அத்தியாயம் 5
அந்தரங்க அறையில்...
காண்பது கனவா அல்லது எதிரில் வந்திருப்பது உண்மைத் தோற்றம்தானா? இருப்பது சொர்ண பூமியின் அக்ஷயமுனையா அல்லது கலிங்கத்தின் பாலூர்ப் பெருந் துறையா?” என்ற சந்தேகம் இளையபல்லவன் இதயத்தில் எழுந்து அவன் சித்தத்தை எல்லையற்ற பிரமிப்புக்கும் குழப்பத்துக்கும் உள்ளாக்கியதென்றால், அதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது. அத்தனை ஏமாற்றத்தையும் சந்தேகத்தையும் அளித்தான் கோடியிலிருந்த கத வொன்றைத் திறந்துகொண்டு அறைக்குள் நுழைந்த அந்தக் கோட்டைத் தலைவன். இளையபல்லவன் கற்பனை செய்த கோலத்துக்கு முற்றும் மாறாக அவன் தோற்றமிருந்ததன்றி, சொப்பனத்திலும் நினைக்க முடியாத மற்றொருவன் சாயலும் கோட்டைத் தலைவனுக்கு இருக்கவே சில விநாடிகள் ஸ்தம்பித்தே போனான் சோழர் படைத் தலைவன்.
அக்ஷயமுனையைப் பற்றிக் &ழ்த்தசையெங்கும் பரவிக் கிடந்த பயங்கர வரலாற்றை வைத்து, அதன் வாசிகளையும் கோட்டையின் தலைவனையும் எடை போட்டிருந்த இளையபல்லவன், தலைவன் அறைக்குள் தான் தனித்திருந்த சில நிமிடங்களில் வெளிநாடுகளில் உலாவிக் இடந்த வதந்தியில் தவறேதுமில்லை என்றே எண்ணினான். அந்த அறை ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் ஒரு மூலையிலிருந்த சாதாரணத் துறைமுகக் காவலனின் அறைபோலில்லாமல் பெரும் சாம்ராஜ்யாதிபதியின் அந்தரங்க அறை போலிருந்ததையும், அதன் தூண்கள் கூடத் தங்கத் தகடுகளால் மூடப்பட்டி ரந்ததையும், சுவர் களில் ஆங்காங்கு இருந்த சிறு வெள்ளிப் பட்டயங்களில் எழுப்பப்பட்ட பல செய்திகள் எந்த மனிதனது உரத்தையும் வீரத்தையும் உலுக்கிவிடும் தன்மை பெற்றிருந்ததையும் பார்த்த இளையபல்லவன், பெரும் கொள்ளைக்காரனும் இதயமற்ற கொலைகாரனுமான ஒரு பரம அயோக்கி யனின் இருப்பிடத்துக்குத் தான் வந்துவிட்டதைச் சந்தேக மறப் புரிந்து கொண்டான். அக்ஷயமுனைக்கு வந்து பெரும் மரக்கலத் தலைவர்களாக விளங்கி, பெரும் தனத்தைக் கொண்டு வந்தவர்கள் திடீர் திடீரென மறைந்துவிட்டதற்கு அனுதாபம் தெரிவிக்கும் முறையில் சுவர்களில் காணப் பட்ட வெள்ளிப் பட்டயங்களில் வாசகங்களிருந்தன. அந்தப் பட்டயங்களின் தலையில் மாண்ட அந்த மாலுமிகள் சின்னஞ்சிறு தலைகளும் சித்திரங்களாகத் தீட்டப்பட்டிருந்தன.
