாது. இருவரும் மாறு வேடத்திலிருந்தார்கள்” என்றான் இளையபல்லவன். அத்துடன் மேலும் சொன் னான் “உங்கள் சகோதரியைத் தூக்கிச் சென்ற காலத்தில் ஜெயவர்மன் அரசனல்ல. இளவரசனாயிருந்தான். அகவே மன்னனுக்குத் தெரியாமல் உங்கள் சகோதரியைப் பலவர்மன் மேற்பார்வையில் வெளியூரில் வைத்து அடிக்கடி சென்று அவளுடன் வ௫த்தான். அடுத்த வருடம் தந்த இறக்கவே அவன் அரியணை ஏறினான். அதே வருடத்தில் மஞ்சளழகியும் பிறந்தாள். மஞ்சள் நிறப் பொன்னைப் போலிருந்த அவள் அழகைக் கண்டு பூரித்தான் ஜெயவர்மன். ஆனால் அவளை ஈன்ற அன்னை ஈன்ற நிமிடத்தில் காலமானதால், குழந்தையை என்ன செய்வதென்று தெரியவில்லை ஜெயவர்மனுக்கு. சில நாள்கள் தாதி ஒருத்தியிடம் கொடுத்து மறைவில் வளர்த்தான். இடையில் அக்யமுனைக் கோட்டைத் தலைவனா? விட்ட பலவர் மனிடம் குழந்தையை அனுப்பி னான்...” என்ற இளையபல்லவன் சற்றே கதையை நிறுத்தினான்.

அந்த விசித்திரக் கதையை கனவில் கேட்பதுபோல் கேட்டுக் கொண்டிருந்த மஞ்சளழக, “உம் சொல்லுங்கள்” என்றாள் உணர்ச்சி வலையில் சக்க. மேலே விவரிக்கப் புகுந்த இளையபல்லவன் கேட்டான், “யார் மூலம் உன்னை அனுப்பினார் மன்னர் தெரியுமா?” என்று.

“ஒரு தூதன் மூலம்” என்றாள் மஞ்சளழகி குரல் தழுதழுக்க.

“அந்தத் தூதன் யார்?” இளையபல்லவனின் கேள்வி திடமாக எழுந்தது.

“தெரியாது” என்றாள் மஞ்சளழக.

“என்ன அனான்?”

“திரும்பிப் போய்விட்டான்.

“இல்லை, திரும்பவில்லை.

“வேறு...

“இந்த அறையில் கொல்லப்பட்டான்.

“பொய், பொய், இருக்காது!” மஞ்சளழக. என்று கூவினாள் “இல்லை. பொய்யில்லை மஞ்சளழகி.

“இல்லை, பொய்யில்லை மஞ்சளழகி. உண்மை. முக்காலும் உண்மை. உன்னைக் கொண்டு வந்தவன் புதீவிஜயத்தின் உபதளபதி. அவன் இந்த அறையில் கொல்லப்பட்டான். அவன் கொடுத்த ஓலையில் ஜெயவர்மன் பழைய கதையை மீண்டும் எழுதியிருந்ததால் அந்த ஓலையைப் பத்திரப்படுத்தக் கொண்டான் பலவர்மன். நாள்கள் ஓடின. ஜெயவர்மன் கைப்பட இருந்த அந்த ஓலை பலவர்மனுக்குப் பெரிதும் உதவிற்று. அதைக் கொண்டு அடிக்கடி ஜெயவர்மனை மிரட்டிப் பல சலுகைகளைப் பெற்றான் பலவர்மன். இடையே எழுந்தது அகூதாவின் பயங்கரப் புகழ். அதையும் சுட்டிக்காட்டி அக்யமுனையில் தன்னைப் பெரிதும் பலப்படுத்திக் கொண்டான். பூர்வகுடிகளைப் பாதி பயத்தாலும், பாதி நயத்தாலும் தன் வசப்படுத்திக் கொண்டான். ஸ்ரீ விஜயத்தின் சாம்ராஜ்யாதுபதிக்கு அடுத்தபடியாக மதிக்கப் பட்டான் பலவர்மன். காலக்கிரமத்தில் அக்ஷயமுனை கொள்ளைக்காரர்கள் தங்கும் இடமாயிற்று. இதன் புகழும், பலவர்மன் அக்கரமும் எங்கும் பரவின. அக்ஷ்யமுனை ஸ்ரீவிஐயத்தின் பலமான, யாரும் அசைக்க முடியாத துறைமுகமாயிற்று. அதை உடைக்கத் தீர்மானித்து இங்கு வந்தேன். அது மட்டும் உடையவில்லை. வேறொரு பெரும் மர்மமும் உடைந்தது” என்ற விவரித்தான் இளைய பல்லவன்.