அந்தப் பட்டயங்களை அந்த அறையில் அக்ஷய முனைத் தலைவன் பதித்திருந்ததன் காரணத்தைப் பற்றி எத்தகைய சந்தேகமும் ஏற்படவில்லை இளையபல்லவ னுக்கு. அவற்றிலிருந்த தலைகளின் சித்திரங்கள் தன்னைப் போல் வரும் புது மரக்கலத் தலைவர்களை அச்சுறுத்து வதற்கேயென்பதையும் பட்டயங்களில் அனுதாபம்போல் எழுதப்பட்டிருந்த வாசகங்களில் பலத்த எச்சரிக்கையும் அடங்கியிருப்பதையும் கவனித்த இளையபல்லவன், கோட்டைத் தலைவன் பெரும் கொலைகாரன் என்பது மட்டுமின்றி, சாமர்த்தியமான கொலைகாரனுங்கூட என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். தவிர, கோட்டைத் தலைவன் கொலையையே ஒரு கலையாக மாற்றிக் கொண்டு அதன் சக்தியிலேயே வளர்ச்சியடைந்திருக்கிறானென்பதையும் அறிந்து கொண்டானாகையால், பெரும் ராட்சதன் ஒருவனைத் தான் சந்திக்க நேரிடுமென்ற எண்ணத்துடனேயே அந்த அறையில் காத்திருந்தான். ஆனால் தன் நினைப்புக்கு நேர்மாறாக, நல்ல உயரமுள்ள ஒற்றைநாடியாகச் சிவந்த சரீரத்துடன் ராஜகளை பொருந்திய ஒரு மனிதன் முகத்தில் புன்முறுவல் தவழ உள்ளே நுழைந்ததும், பெரும் பிரமிப்புக்கு்ள்ளான இளைய பல்லவன் சற்று அவனைக் கவனித்ததும் உள்ளே துள்ளி யெழுந்த பல உணர்ச்சிகளுக்கு இலக்கானாலும் ஆச னத்தை மட்டும் விட்டு எழுந்திருக்கவில்லை. இதே நிலை ஒரு வருடத்துக்கு முன்பிருந்தால் துள்ளி எழுந்திருப் பான், சொற்களைப் படபடவெனப் பொரிந்தும் தள்ளியிருப்பான். ஆனால் பெரும் நிதானத்தை அடைந்துவிட்ட படைத்தலைவன் அந்த நேரத்தில் ஆசனத்தை விட்டு எழுந்திருக்கவுமில்லை, தனது படபடப்பைக் காட்டவு மில்லை. அவன் புருவங்களின் சலனங்களில் மட்டுமே அந்த வியப்பு தெரிந்தது. அறைக்குள் நுழைந்தவன் காஞ்சனாதேவியின் தந்தையான குணவர்மனேயென ஆரம்பப் பார்வையில் தீர்மானித்து விட்ட இளைய பல்லவன் அத்தகைய அதிர்ச்சியும் பிரமிப்பும் அடைந்த இல் ஆச்சரியமென்ன இருக்கிறது?
அறைக்குள் நுழைந்த கோட்டைத் தலைவன் அசல் குணவர்மனைப் போலவே தோற்றத்திலிருந்ததன்றி அவன் நடையும் கடாரத்தின் அதிபனை நூற்றுக்கு நூறு ஒத்திருந்தது. அதே விசால வதனம், அதே ராஜ தோரணை, சுருண்ட தோளில் தொங்கிய அதே தலைமுடி. நீண்ட மெல்லிய கைகள்! வித்தியாசம் எதுவுமே இல்லை குணவர்மனுக்கும் கோட்டைத் தலைவனுக்கும்! இப்படிக் குணவர்மனை உரித்து வைத்தது போல் அறைக் கோடிக் கதவின் மூலம் நுழைந்த கோட்டைத் தலைவனைக் கண்டு சில விநாடிகள் பிரமித்து ஸ்தம்பித்துவிட்ட இளைய பல்லவன் கூடிய சீக்கிரம் சுயநிலையை அடைந்து நன்றாக எதிரே வந்தவனை அளவெடுக்க ஆரம்பித்தான். குணவர்மனும் கோட்டைத் தலைவனும் பார்வைக்கு இரட்டையர் போல் இருந்தாலும் சில முக்கிய வித்தியாசங்கள் இருவருக்கும் இருப்பதைச் சில விநாடிகளின் ஆராய்ச்சி களுக்குபின் அறிய முடிந்தது இளையபல்லவனால். முகத்தில் அதே ராஜ தோரணைதான். இருந்தாலும் பலத்த கடுமை இருந்தது அதில். கண்கள் அதே கருமை நிறம், விசாலம் இருந்தாலும் குணவர்மன் கண்களிலிருந்த ஏக்கம், துறவு மனப்பான்மை இரண்டும் கோட்டைத் தலைவன் கண்களில் இல்லை. அவற்றுக்குப் பதில் பெரும் குரூரமும் வஞ்சகமும் கலந்திருந்தன. இளையபல்லவனைக் கண்டதும் அவன் இதழ்களில் விரிந்த புன்னகை முதல் தோற்றத்துக்கு இன்பமாகத் தோன்றினாலும் அதில் பொய்யும் வஞ்சகமும் புதைந்து நின்றன. வந்ததும் அவன் பேசிய இரண்டொரு சொற்களும் அவன் பரம அயோக்கியனென்பதை நிரூபித்தன.