மஞ்சளழகி திக்பிரமையடைந்து உட்கார்ந்திருந்தாள். பலவர்மன் நிலை சொல்லவொண்ணாததாயிருந்தது. கதையைக் கேட்ட அகூதாதான் அடுத்தபடி பேசினான். “சரி! மேலே நடக்கவேண்டியதைக் கவனிக்கலாமே!” என்றான்.

அந்தக் குரல் பலவர்மனை ஓர் உலுக்கு உலுக்கியது. “மேலே என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று இனமான குரலில் கேட்டான்.

“அதை நீதான் தீர்மானிக்க வேண்டும் ‘‘ என்றான் அகூதா.

“நானா! நான் என்ன தீர்மானிப்பது?” என்று கேட்டான் பலவர்மன்.

“தூக்கில் தொங்கப் போகிறாயா, அல்லது வெட்டுப் பாறையில் மடிய இஷ்டமா என்பதை நிர்ணயித்துக் கொள்” என்று அகூதா திட்டமாகவும், கடுமையாகவும் சொன்னான்.

“கூடாது! என் தந்தையைக் கொலை செய்ய ஒப்ப மாட்டேன் “ என்று கதறிய மஞ்சளழக பலவர்மன் கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டு அவனைப் பலமாக கட்டிக் கொண்டாள்.

“உன் தாயை வஞ்சித்தவன் இவன்” என்று எழுந்தது அகூதாவின் பயங்கரக் குரல்.

“இருப்பினும் என்னை ஆசையுடன் வளர்த்தவர்” என்றாள் மஞ்சளழகி,

“உன் தாயின் விவாகம் முறைப்படி இருந்தால் நீ ஸ்ரீவிஜயத்தின் அடுத்த மகாராணியாக இருக்க வேண்டிய வள் என்று உஷ்ணத்துடன் புகுந்தது அகூதாவின் குரல்.

“அப்படித்தான் அழைக்கச் சொன்னேன் கண்டியத் தேவரை” என்றான் இளையபல்லவன் இடைபுகுந்து.

அதுவரை புரியாத பல விஷயங்கள் மஞ்சளழகிக்குப் புரியலாயின. தன்னை மகாராணியென்று அழைக்க இளைய பல்லவன் கண்டியத்தேவனுக்குக் கட்டளையிட்ட காரணம் மிகத் தெளிவாகப் புரிந்தது மஞ்சளழகிக்கு. எத்தனை திறமையுடன் எத்தனை வேஷங்கள் போட்டுத் தன் ரகசியத்தை அறிந்து பலவர் மனை மூறியடித்து விட்டான் இளையபல்லவன் என்பதை அறிந்துகொண்ட மஞ்சளழகி இளையபல்லவனின் இணையற்ற திறமையை எண்ணி எண்ணிப் பெரிதும் வியந்தாள். இளையபல்லவன் பெரும் முத்துகளைக் காட்டி ஆரம்பத்தில் தன் தந்தையின் மனத்தைக் கவர்ந்தது, தன் நடனத்தில் வில்வலனை முறியடித்தது. பிறகு குடிகாரனாக நடித்துப் பலவர்மனை ஏமாற்றிப் பல விஷயங்களையும் அறிந்துகொண்டு, அகூதாவுக்கு ஓலையனுப்பி இடும்பனிடமிருந்து தன்னை மீட்டது, பிறகு இருவரையும் அக்யமுனைக் கோட்டை அறைக்கு வரவழைத்தது ஆகிய விஷயங்களை நினைத்து, “இப்படியும் ஓர் அதிசய மனிதர் இருக்கிறாரே உலகத்தில்! என்று வியந்தாள். இளையபல்லவன் முயற்சியால் தந்தை யின் கதி அதோகதியாகிவிட்டதை உணர்ந்தாள். அப்படி உணர்ந்தும், பலவர்மன் தன்னை மகளைப் போலவே நடத்தி வளர்த்ததை மட்டும் அவளால் மறக்க முடிய வில்லையாகையால் அவனை எப்படியும் காப்பாற்ற உறுதி கொண்டு அகூதாவை நோக்கிச் சொன்னாள் “இவர் என்னை வளர்த்தவர், தாயைவிட அருமையாக வளர்த் தவர். தாயை எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த தாயும் தந்தையும் இவர்தான். இவரைக் கொல்லுமுன் என்னைக் கொல்ல வேண்டும்” என்று.

இளையபல்லவன் முன்வந்து, “தேவையில்லை, இவரைக் கொல்லத் தேவையில்லை” என்றான் அகூதாவை நோக்கி,

“வேறு என்ன செய்வது?” என்று கேட்டான் அகூதா.

“நீங்கள் அனுமதித்தால் என்னுடன் அழைத்துச் செல்லுகிறேன்” என்றான் இளையபல்லவன்.