பேசிய சொற்கள் மரியாதை நிரம்பியவைதான். காதுக்குக் குளிர்ச்சியாகவும் இருந்தன. இருப்பினும் மனிதனுடைய குணத்துக்குச் சொல்லப்படும் வடமொழி சுலோகமே இளையபல்லவன் நினைப்புக்கு வந்தது.
பங்கஜத்தைப்போல் விரிந்து வரவேற்கும் முகம், சந்தனத்தைப்போல் குளிர்ந்திருக்கும் சொற்கள், வஞ்சகம் நிறைந்த நெஞ்சம், இம் மூன்றும் அயோக்கியனுடைய லக்ஷணங்கள் என்ற கவிதையை ஒரு முறைக்கு இரண்டு முறையாகத் தனக்குள் சொல்லிக்கொண்ட இளைய பல்லவன் கோட்டைத் தலைவனுக்கும் அந்தச் சுலோகத் துக்கும் பொருத்தம் நூற்றுக்கு நாறு என்று தீர்மானித்துக் கொண்டாலும், அந்த எண்ணங்களை அணுவளவும் முகத்தில் காட்டாமல், கோட்டைத் தலைவன் உள்ளே, நுழைந்ததும் ஏற்பட்ட திகைப்பை இரண்டொரு விநாடி களில் சமாளித்துக் கொண்டு புன்முறுவல் செய்தான்.
அத்தனை துரிதமாக இளையபல்லவன் தன் ஆரம்பத் திகைப்பையும் எண்ணங்களையும் மறைத்தும் கூட அவன் உணர்ச்சிகளை நொடிப்பொழுதில் கவனித்து விட்ட கோட்டைத் தலைவன், இன்பப் புன்முறுவல் தவழ்ந்த இதழ்களுடன் அறைக்கோடியிலிருந்து நடுவிடத்துக்கு வந்து பெரும் அதிர்வெடியொன்றை எடுத்துப் படைத்தலைவன் மீது வீச முற்பட்டு, “அக்ஷயமுனைக்கு இளையபல்லவன் வருகை நல்வரவாகட்டும்.” என்று சர்வசாதாரணமாக வரவேற்புக் கூறி எதிரேயிருந்த நவரத்தினங்கள் இழைக்கப் பெற்ற ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.
அக்ஷயமுனையின் தலைவன் பேசிய மொழி சொர்ண பூமியின் காவி பாஷையாயில்லாமல் தூய்மை யான தமிழாயிருந்தது பற்றி மட்டுமின்றித் தன் பெயரையும் அவன் அறிந்து கொண்டிருப்பது பற்றிப் பேராச்சரிய மடைந்தான் இளையபல்லவன். இந்த அறைக்கு வரும்வரை நான் பெயரை யாருக்கும் சொல்லாதிருக்க இவனுக்கு எப்படி என் பெயர் தெரிந்தது!” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாலும் அதைப்பற்றி வெளிப்படையாக எந்த உணர்ச்சியையும் காட்டாமல், “எனக்கு இரட்டைப் பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது.” என்று பதில் கூறி வணக்கத்துக்கு அறிகுறியாகத் தலையையும் தாழ்த்தனான் இளையபல்லவன்.
“எனக்கும் அப்படித்தான்” என்றான் கோட்டைத் தலைவன் இதழ்களிலிருந்த புன்முறுவல் முகத்திலும் படர.
சிறிது சிந்தனைக்குப்பின் கேட்டான் இளைய பல்லவன், “உங்களுக்குமா?”
“ஆம்.” மிகுந்த அடக்கத்துடனும் அந்த அடக்கத் திலும் ஒரு பயங்கரம் புதைந்து கிடந்த குரலில் வெளி வந்தது கோட்டைத் தலைவனின் பதில்.
“தங்களைக் கண்டது என் பாக்கியம். தாங்கள் என் மொழியைப் பேசுவது என் பாக்கியம் என்பதை இரட்டைப் பாக்கியமாகக் கருதினேன் நான்.” என்று குறிப்பிட்டான் இளையபல்லவன்.
“அரச வம்சத்தில் பிறந்து கொள்ளைக்காரராகத் திரும்பிய இளையபல்லவரை நான் அறிய நேரிட்டது ஒரு பாக்கியம். இரண்டவதாக எங்கள் காவி மொழியை அவர் அறிந்திருப்பது மற்றொரு பாக்கியம். ஆக இரட்டை பாக்கியம் எனக்கு உண்டு. இல்லை, இல்லை, மூன்று வகை பாக்கியம்...” என்று திருத்தக் கொண்டான் கோட்டைத் தலைவன்.