“எங்கு அழைத்துப் போகப்போகிறீர்கள்?” என்றாள் மஞ்சளழக.

“நான் செல்லுமிடத்திற்கு.

“நீங்கள் இங்கிருக்கப் போவது இல்லையா?”

“இல்லை.

“ஏன்?”

“இங்கு வந்த வேலை முடிந்துவிட்டது.

“அப்படியானால் அக்ஷ்யமுனையை யார் பரிபா லிப்பது, காப்பது?”

“நீதான் மஞ்சளழகி. நீதான் இதை அள வேண்டும். பலவர்மன் வளர்ப்புப் புதல்வியென்ற முறையில் உனக்கு அந்த உரிமையை ஜெயவர்மன் மறுக்க முடியாது. இனி இதைக் காப்பதும் கஷ்டமல்ல. கொள்ளையரைப் பெரும் கடல் வீரராக மாற்றியிருக்கிறேன். மண்ணாகிக் கிடந்த மக்களை எழுப்பிவிட்டேன். கடலில் இடும்பனையும் தரையில் வில்வலனையும் ஒழித்துவிட்டேன். ஆகவே இந்த இடத்தை நீ அண்டுவா. அள உனக்குச் சகல தகுதியும் இருக்கிறது. இத்தத் தளத்தை முழுதும் அளிக்கவில்லை நான். இதுவரை கலிங்கத்துக்கு உதவிவந்த இந்தத் தளம் இனி எனக்கு உதவட்டும். என் சபதத்தின் ஒரு பகுதிதான் முடிந்திருக்கிறது. இன்னொரு பகுதியை நோக்கிச் செல்கிறேன். வா, மஞ்சளழகி. உன் அரசைப் பார். வெற்றி கொள்ளப்பட்ட பதக்குகளைப் பார். கடற்கரையில் மாண்டும் சிறைப்பட்டும் கிடக்கும் சூளூக்களைப் பார். எரிந்து நாசமாகியிருக்கும் அவர்கள் மரக்கலங்களைப் பார். வா மஞ்சளழகி, வா பலவர்மா, வாருங்கள் சீனத் தலைவரே!”

மற்ற மூவரும் அவனைத் தொடர்ந்தனர். அக்ஷய முனையின் புதுத் தோற்றத்தைக் கண்ட மஞ்சளழகி பிரமித்தாள். காட்டுப் பகுதியில் மாண்டு கிடந்தனர் பதக்குகள் பலர். கோட்டையிலிருந்த காவல் வீரர்கள் மஞ்சளழகியைக் கண்டதும் வெற்றிக் கோஷமிட்டார்கள்! இதையெல்லாம் கண்டுகொண்டே கடற்கரையை அடைந்த மஞ்சளழகியின் பிரமிப்பு உச்சநிலையை அடைந்தது. அங்கு கடற்புறா பெரும் அசுரப் பட்சிபோல் நீரில் மிதந்துகொண்டு நின்றது. மாலுமிகள் பாய்களை விரிக்கும் நிலையில் இருந்தார்கள். அதன் பக்கத்தில் நின்றது அகூதாவின் பெரும் போர்க் கப்பல். சுற்றிலும் எரிந்து சாய்ந்து கடந்தன சூளூக்களின் மரக்கலங்கள் நான்கு.

அந்த மலைப்பில், கடற்கரையில் நின்ற அமீரும் கண்டியத்தேவனும் பலவர்மனைத் தங்களுடன் பலவந்த மாக அழைத்துச் சென்றதைக்கூட அவள் கவனிக்க வில்லை! அகூதா தன் மருமகளை அணைத்து முத்தமிட்டு, “குழந்தாய், மீண்டும் வருகிறேன். பலவர்மனைக் கொல் லாதது எனக்கு வருத்தம்தான். இருப்பினும் நான் இளைய பல்லவரை மீறி எதுவும் செய்வதற்கில்லை” என்று கூறி விடைபெற்றுத் தன் மரக்கலத்துக்குச் சென்றான். கடைசி யில் இளையபல்லவன் மட்டுமே அவளுடன் தனித்து நின்றான்.

மஞ்சளழகி தன் அழகிய விழிகளால் அவனை ஏறெடுத்து நோக்கினாள். “நீங்களும்...” அதற்குமேல் சொல்ல அவளால் முடியவில்லை.

ஆம். போகவேண்டும் மஞ்சளழகி” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டான் இளையபல்லவன்.

“நான் சொன்னது சரியாகப் போய்விட்டது” என்றாள் அவள் துக்கம் தொண்டையை அடைக்க.

“எது?”

“இந்த அலை போலத்தான் நீங்களும் என்று அன்றே சொன்னேனே?”

“ஆம்.

சொன்னாய்.

“அலையும் என்னைத் தொட்டுவிட்டுப் போகிறது, நீங்களும் அப்படித்தான் போகிறீர்கள். “மஞ்சளழகியின் குரல் தழுதழுத்தது.

“அலை மீண்டும் வந்து தொடுகிறதே மஞ்சளழக, அப்படி நானும் வருவேன்” என்றான் இளையபல்லவன் அவளுக்குத் தைரியமூட்ட.

“நம்பிக்கையில்லை எனக்கு.

“இளையபல்லவன் சொன்ன சொல் தவறியதில்லை மஞ்சளழக.

“கண்டிப்பாய் வருவீர்களா?”

“வருவேன்.

“எப்பொழுது?”

“கடமை முடிந்ததும்?”

“என்ன கடமை?”

“கலிங்கத்தின் கடல் பலத்தை உடைக்கும் கடமை.

“அக்ஷ்யமுனை அழகி தலையை அசைத்தாள். அந்த அசைப்பில் அதிக நம்பிக்கையில்லை. அவன் கடமையின் ஒரு பகுதிதான் கலிங்கத்தின் கடலாதுிக்கத்தை உடைப்பது. இன்னொரு பகுதி குணவர்மனை ஸ்ரீவிஜயத்தின் அரி யணையில் அமர்த்துவது என்பதை அவள் அறிந்திருந்தாள். அந்த இரண்டாவது கடமையின் அஸ்திவாரம் காஞ்சனா தேவியின் காதல் என்பது அவளுக்குச் சந்தேகமறத் தெரிந் திருந்தது. “இவர் கடமையை நோக்கிப் போகவில்லை. காதலை நோக்கப் போகிறார்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு பெருமூச்செறிந்தாள். அவள் அழகிய கன்னத்தில் தன் இதழ்களைப் பொருத்திவிட்டு, காத்திருந்த படகை நோக்கி வெகு வேகமாகச் சென்றான் இளைய பல்லவன்.

மஞ்சளழகி கடற்கரையிலேயே அலை ஓரத்திலேயே நின்றிருந்தாள். முதலில் துறைமுகத்தை விட்டுச் சென்றது அகூதாவின் மரக்கலம். பிறகு அசைந்தது பாய் விரித்த கடல் புறா. கடலின் அலைகளை அலகால் கழித்துக் கொண்டு தன் முதல் பயணத்தைத் துவங்கியது. அந்தக் கடற்புறாவின் எழில் சாதாரண சமயத்தில் மஞ்சளழகஇியின் இதயத்தைக் கொள்ளை கொண்டிருக்கும். ஆனால் காதலன் பிரிந்து சென்ற அந்தச் சமயத்தில் அவள் அதன் எழிலைப் பார்க்கவும் சக்தியற்று நின்றாள்.

பாலூர்ப் பெருந்துறையில் இளையபல்லவன் கரையி லிருந்தான், மரக்கலத்தில் கண்ணீர் திரையிட நின்றாள் காஞ்சனாதேவி. இன்றோ மஞ்சளழகி மைவிழிகள் நீர்த்தரையிட தரையில் நிற்கிறாள், மரக்கலத்தில் ஓடுகிறான் படைத்தலைவன். இரண்டும் மாறுபட்ட நிலைதான். ஆனால் இரு மாதர் காதலிலும் மாறுபாடு இல்லை. இரண்டும் உறுதியான காதல். இரண்டும் வ க்க உள்ளத்தைச் சிதற அடிக்கும் சக்தியை உடையன. எது வெற்றி கொள்ளுமோ காலம்தான் சொல்லும். ஆனால் கடல் புறாவின் தளத்தில் நின்ற இளையபல்லவன் இதயத்தில் அன்று மஞ்சளழகியே குடிகொண்டிருந்தாள். கரையில் நின்ற அவள் உருவம் காலைச் செந்நிற ஒளியில் அவள் பொன்னிற மஞ்சளைப் பளபளப்பாக மாற்றி, அவளை அக்ஷயமுனைத் தேவதையென அடித்திருந்தது. “வருந்தாதே மஞ்சளழக. கடமையை நோக்கிப் போகிறேன். சீக்கிரம் வந்துவிடுவேன்” என்று தளத்தில் நின்ற இளையபல்லவன் முணுமுணுத்தான். வேகமாக அடித்த காற்று அந்தச் சொற்களை மஞ்சளழகிக்குக் கொண்டு சென்றதோ என்னவோ தெரியாது. பாய்மரத்தை மட்டும் நன்றாக உந்தி, கடல்புறாவின் வேகத்தை அதிகப்படுத்தியது. காதலரைப் பிரிப்பதில் காற்றுக்குத்தான் எத்தனை அனந்தம்!

இரண்டாம் பாகம் முற்றும்