“மூன்றா!”
“ஆம், நானே இளையபல்லவர் பிரசித்தியைக் கேட்டு அவரைப் பார்க்க விரும்பினேன். அவராக என்னைத் தேடி வந்தது மூன்றாவது பாக்கியமல்லவா?” இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாத இளையபல்லவனை நோக்கிய கோட்டைத் தலைவன் தன் கைகளைக் கோத்து மடியில் வைத்துக்கொண்டு, “நமக்குள் முன்பே மறைமுகத் தொடர்பிருப்பதும் என் பாக்கியத்தை அதிகப்படுத்துகின்றது.” என்று சொன்னான்.
அவன் எதைக் குறிக்கிறானென்பதைப் புரிந்து கொண்ட இளையபல்லவன், “ஆம். ஒருவிதத் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது” என்றான்.
“என் சகோதரனுக்குத் தாங்கள் செய்த உதவிக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன், “ என்றான் கோட்டைத் தலைவன். அவன் குணவர்மனைக் குறிக்கிறா ட ஹெ னென்பதைச் சந்தேகமறத் தெரிந்துகொண்டாலும் இருவரின் முக ஜாடையிலிருந்து அவர்களுக்குள் நெருங்கிய உறவு உண்டு என்பதை அறிந்திருந்தாலும், அவர்கள் எப்படிச் சகோதரர்களாக முடியும் என்பதை எண்ணிச் சற்று சிந்தனையில் அழ்ந்தான்.
யார் எண்ணத்தையும் ஊடுருவிப் பார்க்கும் திறனுள்ள கோட்டைத் தலைவனுக்கு இளையபல்லவன் இதயத்தில் எழுந்த சந்தேகமும் புரிந்திருக்க வேண்டும். ஆகவே அவன் சொன்னான் “குணவர்மர் என் சொந்தச் சகோதரர் அல்ல. ஒன்றுவிட்ட சகோதரர்தான். இருப் பினும், அவர் சொந்தச் சகோதரரான ஸ்ரீவிஜய சாம்ராஜ் யாதிபதி ஜெயவர்மருக்கும் அவருக்குமுள்ள சாயலைவிட, எனக்கும் குணவர்மருக்குமுள்ள சாயலில் அதிக ஒற்றுமையிருக்கும். ஆகவே நீங்கள் ஆரம்பத்தில் என்னைக் கண்டு திடுக்கிட்டதில் அச்சரியமில்லை.
“கோட்டைத்தலைவன், தான் அக்ஷ்யமுனையில் கால் வைத்த சில விநாடிகளுக்குள்ளேயே தன்னைப் பற்றிய ஜாதகம் அத்தனையும் கணித்துவிட்டதைக் கண்டு மீண்டும் வியப்பெய்தி உணர்ச்சிகளை அடக்க முடியாத நிலையை எய்திவிட்ட இளையபல்லவன் வியப்பின் குறி முகமெங்கும் படர, கோட்டைத்தலைவனை நோக்கி, “உங்களுக்குச் சோதிடம் தெரியுமா?” என்று வினவினான்.
“தெரியாது.” அடக்கத்துடன் வந்தது கோட்டைத் தலைவனின் பதில்.
“மனோதத்துவ சாத்திரம்?”
“அது என்னவென்பதே எனக்குத் தெரியாது.
நான் எதையும் அதிகமாகப் படித்ததில்லை.
“உங்களுக்குப் படிப்பு அவசியமில்லை.
“ஏன்?”
“சிலருடைய அறிவின் பலன் சாத்திரங்கள்.
மற்றவர் களுக்குச் சாத்திரங்கள் அறிவைப் புகட்டுகின்றன. படிக்காமல் இயற்கையிலேயே சாத்திரக் கல்வியின் பயனைப் பெறுபவர்களும் உண்டு.
“அப்படி. நான் பலன் பெற்றவனுமில்லை. என்னை வீணாகப் புகழ வேண்டாம். நான் சொன்ன விஷயங் களைப் பற்றி வியப்படையவும் வேண்டாம்.” என்று கூறிய கோட்டைத் தலைவன், இளையபல்லவனை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு, மிக நிதானமான குரலில் மேலும் சொன்னான் “இதில் ஊகத்துக்கோ கூரிய அறிவுக்கோ அவசியமில்லை. ஸ்ரீவிஜயத்தின் மன்னர் தமது சகோ தரனின் நன்மையில் கருத்துள்ளவர் என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. ஆகவே குண வர்மர் பாலூர்ப் பெருந்துறையில் கால் வைத்த நாள் முதலாக நடக்கும் விஷயங்ளைக் கவனிக்க ஜெயவர்மர் ஏற்பாடு செய்ததில் ஆச்சரியமில்லையல்லவா தவிர, தென் கலிங்கத்து மன்னன் பீமன் எங்கள் சக்கரவர்த்தியின் நண்பர். ஆகவே ஸ்ரீவிஜயம் வரும் வர்த்தகக் கப்பல்களில் கலிங்கத்தின் முத்திரை ஓலைகள் அடிக்கடி வருகின்றன. நீங்கள் குணவர்மரையும் இளவரசியையும் தப்புவித்த செய்திகள், பாலூர்ப் பெருந்துறை நீதி மண்டபத்திலும் கடற்கரையிலும் நடந்த விந்தைகள் அனைத்தும் இங்கு தெரியும். ஸ்ரீவிஐயத்தின் மக்கள் உங்களையும் அநபாயரை யும் பற்றிக் கதை கதையாகப் பேசுகிறார்கள். பிரசித்தி நல்லதுதான், சில சமயங்களில் அதில் ஆபத்தும் கலந்திருக்கிறது...
“இப்படி விஷயங்களைச் சர்வசாதாரணமாக விளக்கிய கோட்டைத் தலைவனைச் இல விநாடிகள் நோக்கிய இளையபல்லவன் தன் ஆசனத்தில் நன்றாகச் சாய்ந்துகொண்டான். “என்னைப் பற்றித் தங்களுக்கு இன்னும் என்ன தெரியும்?” என்று வினவினான்.
“முதலில் நீங்கள் பாலூர்ப் பெருந்துறை கடற்கரைப் போரில் மாண்டுவிட்டதாகச் செய்து கிடைத்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு யாரோ ஓர் இளையபல்லவன் அகூதாவின் உப தலைவனாயிருப்பதாகவும், கடற்போரில் குருவான அகூதாவையே மிஞ்சியவனென்றும் கேள்விப் பட்டோம். பிறகு ஊகம் பிரமாதமா? இரண்டும் இரண்டும் நான்காகி விட்டது. அகூதாவின் உப தலைவர் என்னைப் பார்க்க விரும்புவதாகக் காவலர் தலைவன் சொன்னான். வந்திருப்பது யாரென்று தெரிந்தது. அரச வம்சத்தில் சேர்ந்த ஒருவரை சாதாரணமாக வரவேற்கக் கூடாதென்று உங்களை என் அந்தரங்க அறைக்கே வரவழைத்தேன். இதற்கு முன்பு இங்கு வந்திருப்பவர்கள் வெகு சிலர்தான்...“என்று கோட்டைத் தலைவன் பேச்சைச் சட்டென்று நிறுத்தினான்.
“அப்படியா?” இளையபல்லவன் குரலில் சந்தேகம் தொனித்தது.
“அந்தச் சிலரும் துர்ப்பாக்கியம் செய்தவர்கள்,” என்றான் துயரத்துடன் கோட்டைத் தலைவன்.
“ஏன்?” இளையபல்லவன் குரலில் மேலும் சந்தேகம் தொனித்தது.
“இங்கு வந்தபின் அவர்கள் காணப்படவில்லை.
“அப்படியா?”
“ஏதோ விபத்துக்குள்ளானார்கள்.
“என்ன விபத்தோ?”
“என்ன விபத்தோ தெரியாது. அவர்கள் சடலங்கள் மட்டும் கோட்டைக்கு வெளியே கிடந்தன. சடலங்களுக்கு இருபது அடிகள் தள்ளித் தலைகள் கிடந்தன.
“பயங்கரம்!”
“பயங்கர விளைவுகள் இங்கு அதிகமில்லை. எப்பொழுதாவது ஒருமூறை நடக்கும். அந்தச் சிலரும் தங்களைப் போலவே கடற்போரில் பிரசித்தி பெற்றவர்கள்.
“அப்படியா?”
ஆம்.
“பிரசித்தியில் அத்தனை ஆபத்தா?”
“ஆம் இளையபல்லவரே! சந்தேகமிருந்தால் திரும்பிப் பாருங்கள்.” என்ற கோட்டைத் தலைவன் இதழ்களில் பயங்கரப் புன்னகை அரும்பியது. இளைய பல்லவன் திரும்பி நோக்கினான். பின்புறத்தில் உருவிய வாள்களை ஏந்திய இரு வீரர்கள் நின்றிருந்தார்கள்.